மாற்கு 1:1-45

மாற்கு 1:1-45 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞான ஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞான ஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். யோவான் ஒட்டகமயிர் உடையைத்தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான். அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான். அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார். அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள். யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம்பண்ணினார். அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால் அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று. உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள். அங்கே சீமோனுடைய மாமி ஜூரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள். அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். பட்டணத்தார் எல்லாரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை. அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய், அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். அவனோ புறப்பட்டுப்போய்; இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

மாற்கு 1:1-45 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவனுடைய மகன் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம். இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்” “ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’ என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.” அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான். யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள். யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது. அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன். நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.” அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார். இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என்னுடைய அன்பு மகன்; நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று ஒலித்தது. உடனே ஆவியானவர் இயேசுவைப் பாலைவனத்துக்கு அனுப்பினார். இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக்கொண்டு கலிலேயாவுக்கு வந்து, “காலம் நிறைவேறிவிட்டது, இறைவனுடைய அரசு சமீபித்திருக்கிறது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார். இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள். இயேசு சற்று தூரம் போனபின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள். பின்பு அவர்கள் கப்பர்நகூம் நகரத்திற்குச் சென்றார்கள்; ஓய்வுநாளில் இயேசு யூத ஜெப ஆலயத்திற்குச் சென்று, அங்கு போதித்தார். அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார். அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு, “நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான். “அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார். அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது. எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள். இயேசுவைப்பற்றிய இச்செய்தி கலிலேயா பகுதிகள் முழுவதும் விரைவாய் பரவியது. ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள். எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள். அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள். பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை. விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார். சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள். அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள். இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார். எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார். குஷ்டவியாதி உள்ளவன் இயேசுவினிடத்தில் வந்து முழங்காற்படியிட்டு, நீர் விரும்பினால், “என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று கெஞ்சி வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான். இயேசு அவனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிப்பைக் கொடுத்து: “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து. அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்று சொல்லி அவனை உடனே அனுப்பிவிட்டார். ஆனால் அவன் புறப்பட்டுப்போய் தாராளமாய் பேசத்தொடங்கி, தனக்கு நடந்த செய்தியை எங்கும் பரப்பினான். இதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாக செல்லமுடியாமல், வெளியே தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

மாற்கு 1:1-45 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம். “இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி; யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான். அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை. நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான். அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார். அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார். அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து: காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார். அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார். இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார். அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார். உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது. உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள். அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள். அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை. அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய், அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான். அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு; ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.

மாற்கு 1:1-45 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் துவக்கம். ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்: “கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.” “வானாந்தரத்தில் ஒரு மனிதன் கூவுகிறான். ‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள். அவரது பாதையை நேரானதாக்குங்கள்.’” ஆகையால் யோவான் வந்தான். அவன் வானாந்தரப் பகுதியில் மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினான். அவன் மக்களிடம் மனம் மாறியதைக் காட்டும்படியான ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி சொன்னான். அப்பொழுது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றான். யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அவனிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். ஒட்டக மயிரால் ஆன ஆடையை யோவான் அணிந்திருந்தான். தனது இடுப்பில் தோல் வாரால் ஆன கச்சையைக் கட்டியிருந்தான். அவன் வெட்டுக்கிளியையும். காட்டுத் தேனையும் உண்டு வந்தான். “என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப் பின்னால் வருகிறார். அவருக்கு முன்னால், நான் குனிந்து அவரது கால் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதி இல்லாதவன். நான் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்குகிறேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் வழங்குவார்” என்று யோவான் அவர்களுக்கு உபதேசம் செய்தான். கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார். அவர் யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார். “நீர் என்னுடைய குமாரன். நான் உம்மிடம் அன்பாய் இருக்கிறேன். நான் உம்மிடம் மிகவும் பிரியமாய் இருக்கிறேன்” என ஓர் அசரீரி வானத்திலிருந்து கேட்டது. பிறகு ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்தில் தனியே அனுப்பினார். அந்த வனாந்தரத்தில் இயேசு நாற்பது நாட்கள் இருந்தார். காட்டு மிருகங்களோடு அவர் அங்கே இருந்தார். அவர் அங்கு இருந்தபோது, சாத்தானால் சோதிக்கப்பட்டார். பிறகு தேவதூதர்கள் வந்து அவருக்கு உதவி செய்தார்கள். இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார். “சரியான நேரம் இங்கே இப்பொழுது இருக்கிறது. தேவனுடைய இராஜ்யம் நெருங்கிவிட்டது. உங்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள். நற்செய்தி மீது நம்பிக்கை வையுங்கள்” என்று இயேசு சொன்னார். இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார். அவர்கள் இருவரும் மீன்பிடிப்பவர்கள். அவர்கள் கடலுக்குள் வலையை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இயேசு அவர்களிடம், “வாருங்கள். என்னைப் பின் தொடருங்கள். நான் உங்களை வேறுவிதமான மீன் பிடிப்பவர்களாக மாற்றுவேன். நீங்கள் மீனை அல்ல, மனிதர்களைப் பிடிப்பவர்களாவீர்கள்” என்று கூறினார். ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு, விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர். இயேசு கலிலேயாவின் கடற்கரையோரமாய் தொடர்ந்து நடந்து சென்றார். அவர் செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபு, யோவான் என்னும் சகோதரர்களைக் கண்டார். அவர்களும் படகில் இருந்து கொண்டு மீன்பிடிக்கும் தம் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அவர்களின் தந்தை செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும் சில மீனவர்களும் படகில் இருந்தனர். இயேசு அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி அழைத்தார். அவர்கள் தம் தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இயேசுவும் அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குள் சென்று இயேசு போதனை செய்தார். அங்கே இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்களின் ஏனைய வேதபாரகரைப்போல இயேசு உபதேசிக்கவில்லை. அவர் எல்லா அதிகாரங்களையும் உடையவராக உபதேசித்தார். ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான். அவன், “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் நீர் என்ன விரும்புகிறீர்? எங்களை அழிக்கவா வந்தீர்? நீர் தேவனின் பரிசுத்தர் என்பது எனக்குத் தெரியும்” என்று சத்தமிட்டான். இயேசு பலமான குரலில், “அமைதியாக இரு. இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டார். அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது. மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள், “இங்கு என்ன நடக்கிறது? இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார். இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார். இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார். ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர். எனவே, கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப்பற்றிய செய்தி வேகமாகப் பரவியது. இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள். சீமோனின் மாமியார் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருந்தாள். அவள் படுக்கையில் காய்ச்சலோடு கிடந்தாள். மக்கள் அவரிடம் அவளைப்பற்றிக் கூறினர். எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள். அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர். அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன. மறுநாள் காலையில் இயேசு மிக முன்னதாகவே எழுந்தார். இன்னும் இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனியாக ஓரிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். பிறகு சீமோனும் அவனது நண்பர்களும் இயேசுவைத் தேடிச் சென்றனர். அவரைக் கண்டுபிடித்து, “மக்கள் யாவரும் உமக்காகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றனர். இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார். ஆகையால் இயேசு கலிலேயா எங்கும் பிரயாணம் பண்ணினார். அவர் ஜெப ஆலயங்களில் போதனை செய்தார். அவர் பலவந்தமாகப் பிசாசுகளை, மனிதர்களிடமிருந்து விரட்டினார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்னால் மண்டியிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணப்படுத்தலாம். அதற்குரிய வல்லமை உமக்குண்டு” என்று கெஞ்சினான். அவனுக்காக இயேசு மனமுருகினார். ஆகையால் அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். உடனே நோய் அவனை விட்டுவிலகி அவன் குணமானான். அவனைப் புறப்பட்டுச் செல்லுமாறு இயேசு கூறினார். ஆனால், அவனை அவர் பலமாக எச்சரிக்கையும் செய்தார்: “நான் உனக்காகச் செய்ததை யாரிடமும் சொல்லாதே. ஆனால் நீயாகப் போய் ஆலய ஆசாரியனிடம் காட்டு. தேவனுக்குக் காணிக்கை செலுத்து. ஏனென்றால் நீ குணமடைந்திருக்கிறாய். மோசே ஆணையிட்டபடி காணிக்கை செலுத்து. இதனால் நீ குணமானதை மக்கள் அறிந்து கொள்வார்கள்,” என்று இயேசு கூறினார். அந்த மனிதன் அங்கிருந்து சென்று தான் கண்ட எல்லா மக்களிடமும் இயேசு தன்னைக் குணப்படுத்தியதைப் பற்றிச் சொன்னான். எனவே இயேசுவைப் பற்றிய செய்தி எங்கும் பரவியது. அதனால் இயேசுவால் ஒரு நகரத்துக்குள்ளும் வெளிப்படையாக நுழைய முடியவில்லை. மக்கள் இல்லாத இடங்களில் இயேசு தங்கி இருந்தார். இயேசு எங்கிருந்தாலும் அனைத்து நகரங்களில் இருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர்.