மத்தேயு 9:14-17
மத்தேயு 9:14-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்குப் பின்பு யோவானுடைய சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நாங்களும், பரிசேயரும் உபவாசிக்கிறோம். ஆனால் உமது சீடர்கள் உபவாசிப்பதில்லை, அது ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் துக்கங்கொண்டாடுவது எப்படி? மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அப்பொழுது அவர்கள் உபவாசிப்பார்கள்” என்று சொன்னார். “ஒருவனும் பழைய ஆடையில், புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், புதிய துணி ஆடையைக் கிழித்துவிடும், கிழிசலும் முன்னிருந்ததைவிட பெரிதாகிவிடும். மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படி செய்தால், தோல் பைகள் வெடித்து விடும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்” என்றார்.
மத்தேயு 9:14-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
மத்தேயு 9:14-17 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்னர், யோவானின் சீஷர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி உபவாசம் இருக்கிறோம். ஆனால், உங்கள் சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை. ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “திருமணத்தின்போது, மணமகன் உடன் இருக்கும் பொழுது அவன் நண்பர்கள் சோகமாக இருப்பதில்லை. ஆனால் மணமகன் அவர்களிடமிருந்து பிரிக்கப்படும் நேரம் வரும். அப்பொழுது மணமகனின் நண்பர்கள் வருத்தம் அடைகிறார்கள். அப்பொழுது அவர்கள் உபவாசம் இருப்பார்கள். “ஒருவன் தன் பழைய சட்டையிலுள்ள ஒரு ஓட்டையை தைக்கும்பொழுது, சுருக்கமடையாத புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை. அப்படிச் செய்தால், இணைத்த துண்டுத்துணியானது சுருங்கி சட்டையிலிருந்து கிழிந்துவிடும். அதனால் ஓட்டை மேலும் மோசமடையும். மேலும், மக்கள் ஒருபோதும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகளில் வைப்பதில்லை. ஏனென்றால் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகள் கிழிந்துவிடும். திராட்சை இரசமும் சிந்திவிடும். திராட்சை இரசப் பைகளும் வீணாகும். அதனால், மக்கள் எப்பொழுதும் புதிய திராட்சை இரசத்தை புதிய பைகளிலேயே ஊற்றுகிறார்கள். அதனால் திராட்சை இரசமும் பைகளும் நன்றாக இருக்கும்” என்றார்.
மத்தேயு 9:14-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்து வைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.