மீகா 2:1-13

மீகா 2:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து, வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ! ஆகையால் கர்த்தர்: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாய்த் தீமையை வருவிக்க நினைக்கிறேன்; அதினின்று நீங்கள் கழுத்தை நீக்கமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாய் நடப்பதில்லை; அது தீமையான காலம். அந்நாளில் உங்கள்பேரில் ஒப்புச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது ஜனத்தின் சுதந்தரத்தை மாற்றிப்போட்டார்; என்னமாய் அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாய்ப் புலம்புவார்கள். கர்த்தரின் சபையில் சுதந்தரவீதங்களை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள். தீர்க்கதரிசனஞ் சொல்லாதிருப்பீர்களாக என்கிறார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், இந்தப்பிரகாரமாய் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லாவிட்டால் நிந்தை நீங்காதே. யாக்கோபு வம்சம் என்று பேர் பெற்றவர்களே, கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? என் ஜனங்கள் பூர்வமுதல் சத்துருவைப்போல் எழும்பினார்கள். யுத்தத்திலிருந்து திரும்பிவந்து வழியில் அஞ்சாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் வஸ்திரத்தையும் உரிந்துகொண்டீர்கள். என் ஜனத்தின் ஸ்திரீகளை அவர்களுடைய சௌக்கியமான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள். எழுந்திருந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை நாசப்படுத்தும், அந்த நாசம் மிகவும் கொடியதாயிருக்கும். மனம்போகிறபோக்கின்படி போய், அபத்தமானதை உரைக்கிற ஒருவன், திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த ஜனத்திற்கு ஏற்ற பிரசங்கியாயிருப்பான். யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலின் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும். தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.

மீகா 2:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தங்கள் படுக்கைகளிலிருந்து எழும்புவதற்கு முன்பே தீமையான சூழ்ச்சிசெய்து, அநியாயத்தைத் திட்டமிடுகிறவர்களுக்கு ஐயோ கேடு, அதைச் செய்யத்தக்க பலம் அவர்களில் இருப்பதனால் விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்துகிறார்கள். வயல்களை ஆசைப்பட்டு, அவற்றைப் பறித்துக்கொள்கிறார்கள். வீடுகளையும் அநீதியாய் எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவனுடைய வீட்டையும், அவனுடைய சொத்தையும் ஏமாற்றிப் பறிக்கிறார்கள். ஆகையால் யெகோவா சொல்கிறதாவது: “இந்த மக்களுக்கு எதிராக ஒரு பேராபத்தைத் திட்டமிட்டிருக்கிறேன், அதிலிருந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாது. இனிமேல் நீங்கள் பெருமையாய் நடக்கவும் முடியாது. ஏனெனில் அது பேரழிவின் காலமாயிருக்கும். அந்த நாள் வரும்போது மனிதர் உங்களை இழிவாகப் பேசுவார்கள்; அவர்கள் உங்கள்மீது புலம்பல் பாடுவார்கள். இந்த விதமாய் நீங்கள் பாடுவதுபோல் பாடி கேலி செய்வார்கள்: ‘நாம் முற்றிலும் பாழானோம்; நமது மக்களின் உடைமைகள் பிரித்துக்கொடுக்கப்பட்டன. யெகோவா நம்மிடமிருந்து அதை எடுத்துக்கொள்கிறார்! நம் வயல்வெளிகளையோ அவர் நமது எதிரிகளுக்குக் கொடுக்கிறார்’ ” என்று புலம்புவார்கள். ஆதலால் நிலத்தைச் சீட்டுப்போட்டு பாகம் பிரித்து யெகோவாவின் சபையில் உள்ளவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது, அதைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களில் ஒருவனும் இருக்கமாட்டான். மக்களின் தீர்க்கதரிசிகளே, “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள், இவற்றைக் குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள். அவமானம் எங்கள்மேல் வரமாட்டாது” என்று எனக்குச் சொல்கிறீர்கள். மேலும் நீங்கள், யாக்கோபின் வீட்டாரே, “யெகோவாவின் ஆவியானவர் கோபம் கொண்டுள்ளாரோ? அவர் இப்படியானவற்றைச் செய்கிறவரோ?” “நீதியான வழியில் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மையைச் செய்யாதோ? என்று அவர் சொல்கிறார் அல்லவா” என்றும் சொல்கிறீர்கள். அதற்கு யெகோவா சொல்கிறதாவது, அண்மைக்காலமாக நீங்கள் என் மக்களுக்கெதிராக ஒரு பகைவனைப் போல் எழும்பியிருக்கிறீர்கள். நீங்கள் போரிலிருந்து திரும்பி வருகிறவர்களைப்போல் நடந்து, கவலையின்றி போகிறவனிடமிருந்து, விலையுயர்ந்த அங்கியை உரிந்து எடுக்கிறீர்கள். என் மக்களுள் இருக்கும் பெண்களை, அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்த வீடுகளிலிருந்து நீங்கள் துரத்திவிடுகிறீர்கள். அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்தும், என் ஆசீர்வாதங்களை என்றென்றுமாய் எடுத்துப் போடுகிறீர்கள். எழுந்து போய்விடுங்கள், இது உங்கள் இளைப்பாறுதலின் இடமல்ல, ஏனெனில் இது உங்கள் பாவங்களால் கறைப்பட்டு திருத்த முடியாத அளவு பாழாய்ப் போய்விட்டது. என் மக்களே, பொய்யனும் வஞ்சகனுமான ஒருவன் உங்களிடம் வந்து, “உங்களுக்கு அதிக திராட்சை இரசமும், மதுபானமும் கிடைக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்” என்பானாயின் அவனே உங்களுக்கு ஒரு சரியான தீர்க்கதரிசி. யாக்கோபே, ஒரு நாளில் உங்கள் எல்லோரையும் நிச்சயமாகவே நான் ஒன்றுசேர்ப்பேன், இஸ்ரயேலில் எஞ்சியோரை நிச்சயமாகவே நான் ஒன்றுகூட்டுவேன். நான் தொழுவத்தின் செம்மறியாடுகளைப் போலவும், மேய்ச்சல் நிலத்தின் மந்தைகளைப் போலவும் அவர்களை ஒன்றாய் கொண்டுவருவேன். அந்த இடம் மக்களால் நிறைந்திருக்கும். அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்துகிறவர் அவர்கள் முன்செல்வார்; அவர்கள் சிறையிருப்பின் வாசலை உடைத்து வெளியேறுவார்கள். அவர்களின் அரசன் அவர்களுக்கு முன்பாகக் கடந்துபோவான்; யெகோவாவே அவர்களை முன்நின்று வழிநடத்திச் செல்வார்.

மீகா 2:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய திட்டமிட்டுத் தங்கள் கையில் வல்லமை இருக்கிறதினால், விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்தி, வயல்களை விரும்பி அவைகளைப் பறித்துக்கொண்டு, வீடுகளை விரும்பி அவைகளை எடுத்துக்கொண்டு, மனிதனையும் அவனுடைய வீட்டையும், குடும்பங்களையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ, ஆகையால் யெகோவா: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாகத் தீமையை வரச்செய்ய நினைக்கிறேன்; அதிலிருந்து நீங்கள் தப்பமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாக நடப்பதில்லை; அது தீமையான காலம். அந்நாளில் உங்களை உதாரணமாகச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது மக்களின் எல்லையை மாற்றிப்போட்டார்; எப்படியாக அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாகப் புலம்புவார்கள். யெகோவாவின் சபையில் நிலங்களை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள். தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பீர்களாக என்கிறார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள், இந்தவிதமாக அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லாவிட்டால் பழிச்சொல் நீங்காதே. யாக்கோபு வம்சம் என்று பெயர் பெற்றவர்களே, யெகோவாவின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய செயல்கள் இவைகள்தானோ? செம்மையாக நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? என் மக்கள் ஆரம்பம்முதல் எதிரியைப்போல் எழும்பினார்கள். போரிலிருந்து திரும்பிவந்து வழியில் பயப்படாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் ஆடையையும் உரிந்துகொண்டீர்கள். என் மக்களின் பெண்களை அவர்களுடைய வசதியான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள். எழுந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை அழித்துவிடும், அந்த நாசம் மிகவும் கொடியதாக இருக்கும். மனம்போகிற போக்கிலே போய், பொய்யானதைச் சொல்லுகிற ஒருவன், திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த மக்களுக்கு ஏற்ற பிரசங்கியாக இருப்பான். யாக்கோபின் மக்களே, உங்களெல்லோரையும் நான் நிச்சயமாகக் கூட்டுவேன், இஸ்ரவேலின் மீதியானவர்களை நிச்சயமாகச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஒரே கூட்டமாக்குவேன், தன் தொழுவத்திற்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமமாக மக்கள் கூட்டத்தினாலே இரைச்சல் உண்டாகும். தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்களுடைய தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்களுடைய ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், யெகோவா அவர்களுக்கு முன்பாக நடந்துபோவார்.

மீகா 2:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பாவம் செய்யத் திட்டமிட்டிருந்த ஜனங்களுக்குத் துன்பங்கள் வரும். அந்த ஜனங்கள் தம் படுக்கையில் கிடந்த வண்ணம் தீய திட்டங்களைத் தீட்டினார்கள். பிறகு காலை வெளிச்சம் வந்ததும் தங்களது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர். ஏனென்றால், அவர்களுக்குத் தாங்கள் விரும்பியதைச் செய்யும் வல்லமை இருந்தது. அவர்கள் வயல்களை விரும்பினார்கள், எடுத்துக்கொண்டனர். அவர்கள் வீடுகளை விரும்பினார்கள், அதை எடுத்துக்கொண்டனர். அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது வீட்டை எடுத்தனர். அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது நிலத்தை எடுத்தனர். அதனால், கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: “பார், நான் இந்தக் குடும்பத்திற்கு எதிராக துன்பத்தைக் கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. நீங்கள் வீண் பெருமைகொள்வதை விடுவீர்கள். ஏனென்றால் தீமைகள் வந்துகொண்டிருக்கின்றன. பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பாட்டு இயற்றுவார்கள். ஜனங்கள் இந்தச் சோகப் பாடலைப் பாடுவார்கள்: நாங்கள் அழிக்கப்படுகிறோம். கர்த்தர் எங்களது நிலத்தை எடுத்துக் அதனை மற்றவர்களுக்குக் கொடுத்தார். ஆமாம், அவர் எனது நிலங்களை என்னிடமிருந்து எடுத்தார். கர்த்தர் நமது வயல்களைப் பகைவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார். எனவே நாம் நிலத்தை அளந்து, கர்த்தருடைய ஜனங்களுக்குள் பகிர்ந்துக்கொள்ள இயலாது.” ஜனங்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டாம். எங்களைப் பற்றிய அந்தத் தீயவற்றைச் சொல்லவேண்டாம். எங்களுக்குத் தீயவை எதுவும் ஏற்படாது” ஆனால் யாக்கோபின் ஜனங்களே, நான் இவற்றை கட்டாயம் சொல்ல வேண்டும். கர்த்தர் அவரது பொறுமையை இழந்துக்கொண்டிருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தீமை செய்திருக்கிறீர்கள். நீங்கள் சரியானபடி வாழ்ந்தால் பிறகு நான் உங்களிடம் இனிமையாகப் பேசமுடியும். ஆனால் என் ஜனங்களுக்கு, அவர்கள் விரோதியைப்போல் ஆகிறார்கள். நீங்கள் கடந்து செல்லுகிறவர்களின் ஆடைகளைக் களவாடுகிறீர்கள். அந்த ஜனங்கள் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அவர்களிடமிருந்து யுத்தத்தின் கைதிகளிடமிருந்து எடுப்பது போல பொருள்களைப் பறித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எனது ஜனங்களிலுள்ள பெண்களிடமிருந்து அழகான வீடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எனது செல்வத்தை அவர்களின் சிறிய பிள்ளைகளிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். எழுங்கள், புறப்பட்டுப்போங்கள். இது நீங்கள் ஓய்வெடுக்கும் இடமாக இராது. ஏனென்றால், இந்த இடத்தை நீங்கள் அழித்தீர்கள். இதனை நீங்கள் அசுத்தம் செய்தீர்கள். எனவே, இது அழிக்கப்படும். இது பயங்கரமான அழிவாக இருக்கும். இந்த ஜனங்கள், நான் சொல்வதைக் கேட்க விரும்புவதில்லை. ஆனால் ஒருவன் பொய்களைச் சொல்லிக்கொண்டு வந்தால் பிறகு, அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் ஒரு பொய் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொண்டு, அவன் வந்து, “அப்பொழுது வருங்காலம் நல்லகாலமாக தோன்றும், திராட்சைரசமும் மதுபானமும் ஏராளமாக கிடைக்கும்” என்று சொன்னதும் அவனையும் ஏற்றுக்கொள்வார்கள். ஆமாம், யாக்கோபின் ஜனங்களே, நான் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன். இஸ்ரவேலின் தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரையும் நான் ஒன்று சேர்ப்பேன். நான் அவர்களை ஆட்டு மந்தையில் உள்ள ஆடுகளைப்போன்றும் தொழுவத்தில் உள்ள மந்தைகளைப்போன்றும் ஒன்று சேர்ப்பேன். பிறகு அந்த இடமானது அநேக ஜனங்களின் ஓசைகளால் நிறைந்திருக்கும். “தடைகளை உடைப்பவர்” அவர்களை நடத்தி அவர்கள் முன்னே நடந்து செல்கிறார். அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் நுழைந்து கடந்து போவார்கள். அவர்களின் ராஜா அவர்களின் முன்பு நடந்து போவான். கர்த்தர் அவரது ஜனங்களுக்கு முன்னால் இருப்பார்.