மாற்கு 11:1-18

மாற்கு 11:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள். அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள். இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார். மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்: என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்.

மாற்கு 11:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது, அவர் தமது சீடர்கள் இரண்டுபேரை அனுப்பி, “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். நீங்கள் அதற்குள்ளேப் போகையில், ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘கர்த்தருக்கு இது வேண்டும், அவர் சீக்கிரமாய் இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார். அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலின் அருகே கழுதைக்குட்டி ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு சீடர்கள், இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே பதிலளித்தார்கள். அவர்களும் சீடர்கள் அதை அவிழ்த்துக் கொண்டுபோக அனுமதித்தார்கள். அவர்கள் கழுதைக்குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தமது மேலுடைகளை அதன்மேல் போட்டார்கள். அவர் அதின்மேல் உட்கார்ந்தார். அநேகர் தங்களுடைய மேலுடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல்வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள். அவருக்கு முன்னாக சென்றவர்களும், பின்னாகச் சென்றவர்களும் சத்தமிட்டு: “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்படுவாராக!” “வரப்போகும் நமது தந்தை தாவீதின் அரசு ஆசீர்வதிக்கப்படுவதாக!” “உன்னதங்களில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள். இயேசு எருசலேமுக்குள் சென்று, ஆலயத்தில் நுழைந்தார். அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகி விட்டதால், பன்னிரண்டு பேர்களுடன் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார். மறுநாள் அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்படுகையில், இயேசு பசியாயிருந்தார். தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தை அவர் கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்க்கும்படிச் சென்றார். அவர் அதன் அருகே வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஏனெனில், அது அத்திப்பழக் காலம் அல்ல. அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். காசு மாற்றம் செய்பவர்களின் மேஜைகளையும், புறாக்கள் விற்பவர்களின் இருக்கைகளையும் புரட்டித்தள்ளினார். ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை. இயேசு அவர்களுக்கு போதித்து, “என்னுடைய வீடு, எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறதல்லவா? ஆனால், நீங்களோ அதைக் கள்வர்களின் குகையாக்குகிறீர்களே” என்று சொன்னார். தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது, அவரைக் கொல்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். ஏனெனில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தது.

மாற்கு 11:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள். அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள். இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள். முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்; கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்திற்குச் சென்று, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, மாலைநேரத்தில், பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார். அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது. அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்: என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள்.

மாற்கு 11:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார். இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் எதற்காக இதனைக் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம், ‘ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது. அவர் இதனை விரைவில் திருப்பி அனுப்புவார் என்று சொல்லுங்கள்’” என்றார். சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள். அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் இதனைப் பார்த்தனர். “என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதையை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர். இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர். சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார். ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர். சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர். “அவரைப் புகழுங்கள் ‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ தமது தந்தையான தாவீதின் இராஜ்யம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதாக. அந்த இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது. பரலோகத்தில் உள்ள தேவனைப் போற்றுவோம்” என்று அவர்கள் சத்தமிட்டனர். எருசலேமுக்குள் சென்று அங்குள்ள தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார். தேவாலயத்தில் எல்லாவற்றையும் இயேசு பார்த்தார். ஆனால் ஏற்கெனவே நேரமாகிவிட்டிருந்தது. ஆகையால் இயேசு அங்கிருந்து பெத்தானியாவுக்கு தன் பன்னிரண்டு சீஷர்களோடு சென்றார். மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது. இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை. ஆகையால் இயேசு அத்தி மரத்திடம், “இனி மக்கள் யாரும் உன்னிடமிருந்து ஒரு போதும் பழத்தைத் தின்னமாட்டார்கள்” என்றார். இயேசு சொன்னதை சீஷர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார். ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார். பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்” என்றார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர்.