மாற்கு 11:27-33

மாற்கு 11:27-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார். மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும்; எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி; இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.

மாற்கு 11:27-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசு ஆலய முற்றங்களில் நடந்துகொண்டிருக்கையில், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், யூதரின் தலைவர்களும் அவரிடம் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “நீர் எந்த அதிகாரத்தினால் இந்தக் காரியங்களைச் செய்கிறீர்? இதைச் செய்வதற்கு உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதிலை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன். யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? அதை எனக்குச் சொல்லுங்கள்” என்றார். அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார். அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது” என்றார்கள். ஏனெனில் எல்லோரும் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். இயேசு அதற்கு அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.

மாற்கு 11:27-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கும்போது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடம் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார். எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி; இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.

மாற்கு 11:27-33 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும் சீஷர்களும் மீண்டும் எருசலேமுக்குச் சென்றார்கள். அவர் தேவாலயத்திற்குள் நடந்து கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவிடம் வந்தனர். அவரிடம், “எங்களுக்குச் சொல். இவற்றையெல்லாம் செய்ய நீ எங்கிருந்து அதிகாரம் பெற்றாய்? யார் உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று கேட்டனர். அதற்கு இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். பிறகு நான் யாருடைய அதிகாரத்தால் இவற்றையெல்லாம் செய்கிறேன் என்பதைக் கூறுகிறேன். யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுத்தபோது அந்த அதிகாரம் அவனுக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். யூதத் தலைவர்கள் இயேசுவின் கேள்வியைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள், “நாம் இவனிடம், ‘யோவான் தேவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொன்னால்’, நம்மிடம் இவன், ‘பிறகு ஏன் யோவான் மீது நம்பிக்கை வைக்கவில்லை’ என்று கேட்பான். ‘மனிதனிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், பின்னர் மக்கள் நம்மீது கோபம்கொள்வர்” (யூதத் தலைவர்கள் மக்களுக்கு எப்போதும் பயந்தனர். ஏனென்றால் அனைத்து மக்களும் யோவானை உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினர்) என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆகையால் அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குப் பதில் தெரியாது” என்றனர். இயேசுவும், “அப்படியானால், நானும் யார் அதிகாரத்தால் இதனைச் செய்கிறேன் என்பதைச் சொல்லமாட்டேன்” என்றார்.