மாற்கு 14:1-52

மாற்கு 14:1-52 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பஸ்கா என்ற பண்டிகையும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகையும் வருவதற்கு, இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கைதுசெய்து, அவரைக் கொலைசெய்வதற்கு தந்திரமான ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், “பண்டிகை காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். பெத்தானியாவிலே, அவர் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கும்போது, ஒரு பெண் அங்கே வந்தாள்; அவள் நளதம் என்னும் விலையுயர்ந்த நறுமணத் தைலமுள்ள, வெள்ளைக்கல் குடுவையைக் கொண்டுவந்தாள். அவள் அதை உடைத்து, அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். அங்கிருந்தவர்களில் சிலர், “இந்த வாசனைத் தைலத்தை இவ்விதமாய் வீணாக்குவது ஏன்?” என்று கோபத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். “இதை ஒரு வருட சம்பளத்தைவிடக் கூடுதலான பணத்துக்கு விற்றிருக்கலாமே. அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று சொல்லி, அவர்கள் அவளை கடுமையாய் திட்டினார்கள். அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விடுங்கள். ஏன் அவளுக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்கள்? அவள் இந்தச் செயலை ஒரு சிறந்த நோக்கத்துடனேயே செய்தாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள்; விரும்புகிற போதெல்லாம், நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என்னை அடக்கம்பண்ணுவதற்கென, முன்னதாகவே ஆயத்தம் செய்யும்படி, அவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றினாள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய ஞாபகமாக சொல்லப்படும்” என்றார். அப்பொழுது பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து, தலைமை ஆசாரியர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படிப் போனான். அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்து, அவனுக்குப் பணம் தருவதென வாக்குறுதி கொடுத்தார்கள். எனவே யூதாஸ் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடுவது வழக்கமாயிருந்தது. எனவே, இயேசுவினுடைய சீடர்கள் அவரைப் பார்த்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அப்பொழுது இயேசு, தம்முடைய சீடர்களில் இருவரை அனுப்பி அவர்களிடம், “பட்டணத்திற்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிற ஒருவனைச் சந்திப்பீர்கள். அவனைப் பின்தொடர்ந்து போங்கள். அவன் போகிற வீட்டினுடைய சொந்தக்காரனிடம், ‘என்னுடைய விருந்தினருக்கான அறை எங்கே இருக்கிறது? அங்கு நானும், என்னுடைய சீடர்களும் பஸ்காவைச் சாப்பிடவேண்டும்’ என்று போதகர் கேட்கிறார் என அவனுக்குச் சொல்லுங்கள். அவன் உங்களுக்கு ஒரு பெரிய மேல்வீட்டு அறையைக் காண்பிப்பான். அது கம்பளங்கள் போடப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டதாய் இருக்கும். அங்கே நாம் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். சீடர்கள் புறப்பட்டு பட்டணத்துக்குள் போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருப்பதைக் கண்டார்கள். அப்படியே, அவர்கள் பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு அங்கு வந்து சேர்ந்தார். அவர்கள் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான். என்னோடு சாப்பிடுகிறவர்களில், ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். அவர்கள் துக்கமடைந்து, ஒருவர் பின் ஒருவராக அவரிடம், “நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்டார்கள். “என்னுடனே ஒரே கிண்ணத்தில் தொட்டுச் சாப்பிடுகிற பன்னிரண்டு சீடர்களில் ஒருவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான்” என இயேசு பதிலளித்தார். மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு “நலமாய் இருந்திருக்கும்” என்றார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்துச் சொன்னதாவது, “இதை எடுத்துச் சாப்பிடுங்கள்; இது என்னுடைய உடல்.” பின்பு இயேசு பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும், அந்தப் பாத்திரத்திலிருந்து குடித்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, இது அநேகருக்காகச் சிந்தப்படுகிறது. உண்மையாய் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் இறைவனுடைய அரசில் திராட்சைப்பழ இரசத்தைப் புதிதாகக் குடிக்கும் அந்த நாள்வரைக்கும், இனிமேல் நான் குடிக்கமாட்டேன்” என்றார். அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப்போவீர்கள், “ ‘மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன், அப்பொழுது ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று பரிசுத்த வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார். அதற்குப் பேதுரு அவரிடம், “எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும், நான் போகமாட்டேன்” என்றான். அப்பொழுது இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இன்று இரவே, சேவல் இரண்டுமுறை கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார். ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் சாகவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்” என்று வலியுறுத்திச் சொன்னான். மற்றெல்லோருங்கூட அவ்விதமாகவே சொன்னார்கள். அவர்கள் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார்கள். அங்கு இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, “நான் மன்றாடப்போகிறேன், அதுவரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார். இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்முடன் கூட்டிக்கொண்டு சென்றார். அவர் மிகவும் துயருற்று கலக்கமடையத் தொடங்கினார். “என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழிப்பாயிருங்கள்” என்றார். இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த், தரையில் விழுந்து மன்றாடினார். முடியுமானால், அந்த வேளை தம்மை விட்டுக் கடந்து போகட்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார். அவர் தொடர்ந்து, “அப்பா பிதாவே, எல்லாவற்றையும் செய்ய உம்மால் இயலும். இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு எடுத்துவிடும். ஆனால், என் சித்தத்தின்படியல்ல, உமது சித்தத்தின்படியே ஆகட்டும்” என்றார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவைப் பார்த்து, “சீமோனே, நீ நித்திரை செய்கிறாயோ? ஒருமணி நேரமாவது விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார். இயேசு மீண்டும் போய், அதேவிதமாகவே மன்றாடினார். இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. அவரிடம் என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இயேசு மூன்றாம் முறையும் திரும்பிவந்து, சீடர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? போதும்! வேளை வந்துவிட்டது. போதும்! மானிடமகனாகிய நான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். எழுந்திருங்கள், நாம் போவோம்! என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ வருகிறான்!” என்றார். இயேசு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு கூட்ட மக்கள் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும், யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே இயேசு; அவரைக் கைதுசெய்து, காவலுடன் கூட்டிச் செல்லுங்கள்” என்று சொல்லியிருந்தான். யூதாஸ் இயேசுவுக்கு அருகில் வந்து, “போதகரே!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். அப்பொழுது அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைக் கைது செய்தார்கள். அவ்வேளையில், அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரனை வெட்டினான்; அவனுடைய காது வெட்டுண்டது. இயேசு அவர்களைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்? ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு, உங்களோடு தானே இருந்தேன். அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆம், வேதவசனங்கள் நிறைவேற வேண்டுமே” என்றார். அப்பொழுது எல்லோரும், இயேசுவைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன், மென்பட்டு மேலுடையை உடுத்திக் கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது, அவன் தன்னுடைய மேலுடையை விட்டுவிட்டு, நிர்வாணமாய்த் தப்பி ஓடினான்.

மாற்கு 14:1-52 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள். ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்? இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன். இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள். இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான். அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற முதலாம் நாளில், அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்குபோய் ஆயத்தம்பண்ண விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான், அவன் பின்னே போங்கள்; அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான்; அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார். அவர்கள் பந்தி உட்கார்ந்து சாப்பிடும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: என்னோடு சாப்பிடுகிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள். அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி; மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ! அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நல்லதாக இருக்கும் என்றார். அவர்கள் சாப்பிடும்போது, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள். ஆனாலும் நான் உயிரோடு எழுந்தபின்பு, உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்குப் போவேன் என்றார். அதற்கு பேதுரு: உமதுநிமித்தம் எல்லோரும் இடறல் அடைந்தாலும், நான் இடறல் அடையமாட்டேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு அவன்: நான் உம்மோடு மரித்துப்போவதாக இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னான்; எல்லோரும் அப்படியே சொன்னார்கள். பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார். பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள். அவர் மூன்றாம்முறை வந்து: இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா? போதும், நேரம்வந்தது, இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போகலாம் என்றார். உடனே, அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனுடன் பிரதான ஆசாரியர்களும், வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான். இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார். அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான்.

மாற்கு 14:1-52 பரிசுத்த பைபிள் (TAERV)

புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது வேதபாரகரும், தலைமை ஆசாரியர்களும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர். “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர். இயேசு பெத்தானியாவில் இருந்தார். அவர் தொழுநோயாளியான சீமோனின் வீட்டில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஒரு பெண் வந்தாள். அப்பெண்ணிடம் அதிக விலை மதிப்புள்ள நளதம் என்னும் நறுமணத் தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடி இருந்தது. அவள் அந்த ஜாடியைத் திறந்து அந்நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றினாள். சில சீஷர்கள் இதனைக் கவனித்தனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு தங்களுக்குள் குற்றம் சாட்டினர். “நறுமணத் தைலத்தை ஏன் வீணாக்க வேண்டும்? ஓராண்டு செலவுக்குரிய பணத்துக்குச் சமமான மதிப்புள்ளதாயிற்றே இத்தைலம். அதனை விற்று அப்பணத்தை ஏழைகளுக்குச் செலவு செய்யலாமே” என்று கூறிக்கொண்டனர். அப்பெண்ணையும் அவர்கள் பலமாக விமர்சித்தனர். இயேசுவோ, “அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறீர்கள்? அவள் எனக்காக ஒரு நல்ல செயலைச் செய்தாள். ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நீங்கள் விரும்பும்போது எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களோடு இருக்கமாட்டேன். இந்தப் பெண்ணால் செய்ய முடிந்ததைத்தான் அவள் எனக்காகச் செய்திருக்கிறாள். நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு உதவியாக என் உடலில் தைலம் பூச முந்திக்கொண்டாள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இந்தப் பெண் செய்ததும் சொல்லப்படும். அப்போது மக்கள் இவளை நினைவில் இருத்திக்கொள்வார்கள்” என்றார். பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் பேசச் சென்றான். அந்த சீஷனின் பெயர் யூதாஸ் காரியோத். அவன் அவர்களிடம் இயேசுவை ஒப்படைக்க விரும்பினான். தலைமை ஆசாரியர்கள் இது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அதற்குரிய பணத்தை அவனுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆகையால் அவன் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். “நாங்கள் உமக்காகப் பஸ்கா விருந்து உண்ண எங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர். இயேசு நகரத்துக்குள் இரண்டு சீஷர்களை அனுப்பினார். “நகரத்துக்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்துகொண்டுவரும் ஒருவனைக் காண்பீர்கள். அவன் உங்களிடம் வருவான். அவனைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். அவன் ஒரு வீட்டுக்குச் செல்வான். அந்த வீட்டு எஜமானைப் பாருங்கள். ‘ஆண்டவரும், அவரது சீஷர்களும் பஸ்கா விருந்துண்ணும் அறை எது?’ என்று கேளுங்கள். அவன் மாடியில் உள்ள ஒரு பெரிய அறையைக் காட்டுவான். அந்த அறை உங்களுக்கு தயாராக இருக்கும். அங்கு விருந்து தயாராக்குங்கள்” என்றார். ஆகையால் சீஷர்கள் அவ்விடத்தை விட்டு நகரத்துக்குச் சென்றனர். இயேசு சொன்னபடி எல்லாக் காரியங்களும் நிறைவேறின. எனவே, சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர். மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார். அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இப்பொழுது என்னோடு உணவு உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார். இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர். இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான். மனித குமாரன் இறந்து போவார். வேதவாக்கியங்களில் எழுதியபடி எல்லாம் நடக்கும். எனினும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுவாரோ அந்த மனிதனுக்குக் கேடு வரும். அவன் பிறக்காமல் இருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்” என்றார். அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லி அவற்றைப் பங்கிட்டார். அவற்றைத் தம் சீஷர்களுக்கு கொடுத்தார். அவர், “இதனைப் புசியுங்கள். இது எனது சரீரம்” என்றார். பிறகு அவர் ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சீஷர்களுக்குக் கொடுத்தார். அவர்களனைவரும் அதனைக் குடித்தனர். பிறகு இயேசு, “இதுதான் எனது இரத்தம். தேவனிடமிருந்து மக்களுக்கு இது ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறது. இந்த இரத்தம் பலருக்காகச் சிந்தப்படுகிறது. உங்களுக்கு நான் உண்மையைக் கூறுகிறேன், தேவனுடைய இராஜ்யத்தில் நான் புதிய திராட்சை இரசத்தைக் குடிக்கும் நாள்வரை இனி இங்கு மறுபடியும் திராட்சை இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார். அவர்கள் பாடலைப் பாடினர். பிறகு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றனர். பின்னர் இயேசு தன் சீஷர்களிடம், “நீங்கள் உங்கள் விசுவாசத்தை இழந்துவிடுவீர்கள் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது: “‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன். ஆடுகள் சிதறி ஓடும்.’ ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார். பேதுரு, “மற்ற சீஷர்கள் வேண்டுமானால் தங்கள் விசுவாசத்தை இழந்து போகாலாம். ஆனால் நான் எப்பொழுதும் விசுவாசம் இழக்கமாட்டேன்” என்றான். இயேசுவோ, “நான் உண்மையைக் கூறுகிறேன். இன்று இரவே என்னைப்பற்றித் தெரியாது என்று கூறுவாய். அதுவும் சேவல் இரண்டு முறை கூவுவதற்குமுன் மூன்று முறை நீ என்னை மறுதலிப்பாய்” என்றார். ஆனால் பேதுருவோ “உங்களைத் தெரியாது என்று நான் நிச்சயமாகச் சொல்லமாட்டேன். நான் என் உயிரைக்கூட உம்மோடு விடுவேன்” என்றான். உறுதியாக எல்லாரும் அவ்வாறே சொன்னார்கள். இயேசுவும், அவரது சீஷர்களும் கெத்செமனே என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றனர். இயேசு “நான் பிரார்த்தனை செய்யும்போது எல்லாரும் இங்கே இருங்கள்” என்றார். இயேசு தன்னோடு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துச் சென்றார். அவர் மிகவும் வேதனைப்பட்டு, துன்பப்பட்டார். “என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. என் இதயம் துயரத்தால் உடைந்து போயிருக்கிறது. இங்கேயே காத்திருங்கள், விழித்திருங்கள்” என்றார். இயேசு அவர்களிடமிருந்து விலகிச் சிறிது தூரம் சென்றார். அவர் அங்கு தரையில் விழுந்து அந்த வேளை தம்மை விட்டு நீங்கிப் போகக்கூடுமானால் நீங்கட்டும் என பிரார்த்தனை செய்தார். “ பிதாவே! உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். துயரத்தின் பாத்திரத்தில் நான் அருந்தாதபடி செய்யுங்கள். ஆனாலும் நான் விரும்புகிறபடி இல்லாமல் உங்கள் விருப்பம் போல் எல்லாம் நடக்கட்டும்” என்றார். பிறகு இயேசு சீஷர்களிடம் வந்து, அவர்கள் தூங்குவதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “சீமோனே, ஏன் தூங்குகிறாய். எனக்காக ஒரு மணி நேரம் உன்னால் விழித்திருக்க முடியாதா? நீ சோதனைக்கு இடம் தாராதபடி விழித்திருந்து பிரார்த்தனை செய். உனது ஆத்துமா நல்லவற்றையே செய்ய விரும்புகிறது. ஆனால் உனது சரீரம் பலவீனமாக உள்ளது” என்றார். மீண்டும் இயேசு தனியே சென்று அதே வார்த்தைகளைச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார். பிறகு சீஷர்களிடம் திரும்பி வந்தார். மீண்டும் அவர்கள் தூங்குவதைப் பார்த்தார். அவர்களது கண்கள் மிகவும் சோர்ந்திருந்தன. இயேசுவிடம் என்ன சொல்லவேண்டும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். மூன்றாவது முறையாக இயேசு தனிப் பிரார்த்தனை செய்தபின் சீஷர்களிடம் திரும்பி வந்தார். அவர்களிடம், “நீங்கள் இன்னும் தூங்கிக்கொண்டும் இளைப்பாறிக்கொண்டுமிருக்கிறீர்கள், இதுபோதும். மனித குமாரன் பாவிகளின் கைகளில் ஒப்படைக்கப்படும் காலம் வந்துவிட்டது. எழும்புங்கள், நாம் போகவேண்டும். இதோ அவர்களிடம் என்னைக் காட்டிக்கொடுக்கிற மனிதன் வந்துவிட்டான்” என்றார். இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே யூதாஸ் அங்கே வந்தான். அவன் பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன். அவனோடு பலர் வந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், வேதபாரகராலும், மூத்த யூதத்தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்களிடம் வாள்களும், தடிகளும் இருந்தன. யூதாஸ் அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்து வைத்திருந்தான். அதன்படி, “நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர்தான் இயேசு. அவரைக் கைது செய்து பத்திரமாய்க் கொண்டு செல்லுங்கள்” என்று சொல்லி இருந்தான். அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர். இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன். இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள். நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார். அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள். ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான்.

மாற்கு 14:1-52 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள். ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள். அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்? இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப்போனான். அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்; அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார். அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி; மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள். பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார். பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்லுவது இன்னதென்று அறியாதிருந்தார்கள். அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைப்பண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார் உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான். இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.