மீகா 3:1-4

மீகா 3:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது நான் சொன்னதாவது: “யாக்கோபின் தலைவர்களே; இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே கேளுங்கள். நீதியை நிலைநாட்டுவது உங்கள் கடமையல்லவா, ஆனால் நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையையே நேசிக்கிறீர்கள். என் மக்களின் தோலையும், அவர்கள் எலும்புகளிலிருந்து சதையையும் கிழித்து எடுக்கிறீர்கள். என் மக்களின் சதையைச் சாப்பிட்டு, அவர்களின் தோலையெல்லாம் உரித்து, எலும்புகளைத் துண்டுகளாக நொறுக்குகிறீர்கள். சட்டியில் போடும் இறைச்சியைப் போலவும், பானையில் போடும் சதையைப் போலவும் அவர்களை வெட்டுகிறீர்கள்.” ஆனாலும், நாட்கள் வருகின்றன. அப்பொழுது நீங்கள் யெகோவாவிடம் கூக்குரலிடுவீர்கள். ஆனால் அவர் பதிலளிக்கவே மாட்டார். அக்காலத்தில் நீங்கள் செய்த தீமைக்காக அவர் தமது முகத்தை உங்களுக்கு மறைத்துக்கொள்வார்.

மீகா 3:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ உரியது. ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும், அவர்களுடைய எலும்புகள்மேல் இருக்கிற சதையையும் பிடுங்கி, என் மக்களின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, எலும்புகளை முறித்து, பானையிலே போடுவதுபோலவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடுவதுபோலவும் அவைகளை வெட்டுகிறார்கள். அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் செயல்களில் பொல்லாதவர்களாக இருப்பதினால், அவர் அவர்களுக்கு மறுமொழி கொடுக்காமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.

மீகா 3:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு நான் சொன்னேன்: “இஸ்ரவேல் நாட்டின் தலைவர்களே! மற்றும் இஸ்ரவேல் நாட்டின் அதிகாரிகளே, இப்போது கவனியுங்கள் நீதி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரிய வேண்டும். ஆனால் நீங்கள் நல்லவற்றை வெறுத்து தீமையை நேசிக்கிறீர்கள். நீங்கள் ஜனங்களின் தோலை உரிப்பீர்கள். அவர்களின் எலும்புகளில் உள்ள தசையைப் பிடுங்குவீர்கள். நீங்கள் எனது ஜனங்களை அழித்தீர்கள். அவர்களின் தோலை நீக்குவீர்கள். அவர்களின் எலும்பை உடைத்தீர்கள். நீங்கள் அவர்களது சதையை பானையில் போடப்படும் மாமிசத்தைப்போன்று துண்டு பண்ணினீர்கள். எனவே, நீங்கள் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் அவர் பதில் சொல்லமாட்டார். இல்லை, கர்த்தர் உங்களிடமிருந்து தன் முகத்தை மறைத்துக்கொள்வார். ஏனென்றால் நீங்கள் தீயவற்றைச் செய்கிறீர்கள்!”

மீகா 3:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது. ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி, என் ஜனத்தின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, அவர்கள் எலும்புகளை முறித்து, பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள். அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்