மாற்கு 3:1-21

மாற்கு 3:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குள் சென்றார். அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். சிலர் இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் அவனைக் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு சுருங்கிய கையுடையவனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளிலே மோசேயின் சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது: நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது கொல்லுவதா?” என்று கேட்டார். அவர்களோ, ஒன்றும் பேசாமல் இருந்தார்கள். அவர்களுடைய பிடிவாத இருதயத்தின் நிமித்தம் வருந்தி, சுற்றியிருந்த அவர்களை இயேசு கோபத்துடன் பார்த்து அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான், அது முற்றிலுமாக குணமடைந்தது. அப்பொழுது பரிசேயர்கள் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி, ஏரோதியர்களுடனே சதி செய்தார்கள். இயேசு தம்முடைய சீடர்களுடனே புறப்பட்டு, கடற்கரைக்குச் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். இயேசு செய்தவற்றை எல்லாம் கேள்விப்பட்டு, அநேக மக்கள் யூதேயா, எருசலேம், இதுமேயா ஆகிய இடங்களிலிருந்தும், யோர்தான் ஆற்றுக்கு அப்பாலுள்ள பகுதியிலிருந்தும், தீரு, சீதோன் பட்டணங்களின் சுற்றுப்புறங்களிலிருந்தும், இயேசுவினிடத்திற்கு வந்தார்கள். மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்தபடியால், அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்கென்று ஒரு படகை ஆயத்தம்பண்ணும்படி, இயேசு தமது சீடருக்குச் சொன்னார். அநேகரை இயேசு குணமாக்கியபடியால், வியாதிப்பட்டிருந்தவர்கள் அவரைத் தொடுவதற்கு முன்னே நெருக்கிக் கொண்டுவந்தார்கள். தீய ஆவி பிடித்திருந்தவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவருக்கு முன்பாகக் கீழே விழுந்து, “நீர் இறைவனின் மகன்” என்று சத்தமிட்டார்கள். ஆனால் இயேசுவோ தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று தீய ஆவிகளுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். பின்பு இயேசு ஒரு மலையின்மேல் ஏறிப்போய், தாம் விரும்பியவர்களை தம்மிடம் வரும்படி அழைத்தார்; அவர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு பன்னிரண்டு பேரை நியமித்து, அவர்களை அப்போஸ்தலர் என அழைத்தார்; தம்முடனேகூட இருக்கும்படியாகவும், நற்செய்தியை அறிவிக்கும்படி தாம் அவர்களை அனுப்பும்படியாகவும், பிசாசுகளைத் துரத்தும் அதிகாரம் உடையவர்களாகவும் அவர்களை நியமித்தார். இயேசு நியமித்தப் பன்னிரண்டு பேரும் இவர்களே. அவர் பேதுரு எனப் பெயரிட்ட சீமோன், செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான் இவர்கள் இருவருக்கும் பொவனெர்கேஸ் என்று பெயரிட்டார், “இடிமுழக்கத்தின் மகன்கள்” என்பதே அதன் அர்த்தமாகும். அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத். பின்பு இயேசு, ஒரு வீட்டுக்குச் சென்றார்; மக்கள் மீண்டும் பெருங்கூட்டமாய் வந்ததினால், அவரும் அவருடைய சீடர்களும் சாப்பிடக்கூட இயலாதிருந்தார்கள். இயேசுவின் குடும்பத்தார் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொல்லி, அவரைப் பிடிக்கப் போனார்கள்.

மாற்கு 3:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான். அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி; அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள். அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது. உடனே பரிசேயர்கள் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யவேண்டும் என்று, அவருக்கு எதிராக ஏரோதியர்களோடு ஆலோசனைபண்ணினார்கள். இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குப் போனார். கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள். அதோடு தீரு சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்தார்கள். அவர் அநேகரைச் சுகமாக்கினார். நோயாளிகளெல்லோரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டும் என்று அவரை நெருங்கிவந்தார்கள். மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காமல் இருப்பதற்காக, தமக்கு ஒரு படகை ஆயத்தம் பண்ணவேண்டும் என்று, தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். அசுத்தஆவிகளும் இயேசுவைப் பார்த்தபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்கு விருப்பமானவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடு இருக்கவும், பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரென்றால், சீமோன், இவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார். செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. பின்பு வீட்டிற்குப் போனார்கள்; அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது. அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.

மாற்கு 3:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுமுறையும் ஜெப ஆலயத்திற்குள் இயேசு நுழைந்தார். அங்கே சூம்பின கையை உடைய ஒரு மனிதன் இருந்தான். இயேசு தவறாக ஏதேனும் செய்யும் பட்சத்தில் அவரைக் குற்றம் சாட்டலாம் என்று சில யூதர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். ஓய்வு நாளில் அவனைக் குணமாக்குவாரா என்று பார்க்கக் காத்திருந்தனர். இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார். பிறகு இயேசு மக்களிடம், “ஓய்வு நாளில் எது செய்வது சரியாக இருக்கும்? நன்மை செய்வதா, தீமை செய்வதா? ஒரு உயிரைக் காப்பாற்றுவது சரியா? அழிப்பது சரியா?” என்று கேட்டார். மக்கள் பதிலொன்றும் சொல்லவில்லை. இயேசு மக்களைப் பார்த்தார். அவருக்கோ கோபம் வந்தது. அவர்கள் கடின மனம் உடையவர்களாய் இருந்ததால் இயேசுவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இயேசு அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் இயேசுவிடம் தன் கையை நீட்டினான். அது குணமாகியது. பிறகு பரிசேயர்கள் அந்த இடத்தை விட்டுப் போய் ஏரோதியரோடு கூடக் கலந்து இயேசுவைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர். தனது சீஷர்களோடு இயேசு ஏரிப்பக்கம் சென்றார். கலிலேயா மக்களில் பலர் அவரைப் பின் தொடர்ந்தனர். பிறகு யூதேயாவில் இருந்தும், எருசலேமிலிருந்தும், இதுமேயாவில் இருந்தும், யோர்தானுக்கு அக்கரையில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர். அத்துடன் தீரு, சீதோன் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் இயேசு செய்த அற்புதங்களை அறிந்திருந்தனர். ஆகவேதான் அவர்கள் வந்தார்கள். இயேசு பலரையும் பார்த்தார். அவர் தன் சீஷர்களிடம் ஒரு சிறிய படகு கொண்டுவந்து அதனை அவருக்குத் தயார் செய்யும்படிக் கேட்டுக்கொண்டார். மக்கள் தம்மை நெருக்கித் தள்ளாதபடிக்கு அப்படகில் ஏறிக்கொண்டார். இயேசு ஏற்கெனவே பலரைக் குணமாக்கி இருந்தார். ஆகவே ஏராளமான நோயுற்ற மக்கள் நெருக்கிக்கொண்டு வந்து அவரைத் தொட முயன்றார்கள். சிலர் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தனர். ஆவிகள் இயேசுவைக் கண்டதும் அவருக்கு முன் குனிந்து, “நீர் தான் தேவனுடைய குமாரன்” என்று உரக்கச் சத்தமிட்டன. ஆனால் இயேசு, தாம் யார் என்பதை மக்களுக்குக் கூறாதிருக்கும்படி அவற்றிற்கு உறுதியாகக் கட்டளையிட்டார். பிறகு, இயேசு குன்றின்மீது ஏறினார். அவர் சிலரை தன்னுடன் வருமாறு சொன்னார். இந்த மனிதரே அவருக்குத் தேவையானவர்களாய் இருந்தனர். அவர்கள் இயேசுவிடம் சென்றனர். அவர்களில் பன்னிரண்டு பேரை இயேசு தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவர்களை அப்போஸ்தலர் என்று அழைத்தார். அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். அவர்களைப் பல இடங்களுக்கு அனுப்பி பிரசங்கம் செய்யும்படி விரும்பினார். அத்துடன் பிசாசுகளை விரட்டுவதற்கான அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவும் இயேசு விரும்பினார். அவர் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு பேரின் பெயர்களும் பின்வருமாறு: சீமோன், இயேசு இவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார். யாக்கோபு, யோவான் இவர்கள் செபெதேயுவின் குமாரர்கள். (இயேசு இவர்களுக்கு பொவனெர்கேஸ் என்று பெயர் வைத்தார். இதற்கு “இடி முழக்கத்தின் மக்கள்” என்று பொருள்) அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலோமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனான யாக்கோபு, ததேயு, கானானியனான சீமோன், யூதா ஸ்காரியோத். இந்த யூதாஸ்தான் இயேசுவை அவரது பகைவர்களிடம் காட்டிக்கொடுத்தவன். பிறகு, இயேசு வீட்டிற்குச் சென்றார். ஆனால் மறுபடியும் அங்கு மக்கள் கூடினர். இயேசுவும் அவரது சீஷர்களும் உணவு உட்கொள்ள முடியாதபடி மக்கள் கூடினர். இயேசுவின் குடும்பத்தார் இவற்றைப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டனர். அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரது குடும்பத்தார் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினர்.

மாற்கு 3:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி; அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள். இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, கடலோரத்துக்குப் போனார். கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள். அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள். ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்கமக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார். அந்திரேயா, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள். அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.