மாற்கு 10:32-34

மாற்கு 10:32-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கும் வழியில், இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்; சீடர்கள் வியப்படைந்தார்கள். அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்திருந்தார்கள். மீண்டும் அவர் பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார். “இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மானிடமகனாகிய நான், தலைமை ஆசாரியரிடத்திலும் மோசேயின் சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னை மரண தண்டனைக்கு உட்படுத்துவார்கள். என்னை ஏளனம் செய்து, என்மேல் துப்பி, சவுக்கால் அடித்து, கொலை செய்யும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும், மூன்று நாட்களுக்குப்பின்பு, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்றார்.

மாற்கு 10:32-34 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும் அவரோடு இருந்த மக்களும் அங்கிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையில் இருந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று இயேசு அழைத்துச் சென்றார். இயேசுவின் சீஷர்கள் இதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவர் பின்னால் போன மக்களோ அச்சப்பட்டனர். மீண்டும் இயேசு தன் பன்னிரண்டு சீஷர்களைக் கூட்டி அவர்களோடு தனியாகப் பேசினார். எருசலேமில் அவருக்கு என்ன நடக்கும் என்பதைப்பற்றிக் கூறினார். “நாம் எருசலேமுக்கு போய்க் கொண்டு இருக்கிறோம். மனிதகுமாரன் அங்கே தலைமை ஆசாரியர்களிடமும், வேதபாரகர்களிடமும் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனிதகுமாரன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிப்பர். அவர்கள் மனிதகுமாரனை யூதரல்லாதவர்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைக் குறித்து நகைப்பர். அவர்மீது காறி உமிழ்வார்கள். வாரினால் அடிப்பார்கள். கொலை செய்வார்கள். அவரோ மரணமடைந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுவார்” என்றார்.

மாற்கு 10:32-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது, இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார்: இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, யூதரல்லாதோர்களிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.

மாற்கு 10:32-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்: இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.