மத்தேயு 8:5-13

மத்தேயு 8:5-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு கப்பர்நகூமுக்குப் போனபோது, ஒரு நூற்றுக்குத் தலைவன் உதவிகேட்டு அவரிடம் வந்து, “ஆண்டவரே, வீட்டில் எனது வேலைக்காரன் முடக்குவாதமுடையவனாய், கடும் வேதனையுடன் படுத்திருக்கிறான்” என்றான். இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன் என்றார்.” நூற்றுக்குத் தலைவன் அதற்குப் பதிலாக, “ஐயா, நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியற்றவன். ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் வேலைக்காரன் குணமடைவான். ஏனெனில் நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான். இயேசு இதைக் கேட்டபோது வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்தொடர்கிறவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை. நான் இதையும் உங்களுக்குச் சொல்கிறேன்: அநேகர் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் இறைவனுடைய அரசிலே பெரும்விருந்தில் அவர்களுக்குரிய இடங்களில் பங்கு பெறுவார்கள். ஆனால் அந்த அரசுக்குரிய மக்களோ, வெளியே இருளுக்குள்ளே எறியப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றார். அதற்குப் பின்பு இயேசு நூற்றுக்குத் தலைவனிடம், “நீ போ, நீ விசுவாசித்தபடியே, உனக்கு ஆகட்டும்” என்றார். அந்த வேளையிலேயே அவனது வேலைக்காரன் குணமடைந்தான்.

மத்தேயு 8:5-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு கப்பர்நகூமில் நுழைந்தபோது, நூறு படைவீரர்களுக்குத் தலைவனாகிய ஒருவன் அவரிடத்தில் வந்து: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே பக்கவாதமாகக் கிடந்து மிகவும் வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார். அந்தத் தலைவன் மறுமொழியாக: ஆண்டவரே! நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான். நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான். இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப்பின்னே வருகிறவர்களைப் பார்த்து: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் பிள்ளைகளோ, வெளியில் உள்ள இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு இயேசு அந்தத் தலைவனைப் பார்த்து: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அதே மணிநேரத்திலே அவனுடைய வேலைக்காரன் சுகமானான்.

மத்தேயு 8:5-13 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். இயேசு அந்நகரத்திற்குள் நுழைந்த பொழுது, படை அதிகாரி ஒருவன் வந்து அவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சினான். அந்த அதிகாரி, “கர்த்தாவே, என் வேலைக்காரன் மிக நோய் வாய்ப்பட்டு வீட்டில் படுத்திருக்கிறான். அவனால் சரீரத்தை அசைக்கக்கூட முடியவில்லை. மிகுந்த வலியினால் அவதிப்படுகிறான்” என்று சொன்னான். இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று கூறினார். அதற்கு அந்த அதிகாரி, “கர்த்தாவே, நீர் என் வீட்டிற்குள் வருமளவிற்கு நான் மேலானவனல்ல. நீர் செய்யவேண்டுவதெல்லாம், என் வேலைக்காரன் குணமடையட்டும் என்று கட்டளையிடுவது மட்டுமே. அப்போது அவன் குணம் அடைவான். நான் என்னிலும் அதிகாரம் மிக்கவர் கீழ்ப் பணிபுரிகிறேன். என் அதிகாரத்திற்குக் கீழும் படைவீரர்கள் உள்ளனர். நான் ஒரு வீரனிடம் ‘போ’ என்றால், அவன் போகிறான். மற்றொரு வீரனிடம் ‘வா’ என்றால், அவன் வருகிறான். நான் என் வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால், அவன் அதைச் செய்கிறான். (அதைப் போலவே நீரும் வல்லமை பெற்றவர் என்பதை நான் அறிவேன்)” என்றான். இதைக் கேட்ட இயேசு வியப்படைந்தார். தன்னுடன் இருந்த மக்களிடம் இயேசு, “உண்மையைச் சொல்லுகிறேன், நான் பார்த்த மனிதர் அனைவரிலும், இஸ்ரவேலிலும் கூட, இவனே அதிக விசுவாசம் உடையவன். பலர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருடன் அமர்ந்து பரலோக இராஜ்யத்தில் உணவு உண்பார்கள். ஆனால் பரலோக இராஜ்யத்தை அடைய வேண்டியவர்களான யூதர்களோ வெளியே இருட்டில் எறியப்படுவார்கள். அங்கு அவர்கள் பற்களைக் கடித்துக் கூக்குரலிடுவார்கள்” என்று கூறினார். பிறகு இயேசு அதிகாரியிடம், “வீட்டிற்குச் செல். நீ எவ்வாறு விசுவாசித்தாயோ அவ்வாறே உன் வேலைக்காரன் குணமாவான்” என்று சொன்னார். அந்த நேரத்திலேயே அந்த அதிகாரியின் வேலைக்காரன் குணமாக்கப்பட்டான்.

மத்தேயு 8:5-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான். இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ, புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.