மீகா 4:9-13

மீகா 4:9-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்போதும் நீ சத்தமிட்டுக் கதறுவானேன்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற ஸ்திரீக்கு ஒத்த வேதனை உனக்கு உண்டாகும். சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார். சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய ஆஸ்தியை பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.

மீகா 4:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இப்பொழுது நீ ஏன் சத்தமிட்டு அழுகிறாய்? பிரசவிக்கும் பெண்ணைப்போல் ஏன் வேதனைப்படுகிறாய்? உனக்கு அரசன் இல்லையோ? உன் ஆலோசகனும் அழிந்து போனானோ? சீயோன் மகளே, பிரசவிக்கும் பெண்ணைப்போல் துடித்து வேதனைப்படு. ஏனெனில் நீ நகரத்தைவிட்டு விரைவில் வெளியே போகவேண்டும். திறந்தவெளியில் முகாமிடவேண்டும். நீ பாபிலோனுக்குப் போவாய். ஆனால் அங்கிருந்து நீ தப்புவிக்கப்படுவாய். உன் பகைவர்களின் கைகளினின்றும் யெகோவாவாகிய நானே உன்னை மீட்டுக்கொள்வேன். ஆனால், இப்பொழுது அநேக நாடுகள் உனக்கெதிராய் கூடியிருக்கிறார்கள். அவர்கள், “சீயோன் மாசுபடட்டும், நம் கண்கள் அதைக்கண்டு கேலிசெய்து மகிழட்டும்” என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களோ, யெகோவாவின் சிந்தனைகளை அறியாதிருக்கிறார்கள். அவரது திட்டத்தையும் அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. அவர் அவர்களைக் கதிர்க்கட்டுகளைப்போல் ஒன்றுசேர்த்து சூடடிக்கும் களத்திற்கு அடிக்கக்கொண்டு வருவார். யெகோவா சொல்கிறதாவது: “சீயோன் மகளே, எழுந்து போரடி. நான் உனக்கு இரும்பு கொம்புகளைக் கொடுப்பேன். நான் உனக்கு வெண்கல குளம்புகளைக் கொடுப்பேன். அவற்றால் நீ அநேக மக்கள் நாடுகளை மிதித்துத் துண்டுகளாக நொறுக்குவாய். அவர்கள் நல்லதல்லாத வழியில் சம்பாதித்த ஆதாயத்தையும், அவர்களின் செல்வத்தையும் பூமி முழுவதற்கும் யெகோவாவாகிய எனக்கே ஒப்படைப்பாய்.”

மீகா 4:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும். மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார். மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.

மீகா 4:9-13 பரிசுத்த பைபிள் (TAERV)

இப்பொழுது எதற்காக நீ உரக்க கதறுகிறாய். உங்கள் ராஜா போய்விட்டானா? உங்கள் தலைவரை இழந்து விட்டீர்களா? நீங்கள் பிரசவ வேதனைப்படும் பெண்ணைப் போன்று துக்கப்படுகிறீர்கள். சீயோன் மகளே, வலியை உணர்ந்துக் கொண்டு உங்கள் “குழந்தையை” பெற்றெடுங்கள். நீங்கள் நகரை விட்டு (எருசலேம்) வெளியே போகவேண்டும். நீங்கள் வயல் வெளியில் போவீர்கள். நீங்கள் பாபிலோனுக்குப் போகவேண்டும் எனக் கருதுகிறேன். ஆனால் நீங்கள் அந்த இடத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள். கர்த்தர் அங்கே போய் உங்களைக் காப்பார். அவர் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து எடுப்பார். பல நாட்டினர் உங்களுக்கு எதிராகப் போரிட வந்திருக்கின்றனர். அவர்கள், “பாருங்கள், அங்கே சீயோன் இருக்கிறது. அவளைத் தாக்குவோம்!” என்கிறார்கள். அந்த ஜனங்கள் அவர்களின் திட்டங்களை வைத்துள்ளனர். ஆனால் கர்த்தர் என்ன திட்டமிட்டுக்கொண்டிருகிறார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். கர்த்தர் அந்த ஜனங்களை ஒரு சிறப்பான நோக்கத்திற்காக இங்கே கொண்டுவந்தார். அந்த ஜனங்கள் அரவை எந்திரத்தில் போடப்பட்ட தானியத்தைப் போன்று நசுக்கப்படுவார்கள். “சீயோன் குமாரத்தியே, எழுந்து அந்த ஜனங்களை நசுக்கு. நான் உன்னைப் பலமுள்ளதாக்குவேன். உனக்கு இரும்பினாலான கொம்புகளும், வெண்கலத்தாலான குளம்புகள் உள்ளது போன்றும் இருக்கும். நீ பல மக்களை அடித்துச் சிறிய துண்டுகளாக்குவாய். அவர்களின் செல்வத்தை கர்த்தருக்குக் கொடுப்பாய். பூமிக்கெல்லாம் கர்த்தராய் இருப்பவர்க்கு அவர்களுடைய பொக்கிஷத்தை நீ கொடுப்பாய்.”