மத்தேயு 9:9-13

மத்தேயு 9:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு அங்கிருந்து போகும்போது, மத்தேயு என்னும் பெயருடைய ஒருவன் வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவன் எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான். பின்பு இயேசு, மத்தேயுவின் வீட்டில் விருந்து சாப்பிடும்போது, வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் அநேகர் வந்து, அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சாப்பிட்டார்கள். இதைப் பரிசேயர் கண்டபோது, அவரது சீடர்களிடம், “ஏன் உங்கள் போதகர் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள். இதைக் கேட்டபோது இயேசு, “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை” என்றார். மேலும் அவர், “ ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்ற இறைவாக்கின் கருத்து என்னவென்று, போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார்.

மத்தேயு 9:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான். பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள். பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள். இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

மத்தேயு 9:9-13 பரிசுத்த பைபிள் (TAERV)

அங்கிருந்து இயேசு செல்லும்பொழுது, மத்தேயு என்ற மனிதனைக் கண்டார். மத்தேயு வரி அலுவலகத்தில் அமர்ந்திருந்தான், “என்னைத் தொடர்ந்து வா” என்று மத்தேயுவிடம் இயேசு கூறினார். உடனே மத்தேயு எழுந்திருந்து இயேசுவைப் பின் தொடர்ந்தான். இயேசு மத்தேயுவின் வீட்டில் விருந்துண்டார். வரி வசூலிப்பவர்கள் பலரும் தீயவர்கள் பலரும் வந்திருந்து இயேசுவுடனும் அவரது சீஷர்களுடனும் விருந்துண்டனர். அத்தகைய மனிதர்களுடன் இயேசு விருந்துண்டதைப் பரிசேயர்கள் கண்டனர். பரிசேயர்கள் இயேசுவின் சீஷர்களிடம், “ஏன் உங்கள் குருவானவர் வரி வசூலிப்பவர்களுடனும் தீய மனிதர்களுடனும் உணவு உண்கிறார்?” என்று கேட்டனர். பரிசேயர்கள் இவ்வாறு கூறுவதை இயேசு கேட்டார். எனவே, இயேசு பரிசேயர்களிடம், “ஆரோக்கியமானவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிகளுக்குத்தான் மருத்துவர் தேவை. நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைப் பலியிடுவதை நான் விரும்பவில்லை. நான் மக்களிடம் கருணையை விரும்புகிறேன். நல்லவர்களை அழைக்க நான் வரவில்லை. பாவம் செய்தவர்களை அழைக்கவே நான் வந்தேன்” என்று கூறினார்.

மத்தேயு 9:9-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான். பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.