மாற்கு 13:21-37
மாற்கு 13:21-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அக்காலத்தில் யாராவது உங்களைப் பார்த்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம். ஏனெனில் பொய் கிறிஸ்துக்களும், பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள். இயலுமானால், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள்; அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். “அந்நாட்களில் உண்டாகும் துன்பத்தைத் தொடர்ந்து, “ ‘சூரியன் இருள் அடையும், சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’ “அவ்வேளையில் மானிடமகனாகிய நான் மிகுந்த வல்லமையுடனும் மகிமையுடனும் மேகங்களில் வருவதை மனிதர் காண்பார்கள். நான் என் தூதர்களை அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை சேர்த்துக்கொள்வேன்; பூமியின் கடைசி எல்லை தொடங்கி, வானங்களின் கடைசி எல்லைவரை நான்கு திசைகளிலிருந்தும் அவர்களைக் கூட்டிச்சேர்ப்பேன். “இப்பொழுது அத்திமரத்தின் உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. வானமும், பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது. “அந்த நாளையோ, அந்த நேரத்தையோ ஒருவனும் அறியமாட்டான். ஏன், பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கும் மானிடமகனாகிய எனக்கும் தெரியாது; ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார். நீங்கள் கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்! அந்நேரம் எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாதே. இதுவோ, ஒருவன் தன் வேலைக்காரர் பொறுப்பில், தன் வீட்டை ஒப்படைத்துவிட்டுப் போவதைப்போல் இருக்கிறது. அவன் ஒவ்வொருவருக்கும், அவனவன் வேலையைப் பொறுப்பாய்க் கொடுத்துவிட்டு, வாசலில் இருப்பவனைக் காவல் காக்கும்படி சொல்லிப் போகிறான். “ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பிவருவான் என்று உங்களுக்குத் தெரியாதே. அவன் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும்போதோ, அல்லது அதிகாலையிலோ, எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும். அவன் திடீரென வந்தால், உங்களை நித்திரை செய்கிறவர்களாய் அவன் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்கிறதை எல்லோருக்குமே சொல்கிறேன்: ‘விழிப்பாயிருங்கள்’ ” என்றார்.
மாற்கு 13:21-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால், நம்பவேண்டாம். ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும். அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள். அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து, வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள். அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் நடக்கும்முன்பு இந்த சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது. அந்தகாலத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியாததினால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு, தூரதேசத்திற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும்போது, தன் வேலைக்காரர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும் நியமித்து, விழித்திருக்கும்படி காவல்காக்கிறவனுக்குச் சொல்லுவான். அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனென்றால், வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் நினைக்காத நேரத்தில் அவன் வந்து, நீங்கள் தூங்குகிறதைக் கண்டுபிடிக்காதபடி விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
மாற்கு 13:21-37 பரிசுத்த பைபிள் (TAERV)
“அக்காலத்தில் சிலர் ‘அதோ பாருங்கள் கிறிஸ்து, இதோ இவர்தான் கிறிஸ்து’ என்று கூறுவார்கள். அவர்களை நம்பாதீர்கள். கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் வந்து அநேக அற்புதங்களையும், அரிய செயல்களையும் செய்வார்கள். அவர்கள் இவற்றை தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடமே செய்வார்கள். அப்படிச் செய்து அவர்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன். “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும். சந்திரன் ஒளி தராது. நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’ “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். பூமி முழுவதும் தேவதூதர்களை மனிதகுமாரன் அனுப்பிவைப்பார். அத்தேவ தூதர்கள் உலகம் முழுவதிலும் உள்ள கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கூட்டுவார்கள். “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது. அத்திமரக் கிளைகள் பசுமையாகவும், மென்மையாகவும் மாறி புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும்போது கோடைக் காலம் நெருங்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இது போலத்தான் நான் சொன்னவை நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் தோன்றியதும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது. “எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்துகொள்ள முடியாது. இதைப்பற்றி தேவ குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுக்கும் கூடத் தெரியாது. பிதா மட்டுமே இதனை அறிவார். கவனமாய் இருங்கள். எப்பொழுதும் தயாராக இருங்கள். அக்காலம் எப்போது வரும் என உங்களுக்கும் தெரியாது. “இது, பயணம் செய்பவன் தன் வீட்டைவிட்டுப் போவதைப் போன்றது. அவன் தன் வேலைக்காரர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டுப்போகிறான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் குறிப்பிட்ட ஒவ்வொரு வேலையைக் கொடுத்துவிட்டுப் போகிறான். ஒரு வேலைக்காரன் வாசலைக் காவல் காப்பான். எப்பொழுதும் வேலைக்காரர்கள் தயாராய் இருக்கவேண்டும் என்று சொல்வான். அதைப் போலவே நானும் உங்களுக்குக் கூறுகிறேன். எனவே, நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பி வருவான் என்று எவருக்கும் தெரியாது. ஒரு வேளை அவன் பிற்பகலில் வரலாம், அல்லது நடு இரவில் வரலாம் அல்லது அதிகாலையில் வரலாம், அல்லது சூரியன் உதயமாகும்போது வரலாம். வீட்டின் சொந்தக்காரன் எதிர்பாராமல் வருவான். நீங்கள் எப்போதும் தயாராக இருந்தால் உங்களைத் தூங்குகிறவர்களாக அவன் கண்டுபிடிக்க மாட்டான். நான் இதனை சொல்கிறேன். நான் எல்லாருக்கும் சொல்கிறேன், தயாராக இருங்கள்” என்றார்.
மாற்கு 13:21-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள். ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும். வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைதோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும், நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான். அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.