மத்தேயு 3:13-17

மத்தேயு 3:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது இயேசு, கலிலேயாவிலிருந்து யோவானால் திருமுழுக்கு பெறும்படி யோர்தானுக்கு வந்தார். ஆனால் யோவான் அவரிடம், “நான் உம்மிடம் திருமுழுக்கு பெற வேண்டியிருக்க, நீர் என்னிடம் வருகிறீரா?” என்று சொல்லி, அவரைத் தடுக்க முயற்சித்தான். அதற்கு இயேசு, “இப்பொழுது இடங்கொடு; இவ்விதமாக எல்லா நீதியையும் முழுவதுமாய் நிறைவேற்றுவது நமக்குத் தகுதியாய் இருக்கிறது” எனப் பதிலளித்தார். அப்பொழுது யோவான் அதற்கு ஒப்புக்கொண்டான். இயேசு திருமுழுக்கு பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே பரலோகம் திறக்கப்பட்டு, இறைவனின் ஆவியானவர் ஒரு புறாவைப்போன்று இறங்கி, அவர்மேல் அமர்வதைக் கண்டார். அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன்; இவரில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று உரைத்தது.

மத்தேயு 3:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது.

மத்தேயு 3:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்பொழுது இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு வந்தார். இயேசு யோவானிடம் சென்று தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்டார். ஆனால் யோவானோ இயேசுவுக்குத் தான் ஞானஸ்நானம் கொடுக்குமளவுக்கு மேன்மையானவன் அல்ல என்று அவரைத் தடுக்க முயன்றான். எனவே யோவான் இயேசுவிடம், “நீர் என்னிடம் ஞானஸ்நானம் பெறலாகுமோ? நான்தான் உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டும்” என்றான். அதற்கு இயேசு, “தற்பொழுது நான் சொல்லுகிறபடியே செய். தேவன் எதிர்பார்க்கும் நீதியான செயல்கள் அனைத்தையும் நான் செய்ய வேண்டும்” என்று பதில் சொன்னார். ஆகவே, யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கச் சம்மதித்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, நீரிலிருந்து மேலெழுந்து வந்தபோது, வானம் திறந்து, தேவ ஆவியானவர் ஒரு புறாவைப் போலக் கீழிறங்கி அவரிடம் வருவதைக் கண்டார். வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல், “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது.

மத்தேயு 3:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்