மீகா 5:10-15

மீகா 5:10-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா இஸ்ரயேலுக்கு அறிவிக்கிறதாவது: “அந்த நாளில் உன் மத்தியிலிருந்து போர்க் குதிரைகளை அழிப்பேன். உன் தேர்ப் படைகளை அழித்தொழிப்பேன். உன் நாட்டிலுள்ள நகரங்களின் அரண்களையும், உன் கோட்டைகளையும் எடுத்துப்போடுவேன். உன் மாயவித்தையை அழிப்பேன். மந்திரம் செய்யும் ஆற்றல் இனி உன் மத்தியில் காணப்படமாட்டாது. நான் உனது செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும், புனித கற்களையும் உன் மத்தியிலிருந்து அழிப்பேன். நீ இனிமேலும் உன் கைகளின் வேலையான விக்கிரகங்களை விழுந்து வணங்கமாட்டாய். உன் மத்தியிலுள்ள வழிபாட்டு அசேரா தேவதைத் தூண்களைப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்தொழிப்பேன். அத்துடன் எனக்குக் கீழ்ப்படியாத எல்லா மக்களையும் கோபத்தோடும், கடுஞ்சினத்தோடும் பழிவாங்குவேன்.”

மீகா 5:10-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராமல் அழித்து, உன் இரதங்களை அழித்து, உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து, சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள். உன் வார்ப்பிக்கப்பட்ட சிலைகளையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் படைப்புகளை நீ இனிப் பணிந்துகொள்ளமாட்டாய். நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இல்லாமல் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து, செவிகொடுக்காத அந்நிய மக்களிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.

மீகா 5:10-15 பரிசுத்த பைபிள் (TAERV)

“நான் அந்த வேளையில் உங்கள் குதிரைகளை உங்களிடமிருந்து அபகரிப்பேன். நான் உங்கள் இரதங்களை அழிப்பேன். நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன். நான் உங்கள் கோட்டைகளையெல்லாம் நொறுக்குவேன். நீங்கள் இனிமேல் சூன்ய வித்தைகளை செய்யமாட்டீர்கள். நீங்கள் இனிமேல் எதிர்காலத்தைப் பற்றி குறி சொல்லும் ஆட்களைப் பெற்றிருக்கமாட்டீர்கள். நான் உங்களது அந்நிய தெய்வங்களின் உருவச் சிலைகளை உடைத்தெறிவேன். சிலைகளை அழிப்பேன். அந்நிய தெய்வங்களை நினைவுப்படுத்தும் கற்களை நான் உடைத்தெறிவேன். உங்கள் கைளால் செய்யப்பட்டவற்றை நீங்கள் வழிபடமாட்டீர்கள். நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன். நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன். சில ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். நான் எனது கோபத்தைக் காட்டுவேன். நான் அந்த தேசங்களைப் பழிவாங்குவேன்.”

மீகா 5:10-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து, உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி, சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள். உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய். நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து, செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.