மாற்கு 10:46-52

மாற்கு 10:46-52 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்குப் பின்பு இயேசுவும், அவருடைய சீடர்களும் எரிகோவுக்கு வந்துசேர்ந்ததும், அவர்களும், பெருங்கூட்டமாய் இருந்த மக்களும், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் ஒரு குருடன், வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு வருகிறார் என அவன் கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான். பலர் அவனைக் கண்டித்து, சத்தமிட வேண்டாம் என அவனுக்குச் சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டுக் கூப்பிட்டான். இயேசு அவ்விடத்தில் நின்று, “அவனைக் கூப்பிடுங்கள்” என்றார். அவர்கள் அந்தக் குருடனைக் கூப்பிட்டு, “தைரியமாய் இரு! எழுந்து நில்! இயேசு உன்னைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவன் தனது மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான். இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்தக் குருடன், “ஆண்டவரே, நான் பார்க்க விரும்புகிறேன்” என்றான். அப்பொழுது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையைப் பெற்று, அவ்வழியிலேயே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.

மாற்கு 10:46-52 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான். அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான். இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.

மாற்கு 10:46-52 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்களோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் குமாரன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு வந்துகொண்டிருப்பதை அறிந்து சத்தமிட ஆரம்பித்தான். அவன், “தாவீதின் குமாரனாகிய இயேசுவே! எனக்கு உதவி செய்யும்” என்றான். பல மக்கள் அவனைப் பேசாமலிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அந்தக் குருடன் இன்னும் சத்தமாக, “தாவீதின் குமாரனே, எனக்கு உதவி செய்யும்” என்றான். அவ்விடத்தில் இயேசு, “அந்த மனிதனை இங்கே வரச் சொல்லுங்கள்” என்றார். எனவே அவர்கள் அக்குருடனை அழைத்தனர். அவர்கள், “மகிழ்ச்சியாய் இரு, எழுந்து வா, இயேசு உன்னை அழைக்கிறார்” என்றனர். அக்குருடன் விரைவாக எழுந்தான். அவன் தன் மேலாடையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு இயேசுவினருகில் சென்றான். இயேசு அவனிடம், “நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார். அதற்கு அக்குருடன், “போதகரே! நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றான். “போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய்” என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான்.

மாற்கு 10:46-52 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்­சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.