மீகா 3:1-12

மீகா 3:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது. ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி, என் ஜனத்தின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, அவர்கள் எலும்புகளை முறித்து, பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள். அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார். தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தரிசனங்காணக்கூடாத இராத்திரியும், குறிசொல்லக்கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப்போகும். தரிசனம்பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நாணி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள். நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன். நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி, சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள். அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள். ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போகும், ஆலயத்தின் பர்வதம் காட்டு மேடுகளாய்ப்போகும்.

மீகா 3:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது நான் சொன்னதாவது: “யாக்கோபின் தலைவர்களே; இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே கேளுங்கள். நீதியை நிலைநாட்டுவது உங்கள் கடமையல்லவா, ஆனால் நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையையே நேசிக்கிறீர்கள். என் மக்களின் தோலையும், அவர்கள் எலும்புகளிலிருந்து சதையையும் கிழித்து எடுக்கிறீர்கள். என் மக்களின் சதையைச் சாப்பிட்டு, அவர்களின் தோலையெல்லாம் உரித்து, எலும்புகளைத் துண்டுகளாக நொறுக்குகிறீர்கள். சட்டியில் போடும் இறைச்சியைப் போலவும், பானையில் போடும் சதையைப் போலவும் அவர்களை வெட்டுகிறீர்கள்.” ஆனாலும், நாட்கள் வருகின்றன. அப்பொழுது நீங்கள் யெகோவாவிடம் கூக்குரலிடுவீர்கள். ஆனால் அவர் பதிலளிக்கவே மாட்டார். அக்காலத்தில் நீங்கள் செய்த தீமைக்காக அவர் தமது முகத்தை உங்களுக்கு மறைத்துக்கொள்வார். யெகோவா சொல்வது இதுவே: எனது மக்களைத் தவறான வழியில் நடத்துகிற “பொய்த் தீர்க்கதரிசிகளைக் குறித்துச் சொல்கிறதாவது, ஒருவன் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தால், ‘சமாதானம்’ என்று பிரசித்தப் படுத்துகிறார்கள். அப்படிக் கொடுக்காவிட்டால், அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆயத்தமாகிறார்கள். ஆதலால் தரிசனங்கள் அற்ற இரவும், குறிபார்க்க முடியாத இருளும் அவர்கள்மேல் வரும். பொய்த் தீர்க்கதரிசிகளுக்குச் சூரியன் மறைந்து, பகலும் அவர்களுக்கு இருண்டுபோகும். தரிசனங்கள் காண்பவர்கள் வெட்கமடைவார்கள். குறிசொல்பவர்கள் அவமானம் அடைவார்கள். இறைவனிடமிருந்து பதில் கிடைக்காதபடியால், அவர்கள் எல்லோரும் தங்கள் முகங்களை மூடிக்கொள்வார்கள்” என்று யெகோவா சொல்கிறார். ஆனால் நானோ யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரயேலுக்கு அவன் பாவங்களையும் அறிவிக்கும்படி, யெகோவாவின் ஆவியானவரால் வல்லமையுடன் நிரப்பப்பட்டிருக்கிறேன். அவர் என்னை நீதியினாலும், பெலத்தினாலும் நிறைத்திருக்கிறார். ஆகவே யாக்கோபு குடும்பத்தின் தலைவர்களே, இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே, நீதியை உதாசீனம்பண்ணி, நியாயமானவற்றையெல்லாம் புரட்டுகிற நீங்கள் இதைக் கேளுங்கள். இரத்தம் சிந்துதலினால் சீயோனையும், கொடுமையினால் எருசலேமையும் கட்டுகிறவர்களே கேளுங்கள். உங்கள் தலைவர்கள் இலஞ்சத்திற்காக நியாயந்தீர்க்கின்றார்கள். உங்கள் ஆசாரியர்கள் கூலிக்குக் போதிக்கின்றார்கள். உங்கள் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்கிறார்கள். ஆயினும் அவர்கள் யெகோவாவிடம் சார்ந்துகொண்டு, “யெகோவா நம் மத்தியில் இல்லையோ? பேராபத்து நமக்கு உண்டாகாது” என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆகையால் இஸ்ரயேல் ஆளுநர்களே, உங்கள் செயல்களின் நிமித்தம், சீயோன் வயலைப்போல உழப்படும், எருசலேம் மண்மேடுகளாகும், ஆலயம் அமைந்துள்ள மலை, புல் அடர்ந்த காடாகும்.

மீகா 3:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ உரியது. ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும், அவர்களுடைய எலும்புகள்மேல் இருக்கிற சதையையும் பிடுங்கி, என் மக்களின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, எலும்புகளை முறித்து, பானையிலே போடுவதுபோலவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடுவதுபோலவும் அவைகளை வெட்டுகிறார்கள். அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் செயல்களில் பொல்லாதவர்களாக இருப்பதினால், அவர் அவர்களுக்கு மறுமொழி கொடுக்காமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார். தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடுக்காதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தமாகி, என் மக்களை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தரிசனம் காணமுடியாத இரவும், குறிசொல்லமுடியாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் மறைந்து, அவர்கள்மேல் பகல் மிகவும் இருளாகப்போகும். தரிசனம்பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டு, குறிசொல்லுகிறவர்கள் நாணமடைந்து, உத்திரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் அனைவரும் தங்கள் வாயை மூடிக்கொள்வார்கள். நானோ, யாக்கோபுக்கு அவனுடைய மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவனுடைய பாவத்தையும் அறிவிப்பதற்காக, யெகோவாவுடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன். நியாயத்தை வெறுத்து, ஒழுங்கானவைகளையெல்லாம் கோணலாக்கி, சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுகிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள். அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள். ஆகையால் உங்களால் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகப்போகும், ஆலயத்தின் மலை, காட்டு மேடுகளைப்போலாகும்.

மீகா 3:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு நான் சொன்னேன்: “இஸ்ரவேல் நாட்டின் தலைவர்களே! மற்றும் இஸ்ரவேல் நாட்டின் அதிகாரிகளே, இப்போது கவனியுங்கள் நீதி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரிய வேண்டும். ஆனால் நீங்கள் நல்லவற்றை வெறுத்து தீமையை நேசிக்கிறீர்கள். நீங்கள் ஜனங்களின் தோலை உரிப்பீர்கள். அவர்களின் எலும்புகளில் உள்ள தசையைப் பிடுங்குவீர்கள். நீங்கள் எனது ஜனங்களை அழித்தீர்கள். அவர்களின் தோலை நீக்குவீர்கள். அவர்களின் எலும்பை உடைத்தீர்கள். நீங்கள் அவர்களது சதையை பானையில் போடப்படும் மாமிசத்தைப்போன்று துண்டு பண்ணினீர்கள். எனவே, நீங்கள் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் அவர் பதில் சொல்லமாட்டார். இல்லை, கர்த்தர் உங்களிடமிருந்து தன் முகத்தை மறைத்துக்கொள்வார். ஏனென்றால் நீங்கள் தீயவற்றைச் செய்கிறீர்கள்!” சில பொய்த் தீர்க்கதரிகள் கர்த்தருடைய ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். கர்த்தர் அந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றி இதனைச் சொல்கிறார். “இந்தத் தீர்க்கதரிசிகள் வயிற்றுக்காக உழைக்கிறவர்கள். உணவு கொடுக்கும் ஜனங்களுக்குச் சமாதானம் வரும் என்று உறுதி கூறுவார்கள். ஆனால் உணவு கொடுக்காதவர்களிடத்தில் அவர்களுக்கு எதிராக போர் வரும் என்று உறுதி கூறுவார்கள். “அதனால்தான் இது உங்களுக்கு இரவைப் போன்றது. அதனால்தான் உங்களுக்குத் தரிசனம் கிடைப்பதில்லை. எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதைப் பற்றிய தரிசனத்தை நீங்கள் பார்க்க முடியாது. எனவே இது உனக்கு அந்தகாரம் போன்றது. இந்தச் சூரியன் தீர்க்கதரிசிகள் மேல் அஸ்தமித்திருக்கிறது. அவர்களால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்க்க முடியாது. எனவே, இது அவர்களுக்கு அந்தகாரம் போன்றிருக்கும். தீர்க்கதரிசிகள் வெட்கப்படுகிறார்கள். திர் காலத்தை குறித்து சொல்கிறவர்கள் அவமானப்படுகிறார்கள். அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் தேவன் அவர்களோடு பேசமாட்டார்.” ஆனால் கர்த்தருடைய ஆவி என்னை நன்மையினாலும், பலத்தினாலும், வல்லமையினாலும் நிரப்பியிருக்கிறது. ஏன்? அதனால் நான் யாக்கோபிடம் அவனது பாவங்களைச் சொல்லுவேன். ஆமாம், நான் இஸ்ரவேலிடம் அவனது பாவங்களைச் சொல்லுவேன்! யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேலின் ஆள்வோர்களே, என்னைக் கவனியுங்கள். நீங்கள் முறையான வாழ்வை வெறுக்கீறீர்கள். ஏதாவது ஒன்று நேராக இருந்தால் நீங்கள் அதை கோணலாக மாற்றுகிறீர்கள். நீங்கள் ஜனங்களைக் கொன்று, சீயோனைக் கட்டுகிறீர்கள். ஜனங்களை ஏமாற்றி எருசலேமைக் கட்டுகிறீர்கள். எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார் வெல்வார்கள் என்று சொல்ல உதவிட லஞ்சம் பெறுகிறார்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கு முன்னால் பணம் பெறுகிறார்கள். ஜனங்களின் தீர்க்கதரிசிகளுக்கு எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் பணம் கொடுக்கவேண்டும். பிறகு அந்தத் தலைவர்கள் கர்த்தருடைய உதவியை எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள், “எங்களுக்கு தீயவை எதுவும் நடக்காது. கர்த்தர் எங்களோடு வாழ்கிறார்” என்றனர். தலைவர்களே, உங்களால், சீயோன் அழிக்கப்படும். இது உழப்பட்ட வயல் போன்றிருக்கும். எருசலேம் கற்களின் குவியலாய் மாறும். ஆலயம் உள்ள மலைகள் காட்டு முட்புதர்கள் அதிகம் வளர்ந்து வெறுமையான மலையாகும்.