மத்தேயு 4:12-17

மத்தேயு 4:12-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார். அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது. இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்: “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே, இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

மத்தேயு 4:12-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார். கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது” என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அதுமுதல் இயேசு: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

மத்தேயு 4:12-17 பரிசுத்த பைபிள் (TAERV)

யோவான் சிறையிலடைக்கப்பட்டதை இயேசு கேள்வியுற்றார். எனவே, இயேசு கலிலேயாவிற்குத் திரும்பிச் சென்றார். இயேசு நாசரேத்தில் தங்கவில்லை. அவர் கலிலேயா ஏரிக்கு அருகிலிருந்த கப்பர்நகூம் நகருக்குச் சென்று வசித்தார். செபுலோனுக்கும் நப்தலிக்கும் அருகில் உள்ளது கப்பர்நகூம். தீர்க்கதரிசி ஏசாயா கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறும்படி இயேசு இவ்வாறு செய்தார்: “செபுலோன் என்னும் இடமும் நப்தலி என்னும் இடமும் யோர்தான் நதியைக் கடந்து கடலுக்குப் போகும் சாலையில் யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் வாழும் இடமாக உள்ளது கலிலேயா. பாவ இருளில் வாழ்ந்த அவர்கள் மிகப் பெரிய வெளிச்சமொன்றைக் கண்டனர். ஒரு சுடுகாட்டைப் போல இருளடைந்து கிடக்கும் அப்பூமியில் வாழும் மக்களை நோக்கி அந்த வெளிச்சம் வந்தது.” அச்சமயத்திலிருந்து இயேசு, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.

மத்தேயு 4:12-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார். கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.