மத்தேயு 26:17-51

மத்தேயு 26:17-51 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “பட்டணத்திற்குள்ளே நான் குறிப்பிடும் மனிதனிடம் போய், ‘போதகர் உமக்குச் சொல்கிறதாவது: நியமிக்கப்பட்ட எனது வேளை நெருங்கிவிட்டது. நான் உமது வீட்டில், எனது சீடர்களுடன் பஸ்காவைக் கொண்டாடப் போகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றார். இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துக்கமடைந்து, ஒருவன்பின் ஒருவனாக அவரிடம், “ஆண்டவரே, நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னோடுகூட கை போட்டவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார். அப்பொழுது இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனான யூதாஸ், “போதகரே, நிச்சயமாக நீர் என்னைக் குறிக்கவில்லை அல்லவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீயே அதை சொல்லிவிட்டாயே!” என்று பதிலளித்தார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து அவர்களிடம், “இதை வாங்கிச் சாப்பிடுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து குடியுங்கள். இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக இது சிந்தப்படுகிறது” என்று சொன்னார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் அரசில் இதைப் புதியதாக உங்களோடு நான் குடிக்கும் நாள்வரைக்கும், இந்த திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார். அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “இந்த இரவிலேயே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில், “ ‘நான் மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன். அப்பொழுது மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும்,’ என்று எழுதியிருக்கிறது. “ஆனால் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார். அதற்குப் பேதுரு, “மற்ற எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஒருபோதும் ஓடிப் போகமாட்டேன்” என்றான். இயேசு அதற்கு அவனிடம், “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த இரவிலே சேவல் கூவுவதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று பதிலளித்தார். ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் சாகவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்” என்றான். சீடர்கள் எல்லோரும் அவ்விதமாகவே சொன்னார்கள். பின்பு இயேசு தமது சீடர்களுடன் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார். அங்கே அவர் அவர்களிடம், “நான் அங்குபோய் மன்றாடும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார். இயேசு பேதுருவையும், செபெதேயுவின் மகன்கள் இருவரையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்றார். பின்பு அவர் மிகவும் துயரமுற்றுக் கலங்கத் தொடங்கினார். இயேசு அவர்களிடம், “என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்றார். இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த் தரையில் முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது” என்று மன்றாடினார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “ஒருமணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார். “விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார். இயேசு இரண்டாவது முறையும் போய், “என் பிதாவே, இந்தப் பாத்திரத்திலிருந்து நான் குடித்தாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது” என்று மன்றாடினார். இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. எனவே இயேசு அவர்களைவிட்டு விலகிப்போய், திரும்பவும் மூன்றாவது முறையாக அதே வார்த்தைகளைச் சொல்லி மன்றாடினார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்து, அவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? இதோ பாருங்கள், வேளை வந்துவிட்டது. மானிடமகனாகிய நான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். எழுந்திருங்கள், நாம் போவோம்! என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ வருகிறான்!” என்றார். இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு பெருங்கூட்டம் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தது. இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும் யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் முத்தமிடுகிறவனே, அந்த மனிதர்; அவரைக் கைதுசெய்யுங்கள்” என்று சொல்லியிருந்தான். யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். இயேசு யூதாஸிடம், “நண்பனே, நீ எதற்காக வந்தாயோ, அதைச் செய்!” என்றார். அப்பொழுது அவனுடன் வந்தவர்கள் முன்னேவந்து, இயேசுவைப் பிடித்து அவரைக் கைது செய்தார்கள். அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதை வெட்டினான்.

மத்தேயு 26:17-51 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார். அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள். அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆனாலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போவேன் என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமதுநிமித்தம் எல்லோரும் இடறலடைந்தாலும், நான் ஒருபோதும் இடறலடையமாட்டேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள். அப்பொழுது, இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களைப் பார்த்து: நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி, சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார். பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான்.

மத்தேயு 26:17-51 பரிசுத்த பைபிள் (TAERV)

புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பண்டிகையின் முதல் நாளன்று, சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா விருந்துண்ண உமக்காக ஏற்பாடுகளைச் செய்யக் காத்திருக்கிறோம். எங்கே உணவுக்கு ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு மறுமொழியாக இயேசு, “நகருக்குள் செல்லுங்கள். அங்கே எனக்கு அறிமுகமான ஒருவரிடம் சென்று, போதகர் கூறுவதாகக் கூறுங்கள், ‘குறிக்கப்பட்ட வேளை நெருங்கிவிட்டது. நான் என் சீஷர்களுடன் உன் வீட்டில் பஸ்கா விருந்துண்பேன்’, என்று கூறுங்கள்” என்று கூறினார். இயேசுவின் சீஷர்கள் அவரது சொற்படியே அவர் சொன்னவற்றைச் செய்தார்கள். அவர்கள் பஸ்கா விருந்தைத் தயார் செய்தார்கள். அன்று மாலை இயேசுவும் அவரது பன்னிரண்டு சீஷர்களும் மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு கூறினார், “உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவன் விரைவில் என்னை எதிரிகளிடம் பிடித்துக் கொடுப்பான்” என்றார். அதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். ஒவ்வொரு சீஷரும் இயேசுவிடம், “ஆண்டவரே, நிச்சமாய் அது நானல்ல!” என்றனர். அதற்கு இயேசு, “நான் கை கழுவும் பாத்திரத்திலேயே கை கழுவுகின்றவனே எனக்கு எதிராவான். மனித குமாரன் இறப்பார். இது நடக்குமென வேதவாக்கியம் சொல்கிறது. மனித குமாரனைக் கொல்வதற்குக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு மிகுந்த தீமை விளையும். அதைவிட அவன் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்” என்றார். பின் யூதாஸ் இயேசுவிடம், “போதகரே! நான் நிச்சயம் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டேன்!” என்றான். (இயேசுவை எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யூதாஸ் தான்) அதற்கு இயேசு, “இல்லை. நீ தான் என்னைக் காட்டிக் கொடுப்பாய்” என்றார். அவர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த பொழுது, இயேசு சிறிது அப்பத்தைக் கையிலெடுத்தார். அந்த அப்பத்துக்காக தேவனுக்கு நன்றி கூறி அதைப் பங்கிட்டார். அதைத் தம் சீஷர்களுக்கு கொடுத்து, “இந்த அப்பத்தை எடுத்து சாப்பிடுங்கள். இந்த அப்பமே என் சரீரம்” என்று சொன்னார். பின் இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்து, அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். அதைத் தமது சீஷர்களுக்குக் கொடுத்த இயேசு, “நீங்கள் ஒவ்வொருவரும் இதைக் குடியுங்கள். இந்த திராட்சை இரசம் என் இரத்தம், என் இரத்தத்தின் மூலம் (மரணம்) தேவனுக்கும் மக்களுக்குமான புதிய உடன்படிக்கை துவங்குகிறது. இந்த இரத்தம் பலருக்கும் தங்கள் பாவங்களைக் கழுவிக்கொள்வதற்காக அளிக்கப்படுகிறது. நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், அதாவது, நாம் மீண்டும் என் பிதாவின் இராஜ்யத்தில் ஒன்று சேர்ந்து திராட்சை இரசத்தைப் புதியதாய் பானம் பண்ணும்வரைக்கும் நான் இதை அருந்தமாட்டேன்” என்று கூறினார். சீஷர்கள் அனைவரும் ஒரு பாடலைப் பாடினார்கள். பின்பு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றார்கள். இயேசு தம் சீஷர்களிடம், “இன்றிரவு நீங்கள் உங்கள் விசுவாசத்தை என்னிமித்தம் இழப்பீர்கள். வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது: “‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன். மந்தையின் ஆடுகள் கலைந்து ஓடும்’ என்று கூறினார். ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார். அதற்கு பேதுரு, “மற்ற எல்லாச் சீஷர்களும் தங்கள் விசுவாசத்தை இழக்கலாம். ஆனால், ஒரு போதும் என் விசுவாசத்தை இழக்கமாட்டேன்” என்று கூறினான். அதற்குப் இயேசு, “நான் உண்மையை சொல்லுகிறேன், இன்றிரவு உனக்கு என்னைத் தெரியாது எனக் கூறுவாய். அதுவும் சேவல் கூவுவதற்குமுன் மூன்று முறை சொல்வாய்” என்று கூறினார். ஆனால், பேதுரு, “உம்மை எனக்குத் தெரியாது எனக் கூறவேமாட்டேன். உம்முடன் சேர்ந்து நானும் இறப்பேன்!” என்றான். மேலும் மற்ற சீஷர்கள் அனைவரும் அவ்வாறே கூறினார்கள். பின்பு இயேசு தம் சீஷர்களுடன் கெத்செமனே என்ற இடத்திற்குச் சென்றார். அவர் தம் சீஷர்களிடம், “நான் அங்கே சென்று பிரார்த்தனை செய்யும்வரைக்கும் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்றார். பேதுருவையும், செபதேயுவின் இரு குமாரர்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார். இயேசு பேதுருவிடமும், செபதேயுவின் இரு குமாரர்களிடமும், “என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்துள்ளது. என் இதயம் துக்கத்தினால் உடைந்துள்ளது. என்னுடன் இங்கேயே விழித்திருந்து காத்திருங்கள்” என்றார். பின் இயேசு அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றார். பின்பு இயேசு நிலத்தில் முகம்படிய விழுந்து பிரார்த்தித்தார், “என் பிதாவே, முடியுமானால் இந்த வேதனைகள் எனக்கு ஏற்படாமல் செய்யும். ஆனால், உமக்கு விருப்பமானதையே செய்யும். நான் விரும்புவதையல்ல” என்றார். பிறகு தம் சீஷர்களிடம் இயேசு திரும்பி வந்தார். தம் சீஷர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்ட இயேசு, பேதுருவிடம் கூறினார், “ஒருமணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் ஆவி சரியானதைச் செய்ய விரும்புகிறது. ஆனால் உங்கள் சரீரமோ பலவீனமாக உள்ளது” என்றார். இயேசு இரண்டாவது முறையாக சென்று பிரார்த்தனை செய்தார், “என் பிதாவே, வேதனை மிகுந்த இக்காரியங்கள் எனக்கு ஏற்படாதிருக்குமாறு செய்ய முடியாதெனில், நீர் விரும்பியபடியே நடக்க நான் வேண்டுகிறேன்” என்றார். பின்பு இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்றார். மீண்டும் அவர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்டார். அவர்களது கண்கள் மிகவும் களைப்புடன் காணப்பட்டன. ஆகவே மீண்டும் ஒருமுறை இயேசு அவர்களை விட்டுச் சென்று பிரார்த்தனை செய்தார். மூன்றாவது முறையும் அதையேக் கூறினார். பின் இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்று அவர்களிடம், “இன்னுமா நீங்கள் தூங்கிக் கொண்டும் இளைப்பாறிக் கொண்டுமிருக்கிறீர்கள்? மனித குமாரனைப் பாவிகளிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எழுந்திருங்கள்! நாம் போக வேண்டும். இதோ வந்துவிட்டான் என்னை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் போகிறவன்” என்றார். இப்படிப் பேசிக்கொண்டிருந்தபொழுதே யூதாஸ் அங்கு வந்தான், யூதாஸ் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன். அவனுடன் பலரும் இருந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியனாலும் மூத்த தலைவர்களாலும் அனுப்பப்பட்டவர்கள். யூதாஸூடன் இருந்தவர்கள் அரிவாள்களையும் தடிகளையும் வைத்திருந்தனர். யார் இயேசு என்பதை அவர்களுக்குக் காட்ட யூதாஸ் ஒரு திட்டமிட்டிருந்தான். அவன் அவர்களிடம், “நான் முத்தமிடுகிறவரே இயேசு. அவரைக் கைது செய்யுங்கள்” என்றான். அதன்படி யூதாஸ் இயேசுவிடம் சென்று, “வணக்கம். போதகரே!” என்று கூறி இயேசுவை முத்தமிட்டான். இயேசு, “நண்பனே, நீ செய்ய வந்த காரியத்தை செய்” என்று கூறினார். பின் யூதாஸூடன் வந்த மனிதர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டார்கள். அவரைக் கைது செய்தார்கள். இது நடந்தபொழுது, இயேசுவுடன் இருந்த சீஷர்களில் ஒருவன் தன் அரிவாளை எடுத்தான். அச்சீஷன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரனை அரிவாளால் தாக்கி அவனது காதை வெட்டினான்.

மத்தேயு 26:17-51 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள். அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம் பண்ணினார். பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதானஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்