மத்தேயு 5:43-48
மத்தேயு 5:43-48 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“உங்கள் அயலானிடம் அன்பாயிருங்கள், உங்கள் பகைவனுக்குப் பகையைக் காட்டுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக மன்றாடுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கும் உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாய் இருப்பீர்கள். அவர் தீயவர்மேலும், நல்லவர்மேலும் தமது சூரியனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளவர்மேலும், அநீதியுள்ளவர்மேலும் மழையை அனுப்புகிறார். உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், நீங்கள் பெறும் வெகுமதி என்ன? வரி வசூலிப்பவரும்கூட அப்படிச் செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களை மட்டும் வாழ்த்துவீர்களானால் நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் மேலாகச் செய்வது என்ன? இறைவனை அறியாதவர்கூட அப்படிச் செய்வதில்லையா? உங்கள் பரலோகப் பிதா நிறைவுடையவராய் இருக்கிறதுபோல, நீங்களும் நிறைவுடையவர்களாய் இருங்கள்.
மத்தேயு 5:43-48 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.
மத்தேயு 5:43-48 பரிசுத்த பைபிள் (TAERV)
“‘உன் சினேகிதனை நேசி. உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.
மத்தேயு 5:43-48 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.