மத்தேயு 26:6-13

மத்தேயு 26:6-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு பெத்தானியாவில் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் இருந்தபோது, ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அவரிடத்தில் வந்தாள். அவர் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவள் அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். சீடர்கள் இதைக் கண்டபோது ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்செலவு? இந்த நறுமணத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள். இயேசு இதை அறிந்து அவர்களிடம், “ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தக் காரியத்தை எனக்கு செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள், ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். இவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றி, என் அடக்கத்திற்கு ஆயத்தமாகவே இதைச் செய்தாள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய நினைவாகச் சொல்லப்படும்” என்றார்.

மத்தேயு 26:6-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது, ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள். தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன். இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது. இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 26:6-13 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு பெத்தானியாவில் இருந்தார். தொழுநோயாளியான சீமோன் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்பொழுது ஒரு பெண் அவரிடம் வந்தாள். அவளிடம் ஒரு வெள்ளைக் கல் ஜாடியில் நிறைய மிக விலையுயர்ந்த வாசனைத் தைலம் இருந்தது. அப்பெண் இயேசுவின் தலைமீது அவ்வாசனைத் தைலத்தை அவர் உணவு அருந்திக்கொண்டிருந்தபொழுது ஊற்றினாள். அப்பெண் இவ்வாறு செய்ததைக் கண்ட இயேசுவின் சீஷர்கள் அவள்மீது எரிச்சல் அடைந்தார்கள், “வாசனைத் தைலத்தை ஏன் வீணாக்குகிறாய்? அதை நல்ல விலைக்கு விற்றால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாமே?” என்று கடிந்து கொண்டார்கள். ஆனால் நடந்ததை அறிந்த இயேசு, “இப்பெண்ணை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? இவள் எனக்கு ஒரு நற்செயலைச் செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். வாசனைத் தைலத்தை என் தலைமீது ஊற்றி இப்பெண் நான் மரித்தப்பின் அடக்கம் செய்வதற்கான ஆயத்தத்தைச் செய்திருக்கிறாள். நான் உண்மையைச் சொல்லுகிறேன், உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் நற்செய்தி சொல்லப்படும். நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இப்பெண் செய்த செயலும் சொல்லப்படும். அப்பொழுது மக்கள் அவளை நினைவுகூர்வார்கள்” என்றார்.

மத்தேயு 26:6-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள், தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்