மத்தேயு 9:18-22

மத்தேயு 9:18-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனார். அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ: நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

மத்தேயு 9:18-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு இதைச் சொல்லிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் வந்து அவர்முன் முழங்காற்படியிட்டு, அவரிடம், “எனது மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள். ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் உயிர் பெறுவாள்” என்று சொன்னான். இயேசு எழுந்து ஜெப ஆலயத் தலைவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின்சென்றார்கள். அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண், இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். அவள், “நான் அவரது மேலுடையைத் தொட்டால் போதும். குணமடைவேன்” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள். இயேசு அவளை திரும்பிப்பார்த்து, “மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னை குணப்படுத்தியது” என்றார். அந்தப் பெண் அந்த நேரத்திலேயே குணமானாள்.

மத்தேயு 9:18-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார். அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.

மத்தேயு 9:18-22 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபொழுது, யூத ஆலயத் தலைவன் ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவை வணங்கி, “என் குமாரத்தி சற்றுமுன் இறந்துவிட்டாள். ஆனாலும், நீர் வந்து உமது கையால் அவளைத் தொடும். அவள் மீண்டும் உயிர் பிழைப்பாள்” என்றான். உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள். அப்பொழுது பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதியுற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் இயேசுவின் பின் வந்து அவரது மேலங்கியின் நுனியைத் தொட்டாள். அந்தப் பெண், “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள். இயேசு திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து அவளிடம், “பெண்ணே, மகிழ்ச்சியாயிரு. நீ சுகமாக்கப்பட்டாய். ஏனென்றால், நீ விசுவாசித்ததினால் குணமாக்கப்பட்டாய்” என்றார். உடனே அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள்.