மீகா 5:2-12

மீகா 5:2-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ஆனால் எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே, நீ யூதாவின் வம்சங்களில் சிறிதாயிருப்பினும் இஸ்ரயேலின்மேல் என் சார்பாக ஆளுநராக வரப்போகிறவர், உன்னிலிருந்து தோன்றுவார். அவரது புறப்படுதல் பூர்வீக காலங்களான முந்திய காலத்தினுடையது.” பிரசவ வேதனைப்படுபவள் பிள்ளை பெற்றெடுக்கும் வரைக்கும் யெகோவா தம் மக்களை கைவிடுவார். அதன்பின் அவருடைய சகோதரரில் மீதியாயிருப்பவர்கள் இஸ்ரயேலருடன் சேரும்படி திரும்பி வருவார்கள். அந்த ஆளுநர் வரும்போது, அவர் யெகோவாவின் வல்லமையுடனும், தமது இறைவனாகிய யெகோவாவின் பெயரின் மகிமையுடனும் நின்று தமது மந்தையை மேய்ப்பார். அப்பொழுது அவருடைய மக்கள் பாதுகாப்பாய் வாழ்வார்கள். அவருடைய மேன்மை பூமியின் கடைசிவரை எட்டும். அவரே அவர்களுடைய சமாதானமாயிருப்பார். நமது நாட்டின்மேல் அசீரியன் படையெடுத்து, நமது அரண்மனைகளை மிதிக்கும்போது, நாங்கள் அவனுக்கு எதிராக ஏழு மேய்ப்பர்களையும், எட்டு தலைவர்களையும் எழுப்புவோம். அவர்கள் அசீரிய நாட்டை வாளினால் ஆளுகை செய்வார்கள். நிம்ரோத் நாட்டை, உருவிய வாளினால் ஆளுகை செய்வார்கள். அசீரியன் எங்கள் நாட்டின்மேல் படையெடுத்து, எங்கள் எல்லைகளில் அணிவகுத்து வரும்போது, அவர் எங்களை விடுவிப்பார். அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர், மக்கள் கூட்டங்களிடையே யெகோவாவிடமிருந்து வரும் பனியைப்போல் இருப்பார்கள், அவர்கள் மனிதனுக்காகக் காத்திராமலும், மனுக்குலத்துக்காகத் தாமதியாமலும் புல்லின்மேல் பெய்யும் மழையைப்போல் இருப்பார்கள். எனவே, யாக்கோபில் மீதியானோர், நாடுகளின் மத்தியில் திரளான மக்களின் நடுவிலே இருப்பார்கள். அவர்கள் காட்டு மிருகங்களின் நடுவில் இருக்கும் சிங்கம் போலவும், செம்மறியாட்டு மந்தைகளுக்கிடையில் புகுந்து கிழித்துச் சிதைக்கிற, சிங்கக் குட்டியைப்போலவும் இருப்பார்கள். ஒருவனாலும் அந்நாடுகளைக் காப்பாற்ற முடியாதிருக்கும். அவர்களுடைய கை அவர்கள் பகைவர்களுக்கு மேலாக வெற்றியுடன் உயர்த்தப்படும். அவர்களுடைய எதிரிகள் எல்லோருமே அழிக்கப்படுவார்கள். யெகோவா இஸ்ரயேலுக்கு அறிவிக்கிறதாவது: “அந்த நாளில் உன் மத்தியிலிருந்து போர்க் குதிரைகளை அழிப்பேன். உன் தேர்ப் படைகளை அழித்தொழிப்பேன். உன் நாட்டிலுள்ள நகரங்களின் அரண்களையும், உன் கோட்டைகளையும் எடுத்துப்போடுவேன். உன் மாயவித்தையை அழிப்பேன். மந்திரம் செய்யும் ஆற்றல் இனி உன் மத்தியில் காணப்படமாட்டாது.

மீகா 5:2-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கும்வரை அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களில் மீதியானவர்கள் இஸ்ரவேல் மக்களோடு திரும்புவார்கள். அவர் நின்றுகொண்டு, யெகோவாவுடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் முழுவதிலும் மகிமைப்படுவார். இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பர்களையும் மனிதர்களில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன். இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார். யாக்கோபிலே மீதியானவர்கள் யெகோவாலே வருகிற பனியைப்போலவும், மனிதனுக்குக் காத்திருக்காமலும், மனுமக்களுக்குத் தாமதிக்காமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள். யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும் மக்களுக்குள் அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள். உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் எதிரிகளெல்லோரும் அழிக்கப்படுவார்கள். அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராமல் அழித்து, உன் இரதங்களை அழித்து, உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து, சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.

மீகா 5:2-12 பரிசுத்த பைபிள் (TAERV)

எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லேகேமே, நீதான் யூதாவிலேயே சிறிய நகரம். உனது குடும்பம் எண்ண முடியாத அளவிற்குச் சிறியது, ஆனால் “இஸ்ரவேலை ஆள்பவர்” எனக்காக உங்களிடமிருந்து வருவார். அவரது துவக்கங்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவும் பழங்காலத்திலிருந்தும் இருக்கின்றன. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ராஜாவாகிய குழந்தையை, அந்தப் பெண் பெற்றெடுக்கும்வரை கர்த்தர் தமது ஜனங்களை கைவிட்டுவிடுவார். பிறகு மீதியுள்ள அவனது மற்ற சகோதரர்கள் இஸ்ரவேலுக்கு திரும்பி வருவார்கள். பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர் நின்று மந்தைகளை மேய்ப்பார். அவர் அவர்களை கர்த்தருடைய ஆற்றலால், தேவனாகிய கர்த்தருடைய அற்புதமான நாமத்தால் அவர்களை வழிநடத்துவார். ஆம், அவர்கள் சமாதானமாக வாழ்வார்கள். ஏனென்றால் அந்த நேரத்தில், அவரது மகிமை பூமியின் எல்லைவரை செல்லும். ஆமாம், நமது நாட்டிற்குள் அசீரியன் படை வரும். அப்படை நமது பெரிய வீடுகளை அழிக்கும். ஆனால், இஸ்ரவேலரின் ஆள்பவர் ஏழு மேய்ப்பர்களையும் அவர் எட்டுத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பார். அவர்கள் தமது வாள்களைப் பயன்படுத்தி அசீரியர்களை ஆள்வார்கள். அவர்கள் கையில் வாள்களுடன் நிம்ரோதின் தேசத்தை ஆள்வார்கள். அவர்கள் அந்த ஜனங்களை ஆள தமது வாள்களைப் பயன்படுத்துவார்கள். பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர், நமது நாட்டிற்குள் வந்து எல்லைகளையும் நிலங்களையும் வீடுகளை மிதிக்கும் அசீரியர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார். பிறகு யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தரிடமிருந்து வருகிற பனியைப்போன்று ஜனங்களிடையே சிதறிப்போவர்கள். அவர்கள், புல்லின் மேல் விழுகிற பனியைப் போன்று ஜனங்களிடையே இருப்பார்கள். அவர்கள் எவருக்காகவும் காத்திருக்கமாட்டார்கள். அவர்கள் எவருக்காகவும் எந்த மனிதன் மேலும் சார்ந்திருக்கமாட்டார்கள். யாக்கோபிலே மீதமானவர்கள், காட்டு மிருகங்களிடையே உள்ள சிங்கத்தைப் போன்று பல தேசங்களிடையே இருப்பார்கள். அவர்கள் ஆட்டு மந்தைகளிடையே உள்ள இளஞ்சிங்கத்தைப் போன்று இருப்பார்கள். சிங்கம் கடந்து போனாலும் அது தான் விரும்பிய இடத்துக்குப் போகும். அது ஒரு மிருகத்தைத் தாக்கினால், எவராலும் அந்த மிருகத்தைக் காப்பாற்ற முடியாது. மீதமானவர்களும் அவ்வாறே இருப்பார்கள். நீங்கள் உங்களது பகைவருக்கு எதிராகக் கைகளைத் தூக்கி அவர்களை அழிப்பீர்கள். “நான் அந்த வேளையில் உங்கள் குதிரைகளை உங்களிடமிருந்து அபகரிப்பேன். நான் உங்கள் இரதங்களை அழிப்பேன். நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன். நான் உங்கள் கோட்டைகளையெல்லாம் நொறுக்குவேன். நீங்கள் இனிமேல் சூன்ய வித்தைகளை செய்யமாட்டீர்கள். நீங்கள் இனிமேல் எதிர்காலத்தைப் பற்றி குறி சொல்லும் ஆட்களைப் பெற்றிருக்கமாட்டீர்கள்.

மீகா 5:2-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள். அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார். இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன். இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார். யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள். யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள். உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள். அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து, உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி, சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்