மத்தேயு 4:8-11

மத்தேயு 4:8-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான். “நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.” இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ ” என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னார். அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்.

மத்தேயு 4:8-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: “நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்; அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார். அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.

மத்தேயு 4:8-11 பரிசுத்த பைபிள் (TAERV)

பிசாசு பின்னர் இயேசுவை மிக உயரமான ஒரு மலைச் சிகரத்திற்கு அழைத்துச் சென்று, உலகின் எல்லா நாடுகளையும் அவற்றின் மகிமைகளையும் பொருட்களையும் காட்டினான். பிறகு பிசாசு இயேசுவிடம், “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குத் தருவேன்” என்றான். இயேசு பிசாசை நோக்கி, “சாத்தானே, என்னை விட்டு விலகிச் செல்! “‘நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்!’ என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார். எனவே பிசாசு இயேசுவை விட்டு விலகினான். அதன் பிறகு சில தூதர்கள் வந்து அவருக்குச் சேவை செய்தனர்.