மாற்கு 10:1-31
மாற்கு 10:1-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயா பகுதிக்கும், யோர்தானின் மறுபக்கத்திலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். மீண்டும் மக்கள் அவரிடம் பெருங்கூட்டமாய் வந்தார்கள். வழக்கம்போல் அவர் அவர்களுக்கு போதித்தார். சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “உங்களுக்கு மோசே என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி அவளை விவாகரத்து செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, மோசே இந்தச் சட்டத்தை உங்களுக்கு எழுதிக்கொடுத்திருக்கிறான்” என்றார். “ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார். ‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’ எனவே அவர்கள் இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள். ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். மீண்டும் அவர்கள் வீட்டில் இருந்தபோது, சீடர்கள் இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிற ஒருவன், அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான். ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் விபசாரம் செய்கிறாள்” என்றார். பிறகு சிலர் சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்று அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடரோ அவர்களைக் கண்டித்தார்கள். இயேசு இதைக் கண்டபோது, கோபமடைந்தார். அவர் அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார். இயேசு அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு, தமது கைகளை அவர்கள்மேல் வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவனைத்தவிர நல்லவர் ஒருவரும் இல்லை. ‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, மோசடி செய்யாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார். அதற்கு அவன், “போதகரே, நான் சிறுவனாயிருந்த காலம் முதல் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான். இயேசு அவனை நோக்கிப்பார்த்து, அவனிடத்தில் அன்புகொண்டு, “ஒரு காரியம் மட்டும் உன்னிடத்தில் குறைவுபடுகிறது. நீ போய், உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். அப்பொழுது அவனுடைய முகம் வாடியது. அவன் துக்கத்துடன் திரும்பிப்போனான், ஏனெனில் அவன் மிகுந்த செல்வமுடையவனாக இருந்தான். இயேசு சுற்றிப்பார்த்து, தமது சீடர்களிடம், “ஒரு செல்வந்தன் இறைவனின் அரசுக்குள் போவது எவ்வளவு கடினமானது!” என்றார். அவருடைய வார்த்தைகளைக்குறித்து சீடர்கள் வியப்படைந்தார்கள். ஆனால் இயேசு மீண்டும் அவர்களிடம், “பிள்ளைகளே, செல்வந்தர்கள் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது! ஒரு செல்வந்தன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது எளிதாயிருக்கும்” என்றார். சீடர்களோ, மேலும் அதிக வியப்படைந்து, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, “மனிதனால் இது முடியாததுதான்; ஆனால் இறைவனால் இது முடியாதது அல்ல. இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்றார். அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவந்தோமே” என்றான். அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனக்காகவும் நற்செய்திக்காகவும் யாராவது தனது வீட்டையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தகப்பனையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால், அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். ஆனால் முதலாவதாய் இருக்கும் அநேகர், கடைசியாகவும். கடைசியாய் இருக்கும் அநேகர் முதலாவதாய் இருப்பார்கள்” என்றார்.
மாற்கு 10:1-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள். எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார். பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள். அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான். மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார். அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள். இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை. விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான். அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார். சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார். அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான். அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார்.
மாற்கு 10:1-31 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு வெளியேறினார். அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார். அங்கு, ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள். வழக்கம்போல இயேசு அவர்களுக்குப் போதனை செய்தார். சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், இயேசுவைத் தவறாக ஏதாவது பேசவைக்க முயன்றார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களிடம், “மோசே உங்களிடம் என்ன செய்யுமாறு கட்டளை இட்டார்?” என்று கேட்டார். பரிசேயர்களோ, “ஒருவன் விவாகரத்துக்கான சான்றிதழை எழுதி அதன் மூலம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதித்து இருக்கிறார்” என்றனர். அவர்களிடம் இயேசு, “மோசே உங்களுக்காக அவ்வாறு எழுதி இருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தேவனின் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள். ஆனால் தேவன் உலகைப் படைக்கும்போது ‘அவர் மக்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.’ ‘அதனால்தான் ஒருவன் தன் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கொள்கிறான். இருவரும் ஒருவர் ஆகிவிடுகிறார்கள். எனவே அவர்கள் இருவராயில்லாமல் ஒருவராகி விடுகின்றனர்.’ தேவன் அந்த இருவரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். எனவே, எவரும் அவர்களைப் பிரிக்கக்கூடாது” என்றார். பிறகு இயேசுவும், சீஷர்களும் அந்த வீட்டில் தனியே இருந்தனர். அப்போது சீஷர்கள் இயேசுவிடம் மீண்டும் விவாகரத்து பற்றிய கேள்வியைக் கேட்டனர். அதற்கு இயேசு, “எவனொருவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறானோ அவன் தன் மனைவிக்கு எதிரான பாவியாகிறான். அத்துடன் விபசாரமாகிய பாவத்துக்கும் ஆளாகிறான். இது போலவே தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை மணந்துகொள்கிற பெண்ணும் விபசாரம் செய்யும் பாவியாகிறாள்” என்றார். மக்கள் தம் சிறு குழந்தைகளை இயேசு தொடுவதற்காகக் கொண்டு வந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர்கள் குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம் என்று தடுத்தனர். இதனை இயேசு கவனித்தார். சிறுவர் தம்மிடம் வருகிறதை சீஷர்கள் தடை செய்தது அவருக்கு பிரியமில்லை. எனவே அவர்களிடம், “குழந்தைகள் என்னிடம் வருவதை அனுமதியுங்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். ஏனென்றால் தேவனுடைய இராஜ்யம் குழந்தைகளைப் போன்றவர்களுக்குரியது. நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்வதைப் போன்று நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அதற்குள் நுழைய முடியாது” என்றார். பிறகு இயேசு, குழந்தைகளைக் கைகளால் அணைத்துக்கொண்டார். இயேசு அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வாதமும் செய்தார். இயேசு அவ்விடத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தார். அப்போது ஒரு மனிதன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கினான். அவன், “நல்ல போதகரே! நான் நித்திய வாழ்வைப் பெற என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “என்னை நீ நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். ஆனால் உனது வினாவுக்கு விடையளிக்கிறேன். நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன், “போதகரே! நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறேன்” என்றான். இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், “நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார். இயேசு இவற்றைச் சொன்னதும் அந்த மனிதன் மிகவும் வருத்தப்பட்டு அப்புறம் போனான். அவனது வருத்தத்துக்குக் காரணம் அவன் பெருஞ் செல்வந்தனாய் இருந்ததுதான்; அதோடு அச்செல்வத்தைப் பாதுகாக்கவும் நினைத்ததுதான். பிறகு இயேசு சுற்றிலும் பார்த்து தன் சீஷர்களிடம் “ஒரு பணக்காரன் தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது மிகவும் கடினமான ஒன்று” என்றார். இயேசு சொன்னதைக் குறித்து சீஷர்கள் அதிசயப்பட்டார்கள். இயேசு மீண்டும், “என் பிள்ளைகளே! தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது கடினமானது. அதிலும் தேவனுடைய இராஜ்யத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவது மிகவும் கடினமானது. இதைவிட, ஊசியின் காதிற்குள் ஒரு ஒட்டகம் எளிதாக நுழைந்து விடும்” என்றார். சீஷர்கள் பெரிதும் அதிசயப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்குள், “பிறகு யார் இரட்சிக்கப்படுவார்?” என்று கேட்டனர். இயேசு தன் சீஷர்களைப் பார்த்து, “மக்கள் தங்களால் எதுவும் செய்துகொள்ள இயலாது. அது தேவனிடமிருந்துதான் வரவேண்டும். தேவனே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்” என்றார். பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, விட்டு உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறோம்” என்றான். இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவன் ஒருவன் தனது வீட்டையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தந்தையையும், தாயையும், குழந்தைகளையும், பண்ணைகளையும் எனக்காகவும், நற்செய்திக்காகவும், தியாகம் செய்கிறானோ அவனுக்கு அவன் விட்டதைவிட நூறு மடங்கு கிடைக்கும். இங்கே இந்த உலகத்தில் அவன் மிகுதியான வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயார்களையும், குழந்தைகளையும், பண்ணைகளையும், பெறுவான். அதோடு பல துன்பங்களையும் அடைவான். ஆனால் அவன் நித்தியவாழ்வு என்னும் பரிசினை வரப்போகும் உலகில் பெறுவான். இப்போது மிக உயர்ந்த இடத்தில் உள்ள பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த இடத்துக்குச் செல்வர், மிகத் தாழ்ந்த இடத்திலுள்ள பலர் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்வர்” என்றார்.
மாற்கு 10:1-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள். அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார். அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது! ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.