மாற்கு 14:66-72

மாற்கு 14:66-72 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவ்வேளையில் பேதுரு கீழே அந்த முற்றத்திலேயே இருந்தான். அப்பொழுது பிரதான ஆசாரியனின் வேலைக்காரிகளில் ஒருத்தி அவ்வழியாய் வந்தாள். அவள் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள். அவனை உற்றுப்பார்த்து, “நீயும் நாசரேத் ஊரானாகிய அந்த இயேசுவோடுகூட இருந்தவன்” என்றாள். ஆனால் அவனோ, “எனக்குத் தெரியாது, நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு விளங்கவும் இல்லை” என்று மறுதலித்தான். அவன் இவ்வாறு சொல்லிவிட்டு, முற்றத்தின் வாசல் பக்கமாய் போனான். அப்பொழுது சேவல் கூவிற்று. அந்த வேலைக்காரி அவனை அங்கேயும் கண்டு, அங்கே சுற்றி இருந்தவர்களைப் பார்த்து, “இவனும் அவர்களில் ஒருவன்” என்றாள். பேதுரு மீண்டும் அதை மறுதலித்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவைப் பார்த்து, “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். ஏனென்றால் நீ ஒரு கலிலேயன்” என்றார்கள். அப்பொழுது பேதுரு, “நீங்கள் சொல்கிற அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் இரண்டாம் முறையாக கூவியது. அப்பொழுது, “சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தான். அவன் மனம்வருந்தி அழுதான்.

மாற்கு 14:66-72 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து, குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள். அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது. வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். அவன் மீண்டும் மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு மீண்டும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: உண்மையாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான்.

மாற்கு 14:66-72 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது பேதுரு வீட்டின் முற்றத்தில் இருந்தான். அம்மாளிகையில் உள்ள வேலைக்காரப் பெண் பேதுருவிடம் வந்தாள். பேதுரு நெருப்பு காய்ந்துகொண்டிருந்தான். அவள் பேதுருவை மிகவும் நெருக்கத்தில் பார்த்தாள். “நாசரேத் ஊரானாகிய இயேசுவோடு நீயும் இருந்தாய் அல்லவா?” என்று கேட்டாள் அவள். ஆனால் பேதுருவோ “நான் இயேசுவோடு இருந்ததே இல்லை” என்று மறுத்தான். மேலும், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குத் தெரியவுமில்லை, புரியவுமில்லை” என்று கூறினான். பிறகு பேதுரு விலகி வெளியே வாசல் மண்டபத்துக்குச் சென்றான். மீண்டும் அந்த வேலைக்காரப் பெண் பேதுருவைக் கவனித்தாள். அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் அவள், “இயேசுவின் சீஷர்களுள் இவனும் ஒருவன்” என்றாள். பேதுரு, மீண்டும் அவள் சொல்வது உண்மையில்லை என்று கூறினான். கொஞ்ச நேரம் சென்றதும், பேதுரு அருகில் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பேதுருவிடம், “இயேசுவின் சீஷர்களுள் நீயும் ஒருவன். நீயும் கூட கலிலேயாவில் இருந்து வருகிறவன்” என்றனர். பேதுரு சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கி, “நான் தேவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீங்கள் பேசுகிற அந்த மனிதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான். பேதுரு இவ்வாறு சொன்னதும் சேவலானது இரண்டாம் முறையாகக் கூவியது. இயேசு சொல்லி இருந்ததைப் பேதுரு நினைத்துப் பார்த்தான். “இன்று இரவு சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னால் நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய்” என்று சொல்லி இருந்தார். இதனால் துயருற்று பேதுரு கதறியழுதான்.

மாற்கு 14:66-72 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து, குளிர்க்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள். அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று. வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவுகூர்ந்து, மிகவும் அழுதான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்