மாற்கு 15:1-26

மாற்கு 15:1-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதிகாலையிலேயே தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், முழு ஆலோசனைச் சங்கத்தினரும் சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள். பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார். தலைமை ஆசாரியர்கள், அநேக குற்றச்சாட்டுகளை அவர்மேல் சுமத்தினார்கள். அப்பொழுது பிலாத்து மீண்டும் இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? பார், எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் உன்மேல் சுமத்துகிறார்கள்” என்று கேட்டான். இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான். பண்டிகைக் காலத்தில், மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது. அந்நாட்களில் சில கிளர்ச்சிக்காரர்களுடன், பரபாஸ் என்னும் பெயருடைய ஒருவனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். இவன் கிளர்ச்சி ஏற்படுத்தி கொலையும் செய்திருந்தவன். மக்கள் கூடிவந்து, பிலாத்துவிடம் வழக்கமாக செய்துவந்ததுபோல், இம்முறையும் தங்களுக்கு ஒருவனை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து, “யூதருடைய அரசனை நான் விடுதலையாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். தலைமை ஆசாரியர்கள் பொறாமையின் காரணமாக இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் தலைமை ஆசாரியர்களோ, பரபாஸையே பிலாத்து விடுதலை செய்யவேண்டும் என்று அவனைக் கேட்கச்சொல்லி, கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள். எனவே பிலாத்து அவர்களிடம், “அப்படியானால், நீங்கள் யூதருடைய அரசன் என்று சொல்லுகிற இவனுக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். “ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள். பிலாத்து கூடியிருந்த மக்களை திருப்திப்படுத்த விரும்பி, பரபாஸை அவர்களுக்கு விடுதலை செய்தான். இயேசுவையோ சவுக்கினால் அடித்து சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான். போர்வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டுசென்று, மற்ற எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள். அவர்கள் இயேசுவுக்கு கருஞ்சிவப்பு உடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள். பின்பு அவர்கள், “யூதருடைய அரசனே வாழ்க!” என்று சொல்லி இயேசுவை ஏளனம் செய்தார்கள். அவர்கள் ஒரு தடியினால் திரும்பத்திரும்ப அவரைத் தலையில் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்காற்படியிட்டு, அவரை வணங்கினார்கள். இவ்வாறு அவரை ஏளனம் செய்தபின்பு, அந்தக் கருஞ்சிவப்பு உடையைக் கழற்றிவிட்டு, அவரது உடையையே அவருக்கு உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். போகும் வழியில், சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதன் நாட்டுப் புறத்திலிருந்து வந்து, அவனும் அவ்வழியாய்ப் போய்க்கொண்டிருந்தான். இந்த சீமோன் அலெக்சாந்தருக்கும், ரூபுவுக்கும் தகப்பன். அவனைச் சிலுவையைத் தூக்கிச்செல்லும்படி படைவீரர் வற்புறுத்தினார்கள். பின்பு அவர்கள் இயேசுவை கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும். அப்பொழுது அவர்கள், வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தை, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் இயேசுவோ அதைக் குடிக்க மறுத்தார். பின்பு அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். உடையில் எதை யார் எடுத்துக்கொள்வது என்று தீர்மானிப்பதற்காகச் சீட்டுப்போட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது, காலை ஒன்பது மணியாய் இருந்தது. அவருக்கு எதிராக சிலுவையில் குற்றச்சாட்டு இப்படியாக எழுதப்பட்டிருந்தது. யூதரின் அரசன்.

மாற்கு 15:1-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள். பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது. கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான். மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள். பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து. அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான். பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள். அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து, சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள். அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள். அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள்.

மாற்கு 15:1-26 பரிசுத்த பைபிள் (TAERV)

அதிகாலையில் தலைமை ஆசாரியர்கள், யூதத் தலைவர்கள், வேதபாரகர்கள் அனைவரும் கூடி இயேசுவை என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தனர். அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர். அவர்கள் இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்தனர். “நீ யூதர்களின் மன்னனா?” என்று பிலாத்து கேட்டான். அதற்கு இயேசு, “ஆமாம். நீர் சொல்வது சரிதான்” என்றார். தலைமை ஆசாரியர் இயேசுவின்மீது பல குற்றங்களைச் சுமத்தினர். பிலாத்து இயேசுவிடம், “இம்மக்கள் உனக்கு எதிராகக் குற்றங்களை சுமத்துவதை நீ அறிவாய். எனினும் நீ ஏன் எந்தப் பதிலும் சொல்லவில்லை?” என்று மீண்டும் கேட்டான். ஆனால் இயேசு இதுவரை எந்தப் பதிலையும் கூற வில்லை. இதைப்பற்றி பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான். ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது சிறையில் இருந்து ஒருவனை ஆளுநர் விடுதலை செய்யும் அதிகாரம் பெற்றிருந்தார். மக்கள் விரும்புகின்றவனையே அவர் விடுதலை செய்ய முடியும். அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில் கலகக்காரர்களோடு ஒரு கலவரத்தில் கொலை குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். வழக்கத்தின்படி ஒருவனை விடுதலை செய்யும்படி மக்கள் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர். மக்களிடம் பிலாத்து, “யூதர்களின் மன்னனை விடுதலைசெய்ய விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். பொறாமை காரணமாகத்தான் தலைமை ஆசாரியர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர் என்பதைப் பிலாத்து அறிந்திருந்தான். தலைமை ஆசாரியர்கள் இயேசுவை விடுதலை செய்யவேண்டாம் என்றும் பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்றும் கேட்க மக்களைத் தூண்டிவிட்டனர். “அப்படியானால் யூதர்களின் மன்னனாகிய இந்த மனிதனை நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று பிலாத்து மக்களிடம் கேட்டான். “அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று அவர்கள் மீண்டும் சத்தமிட்டனர். “ஏன்? இவன் என்ன பாவம் செய்தான்” என்று பிலாத்து கேட்டான். ஆனால் மக்கள் மேலும், மேலும் சப்தமிட்டனர். “அவனைச் சிலுவையில் கொல்லுங்கள்” என்றனர். மக்களைப் பிரியப்படுத்த, பிலாத்து விரும்பினான். எனவே பரபாசை விடுதலை செய்தான். இயேசுவைச் சவுக்கால் அடிக்கும்படி வீரர்களிடம் சொன்னான். பின்னர் அவரைச் சிலுவையில் அறையும்படி வீரர்களிடம் ஒப்படைத்தான். பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர். அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர். பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். முழங்காலிட்டு அவரை வணங்குவதைப்போல நடித்துக் கிண்டல் செய்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு சிவப்பு மேலங்கியைக் கழற்றி விட்டு அவரது சொந்த ஆடையை அணிவித்தனர். அவரைச் சிலுவையில் அறைவதற்காக அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்தனர். சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். இவன் அலெக்சாண்டர், மற்றும் ரூபஸ் ஆகியோரின் தந்தை. அவன் வயலில் இருந்து நகரத்திற்குள் வந்தான். வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர். “கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்) அங்கே இயேசுவுக்குத் திராட்சை இரசத்தைக் கொடுக்க வீரர்கள் முயன்றனர். அந்த இரசத்தில் வெள்ளைப்போளம் என்னும் போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது. ஆனால் இயேசு அதைக் குடிக்க மறுத்து விட்டார். வீரர்கள் இயேசுவைச் சிலுவை மேல் ஆணியால் அடித்தனர். இயேசுவின் ஆடையை அவர்கள் பங்கு போட்டுக்கொண்டார்கள். எந்த ஆடையை யார் எடுத்துக்கொள்வது என்பதுபற்றி அவர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி. அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர்.

மாற்கு 15:1-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக்கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது. கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான். ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள். பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து, அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான். பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள். பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள். அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.