மத்தேயு 5:27-32

மத்தேயு 5:27-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘விபசாரம் செய்யாதே’ எனச் சொல்லப்பட்டிருப்பதை, நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது ஒருவன் ஒரு பெண்ணைக் காம இச்சையுடன் பார்த்தாலே, அவன் அவளுடன் அப்போதே தன் இருதயத்தில் விபசாரம் செய்தவனாகிறான். உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது. “தனது மனைவியை விவாகரத்து செய்கிறவன், ‘அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.’ ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் யாராவது ஒருவன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் அவளை விவாகரத்து செய்தால், அவன் அவளை விபசாரத்துக்குள்ளாக்குகிறான். விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்பவனும் விபசாரம் செய்கிறான்.

மத்தேயு 5:27-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான். உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.

மத்தேயு 5:27-32 பரிசுத்த பைபிள் (TAERV)

“‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான். உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று. உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று. “‘தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவரும் அவளுக்கு எழுத்தின் மூலமாக சான்றிதழ் அளிக்க வேண்டும்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளை விபச்சாரப் பாவத்தின் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறான். தன் மனைவி வேறொரு ஆடவனுடன் சரீர உறவு வைத்திருப்பது மட்டுமே ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யத்தக்க காரணமாகும். விவாகரத்து செய்யப்பட்ட அப்பெண்ணை மணம் புரிகிறவனும் விபச்சாரம் செய்தவனாகிறான்.

மத்தேயு 5:27-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. உன் வலதுகண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும். உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்