மத்தேயு 9:14-38

மத்தேயு 9:14-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்குப் பின்பு யோவானுடைய சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நாங்களும், பரிசேயரும் உபவாசிக்கிறோம். ஆனால் உமது சீடர்கள் உபவாசிப்பதில்லை, அது ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் துக்கங்கொண்டாடுவது எப்படி? மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அப்பொழுது அவர்கள் உபவாசிப்பார்கள்” என்று சொன்னார். “ஒருவனும் பழைய ஆடையில், புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், புதிய துணி ஆடையைக் கிழித்துவிடும், கிழிசலும் முன்னிருந்ததைவிட பெரிதாகிவிடும். மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படி செய்தால், தோல் பைகள் வெடித்து விடும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்” என்றார். இயேசு இதைச் சொல்லிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் வந்து அவர்முன் முழங்காற்படியிட்டு, அவரிடம், “எனது மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள். ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் உயிர் பெறுவாள்” என்று சொன்னான். இயேசு எழுந்து ஜெப ஆலயத் தலைவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின்சென்றார்கள். அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண், இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். அவள், “நான் அவரது மேலுடையைத் தொட்டால் போதும். குணமடைவேன்” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள். இயேசு அவளை திரும்பிப்பார்த்து, “மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னை குணப்படுத்தியது” என்றார். அந்தப் பெண் அந்த நேரத்திலேயே குணமானாள். பிறகு இயேசு ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்குள் போனவுடன் குழல் ஊதுவோரையும், கூச்சலிட்டு அழும் மக்கள் கூட்டத்தையும் கண்டார். இயேசு அவர்களிடம், “வெளியே போங்கள். இந்த சிறுமி சாகவில்லை, அவள் தூங்குகிறாள்” என்றார். அவர்களோ அதைக்கேட்டு நகைத்தார்கள். மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியபின், இயேசு உள்ளேப் போய், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார், அவள் உடனே எழுந்திருந்தாள். இச்செய்தி, அப்பகுதிகள் எங்கும் பரவியது. இயேசு அங்கிருந்து போகும்போது, இரண்டு பார்வையற்றோர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்று, “தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமிட்டார்கள். அவர் வீட்டிற்குள் சென்றபோது, அந்த பார்வையற்றோர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவரிடம் வந்தார்கள். இயேசு அவர்களிடம், “என்னால் இதைச் செய்யமுடியும் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” எனக் கேட்டார். “ஆம் ஆண்டவரே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள். பின்பு இயேசு, அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்குச் செய்யப்படும்” என்றார். உடனே அவர்களுக்கு பார்வை கிடைத்தது. இயேசு அவர்களிடம், “இதைப்பற்றி ஒருவரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கடுமையாக எச்சரித்தார். ஆனால் குணமடைந்தவர்களோ வெளியே போய், அவரைப் பற்றியச் செய்தியை அப்பகுதியெங்கும் பரப்பினார்கள். அவர்கள் வெளியே சென்றுகொண்டிருந்தபோது, பிசாசு பிடித்ததினால் பேச முடியாதிருந்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அந்த பிசாசு துரத்தப்பட்டபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். மக்கள் கூட்டம் வியப்படைந்து, “இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும், ஒருபோதும் காணப்பட்டதில்லை” என்றார்கள். ஆனால் பரிசேயரோ, “பிசாசுகளின் தலைவனாலேயே, இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். இயேசு எல்லாப் பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் நடந்துபோய், அங்கே யூதருடைய ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அத்துடன் எல்லா விதமான வியாதிகளையும், நோய்களையும் குணமாக்கினார். அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மேல் மனதுருகினார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் துன்புறுத்தப்பட்டு, உதவியற்றவர்களாக இருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ, கொஞ்சமாய் இருக்கிறார்கள். ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார்.

மத்தேயு 9:14-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார். அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார். அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள். இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு: விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள். மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது. இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள். அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள். பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள். பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார். அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

மத்தேயு 9:14-38 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர், யோவானின் சீஷர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி உபவாசம் இருக்கிறோம். ஆனால், உங்கள் சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை. ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “திருமணத்தின்போது, மணமகன் உடன் இருக்கும் பொழுது அவன் நண்பர்கள் சோகமாக இருப்பதில்லை. ஆனால் மணமகன் அவர்களிடமிருந்து பிரிக்கப்படும் நேரம் வரும். அப்பொழுது மணமகனின் நண்பர்கள் வருத்தம் அடைகிறார்கள். அப்பொழுது அவர்கள் உபவாசம் இருப்பார்கள். “ஒருவன் தன் பழைய சட்டையிலுள்ள ஒரு ஓட்டையை தைக்கும்பொழுது, சுருக்கமடையாத புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை. அப்படிச் செய்தால், இணைத்த துண்டுத்துணியானது சுருங்கி சட்டையிலிருந்து கிழிந்துவிடும். அதனால் ஓட்டை மேலும் மோசமடையும். மேலும், மக்கள் ஒருபோதும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகளில் வைப்பதில்லை. ஏனென்றால் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகள் கிழிந்துவிடும். திராட்சை இரசமும் சிந்திவிடும். திராட்சை இரசப் பைகளும் வீணாகும். அதனால், மக்கள் எப்பொழுதும் புதிய திராட்சை இரசத்தை புதிய பைகளிலேயே ஊற்றுகிறார்கள். அதனால் திராட்சை இரசமும் பைகளும் நன்றாக இருக்கும்” என்றார். இயேசு இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபொழுது, யூத ஆலயத் தலைவன் ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவை வணங்கி, “என் குமாரத்தி சற்றுமுன் இறந்துவிட்டாள். ஆனாலும், நீர் வந்து உமது கையால் அவளைத் தொடும். அவள் மீண்டும் உயிர் பிழைப்பாள்” என்றான். உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள். அப்பொழுது பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதியுற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் இயேசுவின் பின் வந்து அவரது மேலங்கியின் நுனியைத் தொட்டாள். அந்தப் பெண், “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள். இயேசு திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து அவளிடம், “பெண்ணே, மகிழ்ச்சியாயிரு. நீ சுகமாக்கப்பட்டாய். ஏனென்றால், நீ விசுவாசித்ததினால் குணமாக்கப்பட்டாய்” என்றார். உடனே அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள். இயேசு அந்தத் தலைவனுடன் தொடர்ந்து சென்று, அவனது வீட்டிற்குள் சென்றார். சரீர அடக்கத்திற்கான இசை இசைப்போரை இயேசு அங்கு கண்டார். அந்தச் சிறுமி இறந்துவிட்டதனால், அழுதுகொண்டிருந்த பலரையும் இயேசு கண்டார். இயேசு, “விலகிச் செல்லுங்கள். இச்சிறுமி இறக்கவில்லை. இவள் தூக்கத்திலிருக்கிறாள்” என்று சொன்னார். அதைக் கேட்ட அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இயேசு சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். இயேசு சிறுமியின் கரத்தைப் பிடித்தார். சிறுமி எழுந்து நின்றாள். இச்செய்தி அத்தேசம் முழுவதும் பரவியது. இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக்குருடர்கள் உரத்த குரலில், “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன்னார்கள். இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள், “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர். பிறகு இயேசு அவர்களது கண்களைத் தொட்டு, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று நம்புகிறீர்கள். எனவே அது நடக்கும்” என்று சொன்னார். உடனே அவர்களால் பார்க்க முடிந்தது. பின் அவர், “இதைக் குறித்து யாரிடமும் கூறாதீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று இயேசுவைக் குறித்த செய்திகளை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள். அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்ற பின், சிலர் வேறொரு மனிதனை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள். இம்மனிதனைப் பிசாசு பிடித்திருந்ததினால் அவனால் பேச இயலவில்லை. இயேசு அம்மனிதனிடமிருந்த பிசாசை விரட்டினார். பிறகு ஊமையான அம்மனிதனால் பேச முடிந்தது. அதனால் வியப்படைந்த மக்கள், “இஸ்ரவேலில் நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை” என்று கூறினார்கள். ஆனால் பரிசேயர்கள், “பிசாசுகளை விரட்டுகிற வல்லமையை இயேசுவிற்குக் கொடுத்தது பிசாசுகளின் தலைவனே” என்று சொன்னார்கள். இயேசு எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார். பரலோக அரசைப் பற்றிய நற்செய்தியை இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் மக்களுக்குக் கூறினார். இயேசு எல்லாவகையான நோய்களையும் குணமாக்கினார். திரளான மனிதர்களைக் கண்ட இயேசு அவர்களுக்காக வருத்தமடைந்தார். ஏனென்றால், மக்கள் கவலை கொண்டும் ஆதரவற்றும் இருந்தனர். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையைப்போல மக்கள் தங்களை வழிநடத்த மேய்ப்பனின்றி இருந்தனர். இயேசு தம் சீஷர்களிடம், “ஏராளமான மக்கள் அறுவடைக்காக (காப்பாற்றப்பட) உள்ளனர். ஆனால் அவர்களை அறுவடை செய்வதற்கோ மிகச் சில பணியாளர்களே உள்ளனர். தேவனுக்கு உரியது அறுவடை (மக்கள்). பிரார்த்தனை செய்யுங்கள். தேவன் மேலும் பலரைத் தம் அறுவடையைச் சேகரிக்க அனுப்புவார்” என்றார்.

மத்தேயு 9:14-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்து வைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார். அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனார். அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ: நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள். இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு: விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. இயேசு அவ்விடம் விட்டுப்போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள். அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள். பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.