மீகா 7:5-15

மீகா 7:5-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அயலவனை நம்பாதே; சிநேகிதனையும் நம்பவேண்டாம். உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிற மனைவியோடும் உன் வார்த்தைகளைக்குறித்து கவனமாயிரு. ஏனெனில், மகன் தகப்பனை அவமதிக்கிறான்; மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகிறாள்; மருமகள் தன் மாமியாரை எதிர்க்கிறாள்; மனிதனுடைய பகைவர்கள் அவன் வீட்டார்தானே. நானோ, எதிர்பார்ப்புடன் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன். என் இரட்சகராகிய இறைவனுக்காக காத்திருக்கிறேன். என் இறைவன் எனக்குச் செவிகொடுப்பார். எருசலேம் மக்கள் சொல்கிறதாவது: எங்கள் பகைவனே, எங்களை கேலிசெய்து மகிழாதே; நாங்கள் விழுந்தாலும் எழுந்திருப்போம். நாங்கள் இருளில் உட்கார்ந்தாலும் யெகோவா எங்களுக்கு ஒளியாயிருப்பார். நாங்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால், அவரின் கோபத்தைச் சுமப்போம். அவர் எங்களுக்காக வாதாடி, எங்கள் நியாயத்தை நிலைநிறுத்துவார். அவர் எங்களை வெளியே வெளிச்சத்தின் முன் கொண்டுவருவார். நாங்கள் அவரது நீதியைக் காண்போம். அப்பொழுது எங்கள் பகைவன் இதைக்கண்டு வெட்கத்திற்குள்ளாவான். “உங்கள் யெகோவாவாகிய இறைவன் எங்கே?” என்று எங்களிடம் கேட்டவளின் வீழ்ச்சியை எங்கள் கண்கள் காணும். அப்பொழுது அவள் வீதிகளிலுள்ள சேற்றைப்போல் காலின்கீழ் மிதிக்கப்படுவாள். எருசலேம் மக்களே! உங்கள் மதில்களைக் கட்டியெழுப்பும் நாள் வருகிறது, உங்கள் எல்லையை விரிவுபடுத்தும் நாளும் வருகிறது. அந்நாளில் அசீரியாவிலிருந்தும், எகிப்தின் பட்டணங்களிலிருந்தும் உங்கள் மக்கள் உங்களிடம் வருவார்கள். எகிப்து முதல், ஐபிராத்து நதிவரையுள்ள தேசங்களிலிருந்தும், ஒரு கடல் முதல் மறுகடல் வரையுள்ள நாடுகளிலிருந்தும், ஒரு மலை முதல், மறு மலைவரையுள்ள இடங்களிலிருந்தும் உங்கள் மக்கள் அனைவரும் உங்களிடம் கூடிவருவார்கள். ஆயினும் பூமியின் மற்ற பிரதேசங்கள் அங்கு வாழும் மக்களின் தீய செயல்களின் நிமித்தம் பாழாய்ப்போம். யெகோவாவே, ஒரு செழிப்பான மேய்ச்சல் நிலத்திலே வாழ்கிறவர்களான உமது மக்களை, உமது உரிமைச்சொத்தான மந்தையை, உமது கோலினால் மேய்த்துக்கொள்ளும். இவர்கள் முந்தைய நாட்களைப்போல் பாசானிலும், கீலேயாத்திலும் மேயட்டும். “நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய, அந்நாட்களில் இருந்ததைப்போல, நான் உங்களுக்கு என் அதிசயங்களைக் காண்பிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

மீகா 7:5-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறக்காமல் எச்சரிக்கையாயிரு. மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமியாருக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனிதனுடைய எதிரிகள் அவன் வீட்டார்தானே. நானோவென்றால் யெகோவாவை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார். என் எதிரியே, எனக்கு விரோதமாகச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், யெகோவா எனக்கு வெளிச்சமாயிருப்பார். நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்கும்வரை அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன். உன் தேவனாகிய யெகோவா எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் எதிரியானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள். உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போகும். அந்நாளிலே அசீரியா முதல் எகிப்தின் பட்டணங்கள் வரைக்கும், எகிப்து முதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு மலைமுதல் மறு மலைவரைக்குமுள்ள மக்கள் உன்னிடத்திற்கு வருவார்கள். ஆனாலும் தன் குடிமக்களினிமித்தமும் அவர்கள் செயல்களுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும். கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக. நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணச்செய்வேன்.

மீகா 7:5-15 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்களது அயலாரை நம்பாதீர்கள். நண்பர்களை நம்பாதீர்கள். உங்கள் மனைவியிடமும் உண்மையைப் பேசாதீர்கள். ஒருவரின் எதிரிகள் அவனது சொந்த வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள். ஒரு குமாரன் அவனது தந்தையை மதிக்கமாட்டான். ஒரு குமாரத்தி தன் தாய்க்கு எதிராகத் திரும்புவாள். ஒரு மருமகள் தன் மாமியார்க்கு எதிராகத் திரும்புவாள். எனவே, நான் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டுவேன். நான், தேவன் என்னைக் காப்பாற்றுவார் எனக் காத்திருந்தேன். என் தேவன் நான் சொல்வதைக் கேட்பார். நான் விழுந்திருக்கிறேன். ஆனால் பகைவனே, என்னைப் பார்த்துச் சிரிக்காதே, நான் மீண்டும் எழுந்திருப்பேன். நான் இப்பொழுது இருளில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் கர்த்தர் எனக்கு ஒளியாக இருப்பார். நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன். எனவே அவர் என்னோடு கோபமாக இருந்தார். ஆனால் அவர் வழக்கு மன்றத்தில் எனக்காக வாதாடுவார். அவர் எனக்குச் சரியானவற்றை செய்வார். பின்னர் அவர் என்னை வெளிச்சத்திற்குள் கொண்டு வருவார். அவர் சரியானவர் என்று நான் பார்ப்பேன். என் எதிரி என்னிடம், “உன் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்றாள். ஆனால் என் எதிரி இதனைப் பார்ப்பாள். அவள் அவமானம் அடைவாள். அந்த நேரத்தில் நான் அவளைப் பார்த்து சிரிப்பேன். ஜனங்கள் அவளுக்கு மேலே தெருவிலுள்ள புழுதியைப் போன்று நடப்பார்கள். காலம் வரும், உங்களது சுவர்கள் மீண்டும் கட்டப்படும். அந்த நேரத்தில் நாடு வளரும். உனது ஜனங்கள் உன் நாட்டிற்க்குத் திரும்புவார்கள். அவர்கள் அசீரியாவிலிருந்தும் எகிப்தின் நகரங்களிலிருந்தும் திரும்பி வருவார்கள். உனது ஜனங்கள் எகிப்திலிருந்தும் ஐபிராத்து ஆற்றின் அடுத்தப் பக்கத்திலிருந்தும் வருவார்கள். அவர்கள் மேற்கிலுள்ள கடல் பகுதியிலிருந்தும் கிழக்கிலுள்ள மலைகளிலிருந்தும் வருவார்கள். அந்த நிலமானது அங்கு வாழ்ந்த ஜனங்களின் தீய செயல்களால் அழிக்கப்பட்டது. எனவே உனது ஜனங்களை நீ கோலினால் ஆட்சி செய். உனக்குச் சொந்தமான உன் ஜனங்கள் கூட்டத்தை நீ ஆட்சிசெய். அக்கூட்டம் காடுகளிலும், கர்மேல் மலைகளிலும் தனியாக வாழ்கின்றது. பாசானிலும் கீலேயாத்திலும் வாழ்கிற ஜனங்கள் முன்பு மேய்ந்தது போலவே மேய்வார்களாக. நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வரும்போது பல அற்புதங்களைச் செய்தேன். நான் அவற்றைப் போன்று நீங்கள் பல அற்புதங்களைப் பார்க்கும்படிச் செய்வேன்.

மீகா 7:5-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு. மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே. நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார். என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன். உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள். உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போகும். அந்நாளிலே அசீரியா முதல் எகிப்தின் பட்டணங்கள் வரைக்கும், எகிப்து முதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு பர்வதமுதல் மறு பர்வதம்வரைக்குமுள்ள ஜனங்கள் உன்னிடத்திற்கு வருவார்கள். ஆனாலும் தன் குடிகளினிமித்தமும் அவர்கள் கிரியைகளுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும். கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக. நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்