மாற்கு 15:16-23
மாற்கு 15:16-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
மாற்கு 15:16-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
போர்வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டுசென்று, மற்ற எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள். அவர்கள் இயேசுவுக்கு கருஞ்சிவப்பு உடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள். பின்பு அவர்கள், “யூதருடைய அரசனே வாழ்க!” என்று சொல்லி இயேசுவை ஏளனம் செய்தார்கள். அவர்கள் ஒரு தடியினால் திரும்பத்திரும்ப அவரைத் தலையில் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்காற்படியிட்டு, அவரை வணங்கினார்கள். இவ்வாறு அவரை ஏளனம் செய்தபின்பு, அந்தக் கருஞ்சிவப்பு உடையைக் கழற்றிவிட்டு, அவரது உடையையே அவருக்கு உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். போகும் வழியில், சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதன் நாட்டுப் புறத்திலிருந்து வந்து, அவனும் அவ்வழியாய்ப் போய்க்கொண்டிருந்தான். இந்த சீமோன் அலெக்சாந்தருக்கும், ரூபுவுக்கும் தகப்பன். அவனைச் சிலுவையைத் தூக்கிச்செல்லும்படி படைவீரர் வற்புறுத்தினார்கள். பின்பு அவர்கள் இயேசுவை கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும். அப்பொழுது அவர்கள், வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தை, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் இயேசுவோ அதைக் குடிக்க மறுத்தார்.
மாற்கு 15:16-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து, சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
மாற்கு 15:16-23 பரிசுத்த பைபிள் (TAERV)
பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர். அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர். பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். முழங்காலிட்டு அவரை வணங்குவதைப்போல நடித்துக் கிண்டல் செய்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு சிவப்பு மேலங்கியைக் கழற்றி விட்டு அவரது சொந்த ஆடையை அணிவித்தனர். அவரைச் சிலுவையில் அறைவதற்காக அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்தனர். சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். இவன் அலெக்சாண்டர், மற்றும் ரூபஸ் ஆகியோரின் தந்தை. அவன் வயலில் இருந்து நகரத்திற்குள் வந்தான். வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர். “கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்) அங்கே இயேசுவுக்குத் திராட்சை இரசத்தைக் கொடுக்க வீரர்கள் முயன்றனர். அந்த இரசத்தில் வெள்ளைப்போளம் என்னும் போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது. ஆனால் இயேசு அதைக் குடிக்க மறுத்து விட்டார்.