மாற்கு 1:16-20

மாற்கு 1:16-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள். இயேசு சற்று தூரம் போனபின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.

மாற்கு 1:16-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார். இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

மாற்கு 1:16-20 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார். அவர்கள் இருவரும் மீன்பிடிப்பவர்கள். அவர்கள் கடலுக்குள் வலையை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இயேசு அவர்களிடம், “வாருங்கள். என்னைப் பின் தொடருங்கள். நான் உங்களை வேறுவிதமான மீன் பிடிப்பவர்களாக மாற்றுவேன். நீங்கள் மீனை அல்ல, மனிதர்களைப் பிடிப்பவர்களாவீர்கள்” என்று கூறினார். ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு, விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர். இயேசு கலிலேயாவின் கடற்கரையோரமாய் தொடர்ந்து நடந்து சென்றார். அவர் செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபு, யோவான் என்னும் சகோதரர்களைக் கண்டார். அவர்களும் படகில் இருந்து கொண்டு மீன்பிடிக்கும் தம் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அவர்களின் தந்தை செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும் சில மீனவர்களும் படகில் இருந்தனர். இயேசு அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி அழைத்தார். அவர்கள் தம் தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

மாற்கு 1:16-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.