மத்தேயு 4:18-22
மத்தேயு 4:18-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார். உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
மத்தேயு 4:18-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு: “என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள். அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
மத்தேயு 4:18-22 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் நடந்துகொண்டிருந்தார். பேதுரு என்றழைக்கப்பட்ட சீமோனையும் அவன் சகோதரன் அந்திரேயாவையும் அவர் கண்டார். மீனவர்களான அச்சகோதரர்கள் இருவரும் ஏரியில் வலைவிரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இயேசு அவர்களிடம், “என்னைத் தொடர்ந்து வாருங்கள். உங்களை மாறுபட்ட மீனவர்களாக்குவேன். மீன்களை அல்ல மனிதர்களை சேகரிக்கும் வேலையைச் செய்வீர்கள்” என்று சொன்னார். சீமோனும் அந்திரேயாவும் தங்கள் வலைகளை விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். இயேசு கலிலேயா ஏரிக்கரையோரம் தொடர்ந்து நடந்து செல்லும்போது செபெதேயுவின் புதல்வர்களான யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய சகோதரர்களைக் கண்டார். அவர்கள் இருவரும் ஒரு படகில் தம் தந்தையோடு இருந்தனர். அவர்கள் மீன் பிடிப்பதற்காகத் தங்களது வலையைத் தயார் செய்து கொண்டிருந்தனர். இயேசு அந்தச் சகோதரர்களைத் தம்முடன் வருமாறு அழைத்தார். எனவே, அச்சகோதரர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
மத்தேயு 4:18-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக் கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு, அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.