மாற்கு 11:1-10

மாற்கு 11:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது, அவர் தமது சீடர்கள் இரண்டுபேரை அனுப்பி, “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். நீங்கள் அதற்குள்ளேப் போகையில், ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘கர்த்தருக்கு இது வேண்டும், அவர் சீக்கிரமாய் இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார். அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலின் அருகே கழுதைக்குட்டி ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு சீடர்கள், இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே பதிலளித்தார்கள். அவர்களும் சீடர்கள் அதை அவிழ்த்துக் கொண்டுபோக அனுமதித்தார்கள். அவர்கள் கழுதைக்குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தமது மேலுடைகளை அதன்மேல் போட்டார்கள். அவர் அதின்மேல் உட்கார்ந்தார். அநேகர் தங்களுடைய மேலுடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல்வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள். அவருக்கு முன்னாக சென்றவர்களும், பின்னாகச் சென்றவர்களும் சத்தமிட்டு: “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்படுவாராக!” “வரப்போகும் நமது தந்தை தாவீதின் அரசு ஆசீர்வதிக்கப்படுவதாக!”

மாற்கு 11:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள். அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள். இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள். முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்; கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

மாற்கு 11:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார். இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் எதற்காக இதனைக் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம், ‘ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது. அவர் இதனை விரைவில் திருப்பி அனுப்புவார் என்று சொல்லுங்கள்’” என்றார். சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள். அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் இதனைப் பார்த்தனர். “என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதையை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர். இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர். சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார். ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர். சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர். “அவரைப் புகழுங்கள் ‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ தமது தந்தையான தாவீதின் இராஜ்யம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதாக. அந்த இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது. பரலோகத்தில் உள்ள தேவனைப் போற்றுவோம்”

மாற்கு 11:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள். அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள். இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்