மாற்கு 15:26-47

மாற்கு 15:26-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவருக்கு எதிராக சிலுவையில் குற்றச்சாட்டு இப்படியாக எழுதப்பட்டிருந்தது. யூதரின் அரசன். அவர்கள் இயேசுவுடன் இரண்டு கள்வர்களை, ஒருவனை வலதுபக்கத்திலும், மற்றவனை இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேதவசனம் இதன் மூலமாய் நிறைவேறிற்று. அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே, நீ சிலுவையிலிருந்து இறங்கிவந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்!” என்று பழித்துரைத்தார்கள். அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், ஒருவரோடொருவர் அவரைக்குறித்து ஏளனமாய் பேசினார்கள். அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! இஸ்ரயேலின் அரசனான இந்த கிறிஸ்து, இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது அதைக்கண்டு, நாங்கள் விசுவாசிப்போம்” என்றார்கள். இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்டவர்களுங்கூட அவரை ஏளனம் செய்தார்கள். மத்தியான வேளையில், பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. மாலை மூன்றுமணியானபோது, இயேசு உரத்த குரலில், “ஏலோயீ, ஏலோயீ, லாமா சபக்தானி?” என்று அதிக சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும். அருகே நின்றவர்களில் சிலர், இதைக் கேட்டபோது, “கேளுங்கள், இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள். அப்பொழுது ஒருவன் ஓடிப்போய், கடற்காளானை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு தடியில் கட்டி, அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன், “இப்பொழுது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகிறானோ என்று பார்ப்போம்” என்றான். அப்பொழுது இயேசு சத்தமிட்டுக் கதறி, தமது கடைசி மூச்சைவிட்டார். அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்றுகொண்டிருந்த நூற்றுக்குத் தலைவன் அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டான். அப்பொழுது அவன், “நிச்சயமாகவே இந்த மனிதன் இறைவனுடைய மகனே தான்” என்றான். சில பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபு, யோசே என்பவர்களின் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள். இந்தப் பெண்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள். அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேகம் பெண்களுங்கூட அங்கிருந்தார்கள். அந்த நாள் ஓய்வுநாளுக்கு முந்தின நாளான, ஆயத்த நாளாயிருந்தது. மாலை வேளையானபோது, அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும், நீதிமன்றத்தின் முக்கிய உறுப்பினருமான யோசேப்பு துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். இவன் இறைவனின் அரசுக்காகக் காத்துக்கொண்டிருந்த ஒருவன். இயேசு அதற்குள்ளாகவே இறந்துவிட்டார் எனக்கேட்ட பிலாத்து வியப்படைந்தான். அவன் நூற்றுக்குத் தலைவனை கூப்பிட்டு, “இயேசு இறந்து விட்டாரா?” என்று கேட்டான். நூற்றுக்குத் தலைவனிடமிருந்து அதை உறுதி செய்துகொண்ட பின்பு, அவன் இயேசுவின் உடலை யோசேப்பிடம் கொடுத்தான். எனவே யோசேப்பு மென்பட்டுத் துணியைக் கொண்டுவந்து, அவரது உடலைக் கீழே இறக்கி, அதை அந்தத் துணியினால் சுற்றினான். பின்பு, அதை கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்து, அதன் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி மூடினான். மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும், இயேசு எங்கு கிடத்தப்பட்டார் என்று பார்த்தார்கள்.

மாற்கு 15:26-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள். இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள். அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது. அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே. உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை. நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள். நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது. மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம். அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான். இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான். சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள். ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால், மாலைநேரத்தில். மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான். நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான். அவன்போய், மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் போர்வையிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான். அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.

மாற்கு 15:26-47 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர். அவர்கள் இயேசுவின் இருபுறத்திலும் இரண்டு கள்ளர்களைச் சிலுவையில் அறைந்தனர். அவ்வழியாய்ப் போகும் மக்கள் இயேசுவை அவமரியாதை செய்து பேசினார்கள். அவர்கள் தங்கள் தலையை உலுக்கி “ஆலயத்தை இடித்துப் போட்டுவிட்டு மூன்று நாட்களுக்குள் கட்டிவிடுவேன் என்றாயே. ஆகவே நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள். சிலுவையில் இருந்து இறங்கி வா” என்றனர். வேதபாரகர்களும் தலைமை ஆசாரியர்களும் அங்கே அவர்களோடு இருந்தனர். அவர்களும் இயேசுவை மற்ற மக்கள் செய்த விதத்திலேயே கேலி செய்தனர். “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான். ஆனால் தன்னைத்தான் காப்பாற்ற முடியவில்லை. இவன் உண்மையிலேயே கிறிஸ்து என்றால், யூதர்களின் மன்னன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாமே. நாங்கள் அதைப் பார்த்தால் இவனை நம்புவோமே” என்றனர். இயேசுவின் இருபுறமும் அறையப்பட்ட கள்ளர்களும் இயேசுவைப்பற்றி அவதூறாகப் பேசினர். மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ ஏலி! ஏலி! லாமா சபக்தானி ” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று பொருள். அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் இதனைக் கேட்டனர். அவர்கள், “கவனியுங்கள். அவன் எலியாவை கூப்பிடுகிறான்” என்றனர். ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான். இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார். இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்தது. அக்கிழிசல் மேற்புறம் தொடங்கிக் கீழேவரை வந்தது. இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார். சில பெண்கள் சிலுவைக்குச் சற்றுத் தள்ளி நின்று இதனைக் கவனித்துக்கொண்டு நின்றனர். அவர்கள், மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாரான மரியாள் ஆகியோராவர். (யாக்கோபு மரியாளின் இளைய குமாரன்.) இயேசுவுடனே கூட எருசலேமிற்கு வந்திருந்த ஏனைய பல பெண்களும் அவர்களோடு இருந்தார்கள். இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளுக்கு முந்தின நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காகக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவிடம் துணிந்துபோய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். ஏற்கெனவே இயேசு இறந்து போனதைக் கேள்விப்பட்டு பிலாத்து ஆச்சரியப்பட்டான். இயேசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்தான். இயேசு இதற்குள்ளே இறந்தது நிச்சயமா என்று அவனிடம் விசாரித்தான். அந்த அதிகாரி இயேசு இறந்துபோனதை ஒப்புக்கொண்டான். எனவே இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்ல யோசேப்புக்கு பிலாத்து அனுமதி அளித்தான். யோசேப்பு மெல்லிய துணியை வாங்கி வந்தான். சிலுவையில் இருந்து இயேசுவின் சரீரத்தை இறக்கி அதனைத் துணியால் சுற்றினான். பிறகு அச்சரீரத்தைக் கொண்டு போய் பாறையில் வெட்டப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறை வாசலை ஒரு பாறாங்கல்லால் மூடிவிட்டான். இயேசு வைக்கப்பட்ட கல்லறையை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயான மரியாளும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மாற்கு 15:26-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள். அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை. நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள். ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்கவருவானோ பார்ப்போம் என்றான். இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள். ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது, கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான். நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான். அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.