மாற்கு 1:9-39
மாற்கு 1:9-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார். இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என்னுடைய அன்பு மகன்; நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று ஒலித்தது. உடனே ஆவியானவர் இயேசுவைப் பாலைவனத்துக்கு அனுப்பினார். இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக்கொண்டு கலிலேயாவுக்கு வந்து, “காலம் நிறைவேறிவிட்டது, இறைவனுடைய அரசு சமீபித்திருக்கிறது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார். இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள். இயேசு சற்று தூரம் போனபின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள். பின்பு அவர்கள் கப்பர்நகூம் நகரத்திற்குச் சென்றார்கள்; ஓய்வுநாளில் இயேசு யூத ஜெப ஆலயத்திற்குச் சென்று, அங்கு போதித்தார். அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார். அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு, “நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான். “அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார். அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது. எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள். இயேசுவைப்பற்றிய இச்செய்தி கலிலேயா பகுதிகள் முழுவதும் விரைவாய் பரவியது. ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள். எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள். அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள். பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை. விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார். சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள். அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள். இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார். எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார்.
மாற்கு 1:9-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார். அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார். அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து: காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார். அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார். இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார். அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார். உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது. உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள். அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள். அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை. அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய், அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
மாற்கு 1:9-39 பரிசுத்த பைபிள் (TAERV)
கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார். அவர் யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார். “நீர் என்னுடைய குமாரன். நான் உம்மிடம் அன்பாய் இருக்கிறேன். நான் உம்மிடம் மிகவும் பிரியமாய் இருக்கிறேன்” என ஓர் அசரீரி வானத்திலிருந்து கேட்டது. பிறகு ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்தில் தனியே அனுப்பினார். அந்த வனாந்தரத்தில் இயேசு நாற்பது நாட்கள் இருந்தார். காட்டு மிருகங்களோடு அவர் அங்கே இருந்தார். அவர் அங்கு இருந்தபோது, சாத்தானால் சோதிக்கப்பட்டார். பிறகு தேவதூதர்கள் வந்து அவருக்கு உதவி செய்தார்கள். இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார். “சரியான நேரம் இங்கே இப்பொழுது இருக்கிறது. தேவனுடைய இராஜ்யம் நெருங்கிவிட்டது. உங்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள். நற்செய்தி மீது நம்பிக்கை வையுங்கள்” என்று இயேசு சொன்னார். இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார். அவர்கள் இருவரும் மீன்பிடிப்பவர்கள். அவர்கள் கடலுக்குள் வலையை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இயேசு அவர்களிடம், “வாருங்கள். என்னைப் பின் தொடருங்கள். நான் உங்களை வேறுவிதமான மீன் பிடிப்பவர்களாக மாற்றுவேன். நீங்கள் மீனை அல்ல, மனிதர்களைப் பிடிப்பவர்களாவீர்கள்” என்று கூறினார். ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு, விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர். இயேசு கலிலேயாவின் கடற்கரையோரமாய் தொடர்ந்து நடந்து சென்றார். அவர் செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபு, யோவான் என்னும் சகோதரர்களைக் கண்டார். அவர்களும் படகில் இருந்து கொண்டு மீன்பிடிக்கும் தம் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அவர்களின் தந்தை செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும் சில மீனவர்களும் படகில் இருந்தனர். இயேசு அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி அழைத்தார். அவர்கள் தம் தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இயேசுவும் அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குள் சென்று இயேசு போதனை செய்தார். அங்கே இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்களின் ஏனைய வேதபாரகரைப்போல இயேசு உபதேசிக்கவில்லை. அவர் எல்லா அதிகாரங்களையும் உடையவராக உபதேசித்தார். ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான். அவன், “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் நீர் என்ன விரும்புகிறீர்? எங்களை அழிக்கவா வந்தீர்? நீர் தேவனின் பரிசுத்தர் என்பது எனக்குத் தெரியும்” என்று சத்தமிட்டான். இயேசு பலமான குரலில், “அமைதியாக இரு. இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டார். அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது. மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள், “இங்கு என்ன நடக்கிறது? இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார். இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார். இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார். ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர். எனவே, கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப்பற்றிய செய்தி வேகமாகப் பரவியது. இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள். சீமோனின் மாமியார் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருந்தாள். அவள் படுக்கையில் காய்ச்சலோடு கிடந்தாள். மக்கள் அவரிடம் அவளைப்பற்றிக் கூறினர். எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள். அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர். அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன. மறுநாள் காலையில் இயேசு மிக முன்னதாகவே எழுந்தார். இன்னும் இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனியாக ஓரிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். பிறகு சீமோனும் அவனது நண்பர்களும் இயேசுவைத் தேடிச் சென்றனர். அவரைக் கண்டுபிடித்து, “மக்கள் யாவரும் உமக்காகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றனர். இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார். ஆகையால் இயேசு கலிலேயா எங்கும் பிரயாணம் பண்ணினார். அவர் ஜெப ஆலயங்களில் போதனை செய்தார். அவர் பலவந்தமாகப் பிசாசுகளை, மனிதர்களிடமிருந்து விரட்டினார்.
மாற்கு 1:9-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார். அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள். யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார். அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால் அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று. உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள். அங்கே சீமோனுடைய மாமி ஜூரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள். அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். பட்டணத்தார் எல்லாரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை. அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய், அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.