மத்தேயு 27:1-10
மத்தேயு 27:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மறுநாள் அதிகாலையில் தலைமை ஆசாரியர்களும் ஜனத்தின் தலைவர்களும், இயேசுவை மரண தண்டனைக்கு உள்ளாக்கும் ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். இயேசுவை கட்டிக் கொண்டுபோய், ஆளுநர் பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், இயேசு மரணத் தீர்ப்புக்குள்ளானதைக் கண்டபோது மனத்துயரம் அடைந்தான். எனவே, தனக்குக் கொடுத்த முப்பது வெள்ளிக்காசை தலைமை ஆசாரியரிடமும் யூதரின் தலைவர்களிடம் திருப்பிக் கொடுத்தான். அவன் அவர்களிடம், “குற்றமற்ற இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்து, பாவம் செய்துவிட்டேன்” என்றான். அதற்கு அவர்கள், “அதைப்பற்றி எங்களுக்கு என்ன? அது உன் பாடு” என்றார்கள். எனவே யூதாஸ் பணத்தை ஆலயத்தினுள் எறிந்துவிட்டுப் புறப்பட்டுப் போனான். அவன் போய், தன்னைத்தானே தூக்கிலிட்டுக்கொண்டு செத்தான். தலைமை ஆசாரியர் அந்தப் பணத்தை எடுத்து, “இது இரத்தப்பழியுள்ள பணம். ஆகையால் இதைக் காணிக்கையில் சேர்ப்பது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றார்கள். எனவே அவர்கள் அந்தப் பணத்தைக்கொண்டு, குயவனின் வயலை வாங்குவதற்குத் தீர்மானித்தார்கள். அந்நிலத்தை அந்நியரை அடக்கம் செய்யும் இடமாக ஒதுக்கிவைத்தார்கள். அதனாலேயே இன்றுவரை அந்த இடம் “இரத்தநிலம்” என்று அழைக்கப்படுகிறது. இதனால் இறைவாக்கினன் எரேமியாவினால் கூறப்பட்டது நிறைவேறியது: “அவர்கள் முப்பது வெள்ளிக்காசை எடுத்தார்கள். அதுவே இஸ்ரயேல் மக்கள் அவருக்கு மதிப்பிட்ட விலை. கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் அதைக்கொண்டு குயவனுடைய நிலத்தை வாங்கினார்கள்.”
மத்தேயு 27:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது. இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
மத்தேயு 27:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
தலைமை ஆசாரியரும் மூத்த யூதத் தலைவர்களும் மறுநாள் அதிகாலையில் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்தார்கள். அவர்கள் இயேசுவைச் சங்கிலியில் பிணைத்து, ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைத்தார்கள். இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே தனக்குக் கிடைத்த முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமை ஆசாரியர்களிடமும் மூத்தத் தலைவர்களிடமும் எடுத்துச் சென்றான். யூதாஸ், “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான இயேசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்துவிட்டேன்” என்றான். அதற்கு யூதத் தலைவர்கள், “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள். ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக்கொண்டான். வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமை ஆசாரியர்கள், “இப்பணத்தைத் தேவாலயக் கருவூலத்தில் வைத்திருக்க நம் சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால், இப்பணம் ஒருவனது மரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லி, அப்பணத்தைக் கொண்டு குயவனின் வயல் என்றழைக்கப்பட்ட நிலத்தை அவர்கள் வாங்கத் தீர்மானித்தார்கள். அந்த நிலம் எருசலேமைக் காண வரும் பயணிகள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. எனவே தான் அந்த நிலம் இன்னமும், “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது. தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது. “அவர்கள் முப்பது வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். அதுவே இஸ்ரவேலர்கள் அவருக்கு (இயேசுவுக்கு) நிர்ணயித்த விலை. கர்த்தர் எனக்கு ஆணையிட்டது போல, அந்த முப்பது வெள்ளி நாணயங்களை குயவனின் வயலை வாங்கப் பயன்படுத்தினார்கள்.”
மத்தேயு 27:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி, ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.