மத்தேயு 26:37-59
மத்தேயு 26:37-59 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு பேதுருவையும், செபெதேயுவின் மகன்கள் இருவரையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்றார். பின்பு அவர் மிகவும் துயரமுற்றுக் கலங்கத் தொடங்கினார். இயேசு அவர்களிடம், “என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்றார். இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த் தரையில் முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது” என்று மன்றாடினார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “ஒருமணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார். “விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார். இயேசு இரண்டாவது முறையும் போய், “என் பிதாவே, இந்தப் பாத்திரத்திலிருந்து நான் குடித்தாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது” என்று மன்றாடினார். இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. எனவே இயேசு அவர்களைவிட்டு விலகிப்போய், திரும்பவும் மூன்றாவது முறையாக அதே வார்த்தைகளைச் சொல்லி மன்றாடினார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்து, அவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? இதோ பாருங்கள், வேளை வந்துவிட்டது. மானிடமகனாகிய நான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். எழுந்திருங்கள், நாம் போவோம்! என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ வருகிறான்!” என்றார். இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு பெருங்கூட்டம் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தது. இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும் யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் முத்தமிடுகிறவனே, அந்த மனிதர்; அவரைக் கைதுசெய்யுங்கள்” என்று சொல்லியிருந்தான். யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். இயேசு யூதாஸிடம், “நண்பனே, நீ எதற்காக வந்தாயோ, அதைச் செய்!” என்றார். அப்பொழுது அவனுடன் வந்தவர்கள் முன்னேவந்து, இயேசுவைப் பிடித்து அவரைக் கைது செய்தார்கள். அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதை வெட்டினான். இயேசு அவனிடம், “உன் வாளை அதன் உறையிலே போடு, ஏனெனில் வாளை எடுக்கிற அனைவரும் வாளினாலேயே சாவார்கள். என் பிதாவை நோக்கி, என்னால் கூப்பிட முடியாது என்று நீ நினைக்கிறாயா? நான் கேட்டால் அவர் உடனே எனக்காக பன்னிரண்டுக்கும் அதிகமான தூதர் சேனையை அனுப்புவார் அல்லவா? ஆனால் நான் அப்படிச் செய்தால், இவ்விதமாக நிகழவேண்டும் என்று சொல்கிற வேதவசனம், எப்படி நிறைவேறும்?” என்றார். அவ்வேளையில் இயேசு அந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும், வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆனால் இறைவாக்கினர் எழுதி வைத்தவை நிறைவேறும்படியே இவையெல்லாம் நிகழ்கின்றன” என்றார். அப்பொழுது சீடர்கள் எல்லோரும் இயேசுவைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைக் கைது செய்தவர்கள், அவரைப் பிரதான ஆசாரியன் காய்பாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மோசேயின் சட்ட ஆசிரியர்களும் யூதரின் தலைவர்களும் கூடியிருந்தார்கள். பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றம் வரைக்கும் போனான். அவன் உள்ளேப் போய் நடக்கப்போவதை அறியும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தான். தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
மத்தேயு 26:37-59 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி, சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார். பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான். பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்
மத்தேயு 26:37-59 பரிசுத்த பைபிள் (TAERV)
பேதுருவையும், செபதேயுவின் இரு குமாரர்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார். இயேசு பேதுருவிடமும், செபதேயுவின் இரு குமாரர்களிடமும், “என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்துள்ளது. என் இதயம் துக்கத்தினால் உடைந்துள்ளது. என்னுடன் இங்கேயே விழித்திருந்து காத்திருங்கள்” என்றார். பின் இயேசு அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றார். பின்பு இயேசு நிலத்தில் முகம்படிய விழுந்து பிரார்த்தித்தார், “என் பிதாவே, முடியுமானால் இந்த வேதனைகள் எனக்கு ஏற்படாமல் செய்யும். ஆனால், உமக்கு விருப்பமானதையே செய்யும். நான் விரும்புவதையல்ல” என்றார். பிறகு தம் சீஷர்களிடம் இயேசு திரும்பி வந்தார். தம் சீஷர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்ட இயேசு, பேதுருவிடம் கூறினார், “ஒருமணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் ஆவி சரியானதைச் செய்ய விரும்புகிறது. ஆனால் உங்கள் சரீரமோ பலவீனமாக உள்ளது” என்றார். இயேசு இரண்டாவது முறையாக சென்று பிரார்த்தனை செய்தார், “என் பிதாவே, வேதனை மிகுந்த இக்காரியங்கள் எனக்கு ஏற்படாதிருக்குமாறு செய்ய முடியாதெனில், நீர் விரும்பியபடியே நடக்க நான் வேண்டுகிறேன்” என்றார். பின்பு இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்றார். மீண்டும் அவர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்டார். அவர்களது கண்கள் மிகவும் களைப்புடன் காணப்பட்டன. ஆகவே மீண்டும் ஒருமுறை இயேசு அவர்களை விட்டுச் சென்று பிரார்த்தனை செய்தார். மூன்றாவது முறையும் அதையேக் கூறினார். பின் இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்று அவர்களிடம், “இன்னுமா நீங்கள் தூங்கிக் கொண்டும் இளைப்பாறிக் கொண்டுமிருக்கிறீர்கள்? மனித குமாரனைப் பாவிகளிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எழுந்திருங்கள்! நாம் போக வேண்டும். இதோ வந்துவிட்டான் என்னை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் போகிறவன்” என்றார். இப்படிப் பேசிக்கொண்டிருந்தபொழுதே யூதாஸ் அங்கு வந்தான், யூதாஸ் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன். அவனுடன் பலரும் இருந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியனாலும் மூத்த தலைவர்களாலும் அனுப்பப்பட்டவர்கள். யூதாஸூடன் இருந்தவர்கள் அரிவாள்களையும் தடிகளையும் வைத்திருந்தனர். யார் இயேசு என்பதை அவர்களுக்குக் காட்ட யூதாஸ் ஒரு திட்டமிட்டிருந்தான். அவன் அவர்களிடம், “நான் முத்தமிடுகிறவரே இயேசு. அவரைக் கைது செய்யுங்கள்” என்றான். அதன்படி யூதாஸ் இயேசுவிடம் சென்று, “வணக்கம். போதகரே!” என்று கூறி இயேசுவை முத்தமிட்டான். இயேசு, “நண்பனே, நீ செய்ய வந்த காரியத்தை செய்” என்று கூறினார். பின் யூதாஸூடன் வந்த மனிதர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டார்கள். அவரைக் கைது செய்தார்கள். இது நடந்தபொழுது, இயேசுவுடன் இருந்த சீஷர்களில் ஒருவன் தன் அரிவாளை எடுத்தான். அச்சீஷன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரனை அரிவாளால் தாக்கி அவனது காதை வெட்டினான். இயேசு அச்சீஷனைப் பார்த்து, “அரிவாளை அதன் உறையில் போடு. அரிவாளை எடுப்பவன் அரிவாளாலே சாவான். நான் என் பிதாவைக் கேட்டால் அவர் எனக்கு பன்னிரண்டு தேவ தூதர் படைகளும் அதற்கு அதிகமாகவும் அனுப்புவார் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஆனால் இது இப்படியே வேதவாக்கியங்கள் கூறுகிறபடியே நடக்க வேண்டும்” என்றார். பின்னர் இயேசு தம்மைப் பிடிக்க வந்தவர்கள் அனைவரையும் நோக்கி, “ஒரு குற்றவாளியைப் போல என்னைப் பிடிக்க அரிவாள் தடிகளுடன் வந்திருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதனை செய்தேன். ஆனால், என்னை அங்கே கைது செய்யவில்லை. தீர்க்கதரிசிகள் எழுதி வைத்துள்ளபடியே இவை அனைத்தும் நடந்துள்ளன” என்று கூறினார். பின்பு இயேசுவின் எல்லா சீஷர்களும் அவரைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரை தலைமை ஆசாரியனான காய்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வேதபாரகர்களும் மற்ற யூதத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். இயேசுவைத் தொடர்ந்து வந்த பேதுரு அவர் அருகில் செல்லவில்லை. பேதுரு இயேசுவைத் தொடர்ந்து தலைமை ஆசாரியனின் வீட்டு முற்றத்தை அடைந்தான். இயேசுவுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண பேதுரு உள்ளே நுழைந்து காவல்காரர்களுடன் அமர்ந்தான். தலைமை ஆசாரியனும் யூத ஆலோசனைச் சங்கமும் இயேசுவைக் கொல்ல அவரிடம் ஏதேனும் குற்றம் காண முயற்சித்தார்கள். இயேசு தவறு செய்தார் என சொல்லக்கூடிய மக்களைத் தேட முயற்சித்தார்கள்.
மத்தேயு 26:37-59 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம் பண்ணினார். பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதானஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள். பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.