மத்தேயு 5:1-14

மத்தேயு 5:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு திரளான ஜனங்களைக் கண்டபோது, ஒரு மலைச்சரிவில் ஏறி அங்கே உட்கார்ந்தார். அப்பொழுது அவரது சீடர்கள் அவரருகே வந்தார்கள், இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் சொன்னதாவது: “ஆவியில் எளிமையுள்ளோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்கு உரியது. துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் ஆறுதல் அடைவார்கள். சாந்தமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பூமியை உரிமையாக்கிக்கொள்வார்கள். நீதியை நிலைநாட்ட பசி தாகம் உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் நிறைவு பெறுவார்கள். இரக்கம் நிறைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் தூய்மை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இறைவனைக் காண்பார்கள். சமாதானம் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவார்கள். நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்குரியதே. “என் நிமித்தம் மனிதர் உங்களை இகழும்போதும், துன்புறுத்தும்போதும், உங்களுக்கு எதிராகப் பலவிதமான பொய்களைச் சொல்லி தீமைகளை விளைவிக்கும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள். மகிழ்ந்து களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும். ஏனெனில், இதைப்போலவே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினரையும் அவர்கள் துன்புறுத்தினார்கள். “நீங்கள் பூமியிலுள்ளோருக்கு உப்பாக இருக்கிறீர்கள். ஆனால் உப்பு அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? அது வேறொன்றுக்கும் பயன்படாது, வெளியே வீசப்பட்டு மனிதரால் மிதிக்கப்படும். “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். ஒரு குன்றின்மேல் உள்ள பட்டணம் மறைவாயிருக்காது.

மத்தேயு 5:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள். நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

மத்தேயு 5:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

அங்குக் கூட்டமாயிருந்த மக்களைப் பார்த்த இயேசு ஒரு குன்றின்மீது சென்று அமர்ந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்தார்கள். இயேசு மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு போதனை செய்தார்: “ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது. இம்மையில் துக்கம் அடைந்த மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தேற்றுவார். பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள். மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத்திருப்தியைத் தேவன் அளிப்பார். மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும். தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள். அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார். நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது. “உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதினிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய மகத்தான வெகுமதி உங்களுக்குக் காத்திருக்கிறது. உங்களுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் மக்கள் அதே விதமான தீமைகளைச் செய்தார்கள். “பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும். “உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது.

மத்தேயு 5:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.