மாற்கு 13:14-20

மாற்கு 13:14-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘பாழாக்குகிற அருவருப்பு’ தனக்குரியதல்லாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது, வாசிக்கிறவன் விளங்கிக்கொள்ளட்டும். அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும் கீழே இறங்கவோ, எதையாவது எடுத்துக்கொள்ளும்படி வீட்டிற்குள் போகாதிருக்கட்டும். வயலில் இருக்கிறவன், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி, திரும்பிப் போகாதிருக்கட்டும். அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! இந்தத் துன்பம் குளிர்காலத்தில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள். ஏனெனில், இறைவன் உலகத்தைப் படைத்ததிலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெருந்துன்பத்தின் நாட்களாக அவை இருக்கும். பின் ஒருபோதும் அப்படிப்பட்ட துன்பம் ஏற்படப் போவதுமில்லை. “கர்த்தர் அந்த நாட்களைக் குறைக்காவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

மாற்கு 13:14-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும்; அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாவது எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கவேண்டும். வயலில் வேலைசெய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும். அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால், தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும். கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

மாற்கு 13:14-20 பரிசுத்த பைபிள் (TAERV)

“பேரழிவிற்கு காரணமான மோசமான காரியத்தை நிற்கத்தகாத இடத்தில் நிற்க நீங்கள் காண்பீர்கள். (இதை வாசிக்கிறவன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.) அப்போது யூதேயாவில் உள்ள மக்கள் அதை விட்டு மலைகளுக்கு ஓடிப் போவார்கள். மக்கள் தம் நேரத்தை வீணாக்காமல் எதற்காகவும் நிற்காமல் ஓடிப்போக வேண்டும். எவனாவது வீட்டின் கூரைமேல் இருந்தால் அவன் பொருள்களை எடுக்கக் கீழே இறங்காமலும் வீட்டிற்குள் நுழையாமலும் இருப்பானாக. எவனாவது வயலில் இருந்தால் அவன் தன் மேல் சட்டையை எடுக்கத் திரும்பிப் போகாமல் இருப்பானாக. “அந்தக் காலம் கருவுற்ற பெண்களுக்கும், கைக் குழந்தையுள்ள பெண்களுக்கும் மிகக் கொடுமையானதாக இருக்கும். மழைக் காலத்தில் இவை நிகழாதிருக்கும்படி பிரார்த்தனை செய்யுங்கள். ஏன்? அந்த நாட்களில் அதிக அளவு வேதனை இருக்கும். தொடக்கக் காலம் முதல் இன்று வரை இது போன்ற வேதனைகள் ஏற்பட்டிருக்காது. இது போன்ற கேடுகள் இனிமேல் நடக்காது. அக்கேடு காலம் குறுகியதாக இருக்கட்டும் என்று தேவன் தீர்மானித்திருக்கிறார். அக்கேடு காலம் குறுகியதாக இல்லாமல் இருந்தால் பின்னர் உலகில் ஒருவரும் உயிரோடு இருக்க முடியாது. அவர் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய மக்களுக்கு உதவும்பொருட்டு தேவன் அக்கேடு காலத்தினைக் குறுகியதாக ஆக்குவார்.

மாற்கு 13:14-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்க காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளேபோகாமலும் இருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும். கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.