மாற்கு 12:38-44
மாற்கு 12:38-44 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு தொடர்ந்து போதிக்கையில் அவர் அவர்களிடம், “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டு, பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். இயேசு காணிக்கைகள் போடும் இடத்துக்கு எதிராக உட்கார்ந்து, திரண்டிருந்த மக்கள் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியிலே பணத்தைப் போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். பல செல்வந்தர்கள் அதிக பணத்தைப் போட்டார்கள். ஆனால் ஒரு ஏழை விதவையோ மிகவும் குறைவான மதிப்புடைய இரண்டு சிறிய காசுகளைப் போட்டாள். அப்பொழுது இயேசு, தமது சீடர்களைத் தம்மிடம் அழைத்து அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த ஏழை விதவை மற்ற எல்லோரையும்விட, அந்தக் காணிக்கைப் பெட்டியிலே அதிகமாய்ப் போட்டிருக்கிறாள். அவர்கள் அனைவரும் தங்கள் செல்வத்திலிருந்தே எடுத்துக் கொடுத்தார்கள்; ஆனால் இவளோ, தனது ஏழ்மையிலிருந்தே கொடுத்தாள், தனது பிழைப்பிற்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே அவள் போட்டிருக்கிறாள்” என்றார்.
மாற்கு 12:38-44 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து: வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, விதவைகளின் வீடுகளையும், சொத்துக்களையும் ஏமாற்றி, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் அதிகத் தண்டனை அடைவார்கள் என்றார். இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, மக்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; செல்வந்தர்கள் அநேகர் அதிகமாகப் போட்டார்கள். ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லோரையும்விட இந்த ஏழை விதவை அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவர்களெல்லோரும் தங்களுடைய பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.
மாற்கு 12:38-44 பரிசுத்த பைபிள் (TAERV)
தொடர்ந்து இயேசு உபதேசித்துக்கொண்டிருந்தார். “வேதபாரகர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் மதிப்பைத் தரும் நீண்ட ஆடைகளை அணிந்துகொண்டு அங்குமிங்கும் அலைய விரும்புகிறார்கள். சந்தைப் பகுதிகளில் மக்களிடமிருந்து மரியாதை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளைப் பெற விரும்புகின்றனர். விருந்துகளில் மிக முக்கியான இடங்களில் இருக்க விரும்புகின்றனர். விதவைகளை இழிவாக நடத்தி அவர்களது வீடுகளைத் திருடுகிறார்கள். நீண்ட பிரார்த்தனை செய்து நல்லவர்கள்போல் தோற்றம் தருகிறார்கள். இவர்களை தேவன் மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார். மக்கள் தம் காணிக்கையைச் செலுத்துகிற ஆலய காணிக்கைப் பெட்டியின் அருகில் இயேசு உட்கார்ந்திருந்தார். மக்கள் அதில் காசுகள் போடுவதைக் கவனித்தார். நிறைய பணக்காரர்கள் ஏராளமாகப் பணத்தைப் போட்டார்கள். பிறகு ஓர் ஏழை விதவை வந்து இரண்டு சிறியகாசுகளைப் போட்டாள். இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த ஏழை விதவை இரண்டு சிறிய காசுகளைத்தான் போட்டாள். உண்மையில் அவள் செல்வந்தர் எவரையும்விட அதிகம் போட்டிருக்கிறாள். அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குத் தேவையில்லாததையே அவர்கள் கொடுத்தார்கள். இவளோ மிகவும் ஏழை. அவள் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட்டாள். அவள் கொடுத்தது அவளது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்” என்றார்.
மாற்கு 12:38-44 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள். ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.