மத்தேயு 26:57-68

மத்தேயு 26:57-68 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசுவைக் கைது செய்தவர்கள், அவரைப் பிரதான ஆசாரியன் காய்பாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மோசேயின் சட்ட ஆசிரியர்களும் யூதரின் தலைவர்களும் கூடியிருந்தார்கள். பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றம் வரைக்கும் போனான். அவன் உள்ளேப் போய் நடக்கப்போவதை அறியும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தான். தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பல பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்ற சாட்சியம் கிடைக்கவில்லை. கடைசியாக இரண்டு பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். அவர்களோ, “இவன் இறைவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், அதை மூன்று நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று சொன்னான்” என்றார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நின்று இயேசுவிடம், “பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான். ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார். பிரதான ஆசாரியன் அவரிடம், “உயிருள்ள இறைவன் பெயரில் ஆணையிட்டுக் கேட்கிறேன்: நீ இறைவனின் மகனான கிறிஸ்து என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “ஆம், நீர் சொல்கிறபடிதான்; ஆனால் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்: இதுமுதல் மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இவன் இறைவனை நிந்தித்துப் பேசுகிறான்! இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ? பாருங்கள், இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் இப்பொழுது கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” என்றார்கள். பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள். மற்றவர்கள் அவரை முகத்தில் அறைந்து, “கிறிஸ்துவே, உம்மை அடித்தது யார் என்று இறைவாக்குச் சொல்லும்” என்றார்கள்.

மத்தேயு 26:57-68 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான். பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள். அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

மத்தேயு 26:57-68 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரை தலைமை ஆசாரியனான காய்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வேதபாரகர்களும் மற்ற யூதத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். இயேசுவைத் தொடர்ந்து வந்த பேதுரு அவர் அருகில் செல்லவில்லை. பேதுரு இயேசுவைத் தொடர்ந்து தலைமை ஆசாரியனின் வீட்டு முற்றத்தை அடைந்தான். இயேசுவுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண பேதுரு உள்ளே நுழைந்து காவல்காரர்களுடன் அமர்ந்தான். தலைமை ஆசாரியனும் யூத ஆலோசனைச் சங்கமும் இயேசுவைக் கொல்ல அவரிடம் ஏதேனும் குற்றம் காண முயற்சித்தார்கள். இயேசு தவறு செய்தார் என சொல்லக்கூடிய மக்களைத் தேட முயற்சித்தார்கள். பலரும் வந்து இயேசுவைப் பற்றிப் பொய்யான செய்திகளைக் கூறினர். ஆனாலும் இயேசுவைக் கொல்லத்தக்க காரணம் எதையும் யூத ஆலோசனைச் சங்கம் காணவில்லை. பிறகு இருவர் வந்து, “நான் தேவனின் ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் மீண்டும் அதைக் கட்டுவேன் என்று இவன் (இயேசு) கூறினான்” என்றார்கள். பின் தலைமை ஆசாரியன் எழுந்திருந்து இயேசுவைப் பார்த்து, “இவர்கள் உமக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள், இவர்கள், உம்மேல் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உம்மிடம் ஏதும் பதில் உள்ளதா? இவர்கள் கூறுவது உண்மையா?” என்று கேட்டார். ஆனால், இயேசு ஏதும் பதில் கூறவில்லை. மீண்டும் தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நான் உன்னை உறுதி மொழிக்கு உட்படுத்துகிறேன். ஜீவனுள்ள தேவனின் வல்லமையின் பெயரால் ஆணையிடுகிறேன். உண்மையைச் சொல் நீயா தேவகுமாரனாகிய கிறிஸ்து?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம் நான் தான், ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எதிர்காலத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் மனிதகுமாரன் அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். மேலும் வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பீர்கள்” என்று விடையளித்தார். இதைக்கேட்ட தலைமை ஆசாரியன் மிகக் கோபமடைந்தான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “இவன் தேவனுக்கு எதிரானவைகளைப் பேசுகிறான். வேறு சாட்சியம் எதுவும் தேவையில்லை. தேவனுக்கு எதிராக இவன் கூறியவற்றை நீங்கள் எல்லோரும் கேட்டீர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று சொன்னான். யூதர்கள் அனைவரும், “இவன் குற்றவாளி. இவன் (இறக்க) மரிக்க வேண்டும்” என்றார்கள். பின் அங்கிருந்தவர்கள் இயேசுவின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். அவரைத் தங்கள் கையால் அடித்தார்கள். மற்றவர்கள் அவரது கன்னத்தில் அறைந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி என்பதைக் காட்டு. கிறிஸ்துவே, உன்னை அடித்தது யார் என்பதைக் கூறு” என்று கேட்டார்கள்.

மத்தேயு 26:57-68 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள். ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்