மாற்கு 11:15-18
மாற்கு 11:15-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். காசு மாற்றம் செய்பவர்களின் மேஜைகளையும், புறாக்கள் விற்பவர்களின் இருக்கைகளையும் புரட்டித்தள்ளினார். ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை. இயேசு அவர்களுக்கு போதித்து, “என்னுடைய வீடு, எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறதல்லவா? ஆனால், நீங்களோ அதைக் கள்வர்களின் குகையாக்குகிறீர்களே” என்று சொன்னார். தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது, அவரைக் கொல்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். ஏனெனில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தது.
மாற்கு 11:15-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்: என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள்.
மாற்கு 11:15-18 பரிசுத்த பைபிள் (TAERV)
அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார். ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார். பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்” என்றார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர்.
மாற்கு 11:15-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்: என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்.