மீகா 7:1-4

மீகா 7:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் அவலநிலைதான் என்ன? கோடைகால அறுப்புக்குப்பின் திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்ட பழங்களைச் சேகரிப்பவன் போலானேன்; சாப்பிடுவதற்கான ஒரு திராட்சைக் குலையும் இல்லை. நான் சாப்பிட ஆசைப்படும், முதலில் பழுத்த அத்திப்பழமும் இல்லை. நாட்டிலிருந்த இறை பக்தியுள்ளோர் அனைவரும் அற்றுப்போனார்கள். நீதிமான் ஒருவனும் இல்லை. எல்லா மனிதருமே இரத்தம் சிந்தப் பதுங்கிக் காத்திருக்கின்றார்கள். ஒவ்வொருவனும் தன் சகோதரனை வலையினால் பிடிக்க முயற்சிக்கிறான். அவர்களின் இரு கைகளுமே தீமை செய்வதில் தேர்ச்சி பெற்றவை. ஆளுநர் அன்பளிப்புகளை வற்புறுத்திக் கேட்கிறான். நீதிபதிகள் இலஞ்சத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் தாம் விரும்புவதையே கட்டளையிடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் ஒன்றிணைந்து சதி செய்கிறார்கள். அவர்களில் சிறந்தவன் எனப்படுபவன் முட்செடி போன்றவன். நீதிமான் முள்வேலியைவிட மிகவும் கூர்மையானவன். இறைவன் உங்களைச் சந்திக்கும் நாள், உங்கள் இறைவாக்கினர் எச்சரித்த அந்த நாள் வந்துவிட்டது. இதுவே அவர்களின் குழப்பத்தின் காலம்.

மீகா 7:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஐயோ, கோடைக்காலத்தின் பழங்களைச் சேர்த்து, திராட்சைபழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; சாப்பிடுவதற்கு ஒரு திராட்சைக்குலையும் என் ஆத்துமா விரும்பிய முதல் அறுப்பின் பழமும் இல்லை. தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனிதர்களில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லோரும் இரத்தம் சிந்தப் பதுங்கியிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். பொல்லாப்புச் செய்வதற்கு அவர்களுடைய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேரும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் தகாத ஆசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாகப் புரட்டுகிறார்கள். அவர்களில் நல்லவன் முட்செடியைப்போன்றவன், செம்மையானவன் நெரிஞ்சிலைவிட மிகவும் கூர்மையானவன்; உன் காவற்காரர்கள் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு.

மீகா 7:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் கலக்கமடைந்தேன். ஏனென்றால், நான் சேகரிக்கப்பட்டிருக்கிற பழங்களைப் போன்றவன். பறிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைப் போன்றவன். உண்பதற்குத் திராட்சைகள் இல்லாமல் போகும். நான் விரும்பும் அத்திப் பழங்கள் இல்லாமல் போகும். நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள். நாட்டில் நல்ல ஜனங்கள் எவரும் மீதியாகவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கொல்ல காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தம் சகோதரர்களை வலையில் பிடிக்க விரும்புகின்றனர். ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்ய நல்லவர்களாக இருக்கிறார்கள். அதிகாரிகள் லஞ்சத்தைக் கேட்கிறார்கள். வழக்கு மன்றத்தில் தீர்ப்பை மாற்ற நீதிபதிகள் பணம் பெறுகிறார்கள். “முக்கியமான தலைவர்கள்” நல்லதும் நேர்மையானதுமான முடிவுகளைச் செய்கிறதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வார்கள். அவர்களில் நல்லவர் கூட முட்புதர் போன்றுள்ளனர். அவர்களில் மிகச் சிறந்தவர்கள் கூட பின்னிப் பிணைந்து கிடக்கும் முட்புதரைவிட வஞ்சகர்களாக இருக்கிறார்கள்.

மீகா 7:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை. தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள். அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கக் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்