மத்தேயு 9:1-17
மத்தேயு 9:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து தமது சொந்தப் பட்டணத்திற்கு வந்தார். அங்கே சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனைப் படுக்கையில் கிடத்தியபடியே, அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, தைரியமாயிரு; உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்றார். இதைக் கேட்ட சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், “இவன் இறைவனை நிந்திக்கிறான்!” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அறிந்த இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களில் தீயவைகளைச் சிந்திக்கிறீர்கள்? ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது? ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று சொல்லி, பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான். மக்கள் கூட்டம் இதைக் கண்டபோது, இப்படிப்பட்ட அதிகாரத்தை மனிதருக்கு அளித்த இறைவனைப் பயபக்தியுடன் துதித்தார்கள். இயேசு அங்கிருந்து போகும்போது, மத்தேயு என்னும் பெயருடைய ஒருவன் வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவன் எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான். பின்பு இயேசு, மத்தேயுவின் வீட்டில் விருந்து சாப்பிடும்போது, வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் அநேகர் வந்து, அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சாப்பிட்டார்கள். இதைப் பரிசேயர் கண்டபோது, அவரது சீடர்களிடம், “ஏன் உங்கள் போதகர் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள். இதைக் கேட்டபோது இயேசு, “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை” என்றார். மேலும் அவர், “ ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்ற இறைவாக்கின் கருத்து என்னவென்று, போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார். அதற்குப் பின்பு யோவானுடைய சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நாங்களும், பரிசேயரும் உபவாசிக்கிறோம். ஆனால் உமது சீடர்கள் உபவாசிப்பதில்லை, அது ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் துக்கங்கொண்டாடுவது எப்படி? மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அப்பொழுது அவர்கள் உபவாசிப்பார்கள்” என்று சொன்னார். “ஒருவனும் பழைய ஆடையில், புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், புதிய துணி ஆடையைக் கிழித்துவிடும், கிழிசலும் முன்னிருந்ததைவிட பெரிதாகிவிடும். மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படி செய்தால், தோல் பைகள் வெடித்து விடும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்” என்றார்.
மத்தேயு 9:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான். மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான். பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள். பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள். இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
மத்தேயு 9:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு ஒரு படகில் ஏரியைக் கடந்து மீண்டும் தம் சொந்த நகருக்குத் திரும்பினார். பக்கவாத வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சிலர் இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவன் படுக்கையில் படுத்திருந்தான். அம்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்திருந்ததை இயேசு கண்டார். எனவே இயேசு அந்த வியாதிக்காரனிடம், “வாலிபனே, மகிழ்ச்சியாயிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். இதைக் கேட்ட சில வேதப்போதகர்கள், “இந்த மனிதன் (இயேசு) தேவனைப் போலவே பேசுகிறான். இது தேவனை நிந்திக்கும் செயல்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். அவர்கள் இவ்வாறு எண்ணியதை இயேசு அறிந்தார். எனவே இயேசு, “நீங்கள் ஏன் தீய எண்ணங்களைச் சிந்திக்கின்றீர்கள்? பக்கவாத வியாதிக்காரனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’, என்று கூறுவது எளிதா? அல்லது ‘எழுந்து நட’, என்று கூறுவது எளிதா? ஆனால் மனித குமாரனுக்கு பூமியில் பாவங்களை மன்னிக்கும் வல்லமை இருப்பதை நான் உங்களுக்கு நிரூபிப்பேன்” என்று சொன்னார். பிறகு அந்த வியாதிக்காரனிடம் இயேசு, “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்!” என்று கூறினார். அம்மனிதன் எழுந்து வீட்டுக்குச் சென்றான். இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர். இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். அங்கிருந்து இயேசு செல்லும்பொழுது, மத்தேயு என்ற மனிதனைக் கண்டார். மத்தேயு வரி அலுவலகத்தில் அமர்ந்திருந்தான், “என்னைத் தொடர்ந்து வா” என்று மத்தேயுவிடம் இயேசு கூறினார். உடனே மத்தேயு எழுந்திருந்து இயேசுவைப் பின் தொடர்ந்தான். இயேசு மத்தேயுவின் வீட்டில் விருந்துண்டார். வரி வசூலிப்பவர்கள் பலரும் தீயவர்கள் பலரும் வந்திருந்து இயேசுவுடனும் அவரது சீஷர்களுடனும் விருந்துண்டனர். அத்தகைய மனிதர்களுடன் இயேசு விருந்துண்டதைப் பரிசேயர்கள் கண்டனர். பரிசேயர்கள் இயேசுவின் சீஷர்களிடம், “ஏன் உங்கள் குருவானவர் வரி வசூலிப்பவர்களுடனும் தீய மனிதர்களுடனும் உணவு உண்கிறார்?” என்று கேட்டனர். பரிசேயர்கள் இவ்வாறு கூறுவதை இயேசு கேட்டார். எனவே, இயேசு பரிசேயர்களிடம், “ஆரோக்கியமானவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிகளுக்குத்தான் மருத்துவர் தேவை. நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைப் பலியிடுவதை நான் விரும்பவில்லை. நான் மக்களிடம் கருணையை விரும்புகிறேன். நல்லவர்களை அழைக்க நான் வரவில்லை. பாவம் செய்தவர்களை அழைக்கவே நான் வந்தேன்” என்று கூறினார். பின்னர், யோவானின் சீஷர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி உபவாசம் இருக்கிறோம். ஆனால், உங்கள் சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை. ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “திருமணத்தின்போது, மணமகன் உடன் இருக்கும் பொழுது அவன் நண்பர்கள் சோகமாக இருப்பதில்லை. ஆனால் மணமகன் அவர்களிடமிருந்து பிரிக்கப்படும் நேரம் வரும். அப்பொழுது மணமகனின் நண்பர்கள் வருத்தம் அடைகிறார்கள். அப்பொழுது அவர்கள் உபவாசம் இருப்பார்கள். “ஒருவன் தன் பழைய சட்டையிலுள்ள ஒரு ஓட்டையை தைக்கும்பொழுது, சுருக்கமடையாத புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை. அப்படிச் செய்தால், இணைத்த துண்டுத்துணியானது சுருங்கி சட்டையிலிருந்து கிழிந்துவிடும். அதனால் ஓட்டை மேலும் மோசமடையும். மேலும், மக்கள் ஒருபோதும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகளில் வைப்பதில்லை. ஏனென்றால் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகள் கிழிந்துவிடும். திராட்சை இரசமும் சிந்திவிடும். திராட்சை இரசப் பைகளும் வீணாகும். அதனால், மக்கள் எப்பொழுதும் புதிய திராட்சை இரசத்தை புதிய பைகளிலேயே ஊற்றுகிறார்கள். அதனால் திராட்சை இரசமும் பைகளும் நன்றாக இருக்கும்” என்றார்.
மத்தேயு 9:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான். ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான். பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்து வைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.