மாற்கு 2:23-28

மாற்கு 2:23-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள். பரிசேயர்கள் இயேசுவிடம், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும், பசியாயிருந்தபோது என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? அபியத்தார் பிரதான ஆசாரியனாக இருந்த நாட்களில், தாவீது இறைவனுடைய வீட்டிற்குள் போய், மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார். பின்பு இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளுக்காக மனிதன் அல்ல; மனிதனுக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது. அந்தப்படியே மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.

மாற்கு 2:23-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள். பரிசேயர்கள் அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது, அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் படித்தது இல்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் சாப்பிடக்கூடாத தேவ சமுகத்தின் அப்பங்களைத் தானும் சாப்பிட்டுத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது; எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.

மாற்கு 2:23-28 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர். அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார். மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.

மாற்கு 2:23-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள். பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது, அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்