மத்தேயு 25:1-46

மத்தேயு 25:1-46 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமா யிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோக வில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். அன்றியும், பரலோகராஜ்யம் புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப்போனான். ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம்பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான். அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

மத்தேயு 25:1-46 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“அந்நாளிலே பரலோக அரசு, பத்து கன்னிகைகள் விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாத கன்னிகைகளாகவும் ஐந்துபேர் புத்தியுள்ள கன்னிகைகளாகவும் இருந்தார்கள். அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அவர்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. ஆனால் புத்தியுள்ள கன்னிகைகளோ தங்கள் விளக்குகளுடன் எண்ணெயையும் பாத்திரங்களில் எடுத்துச் சென்றார்கள். மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள். “நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார்! அவரை சந்திக்கப் புறப்படுங்கள் புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது. “அப்பொழுது எல்லா கன்னிகைகளும் விழித்தெழுந்து, அவரவருடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள். புத்தியில்லாத கன்னிகைகளோ புத்தியுள்ள கன்னிகைகளிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள். “அதற்கு புத்தியுள்ள கன்னிகைகள், ‘இல்லை, எங்களிடம் இருக்கும் எண்ணெய் உங்களுக்கும் எங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள். “புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்குவதற்காகப் போகும்போதே மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிகைகள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே சென்றார்கள். கதவோ அடைக்கப்பட்டது. “பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள். “ஆனால் அவரோ, ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார். “எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில் மானிடமகனாகிய நான் திரும்பிவரும் நாளையும் வேளையையும் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றார். “மேலும், பரலோக அரசு பயணம் செல்கின்ற ஒருவன் தனது வேலைக்காரர்களை அழைத்துத் தனது சொத்துக்களை அவர்களிடம் ஒப்புவித்ததுபோல் இருக்கும். ஒருவனுக்கு அவன் ஐந்து பொற்காசும், இன்னொருவனுக்கு இரண்டு பொற்காசும், வேறொருவனுக்கு ஒரு பொற்காசும் கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடியே கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான். ஐந்து பொற்காசைப் பெற்றவன் உடனேபோய், இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதிக்க அதை முதலீடு செய்தான். அவ்வாறே இரண்டு பொற்காசைப் பெற்றவன், இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்தான். ஆனால் ஒரு பொற்காசைப் பெற்றவனோ புறப்பட்டுப்போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் காசைப் புதைத்து வைத்தான். “நீண்டகாலத்திற்குப்பின் அந்த வேலைக்காரர்களின் எஜமான் திரும்பிவந்து, அவர்களிடம் கணக்கு கொடுக்கும்படிக் கேட்டான். ஐந்து பொற்காசைப் பெற்றவன், இன்னும் ஐந்து பொற்காசைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான். “இரண்டு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே, நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான். “பின்பு ஒரு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் கடினமுள்ள மனிதர் என்பதை நான் அறிவேன். நீர் விதைக்காதிருந்தும் அவ்விடத்தில் அறுவடை செய்கிறவர் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாதிருந்தும் அவ்விடத்திலிருந்து அள்ளிச் சேர்க்கிறவர் என்றும் அறிவேன். எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய் உமது ஒரு காசை நிலத்திலே புதைத்து வைத்தேன். பாரும் உமக்குரிய காசு’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘கொடியவனே, சோம்பேறியான வேலைக்காரனே, நான் ஒரு இடத்தில் விதைக்காமல் அங்கு அறுவடை செய்கிறவன் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாமல் அங்கு அள்ளிச் சேர்க்கிறவன் என்றும் நீ அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் காசை வங்கியில் போட்டு வைத்திருக்கலாமே. அப்படி நீ செய்திருந்தால், நான் திரும்பி வரும்போது, அதை வட்டியுடன் திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான். “அவன், ‘அந்த ஒரு காசை அவனிடமிருந்து எடுத்து, அதைப் பத்து காசை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள். ஏனெனில் இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும், அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். அந்த பயனற்ற வேலைக்காரனை வெளியே தள்ளுங்கள். பற்கடிப்பும் அழுகையும் இருக்கும் இருளிலே தள்ளிப்போடுங்கள்’ என்றான். “மானிடமகனாகிய நான் எனது மகிமையில் வரும்போது, தூதர்கள் எல்லோரும் என்னுடன் வருவார்கள்; நான் பரலோக மகிமையுடன் எனது அரியணையில் அமர்ந்திருப்பேன். எல்லா ஜனத்தாரும் எனக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரிப்பதுபோல், மக்களையும் நான் ஒருவரிலிருந்து ஒருவரை வேறு பிரிப்பேன். நான் செம்மறியாடுகளை எனது வலதுபக்கத்தில் நிறுத்துவேன், வெள்ளாடுகளை எனது இடதுபக்கத்தில் நிறுத்துவேன். “அப்பொழுது நான் வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அரசை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், அப்பொழுது எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்; நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்பொழுது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார். “அப்பொழுது நீதிமான்கள் என்னிடம், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டிற்குள் அழைத்தோம், அல்லது உடை இல்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள். “அதற்கு நான், ‘உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளிப்பேன். “பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’ ” என்று சொல்வேன். ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குக் குடிக்கக்கொடுக்கவில்லை; நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியாயும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை, என்று சொல்வார். “அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவும் தாகமுள்ளவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை அந்நியராகவும் உடையில்லாதவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருப்பவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். “அதற்கு நான் அவர்களுக்கு, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யவில்லை’ என்பேன். “அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.”

மத்தேயு 25:1-46 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான். ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன். ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான். அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார்.

மத்தேயு 25:1-46 பரிசுத்த பைபிள் (TAERV)

“மணமகனுக்காக காத்திருந்த பத்துப் பெண்களுக்கு ஒப்பாக பரலோக இராஜ்யம் இருக்கும். அப்பெண்கள் தங்களுடன் விளக்குகளைக் கொண்டுவந்தனர். அவர்களில் ஐந்து பெண்கள் முட்டாள்கள்; ஐந்து பெண்கள் புத்திசாலிகள். ஐந்து முட்டாள் பெண்களும் தம்முடன் விளக்குகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவற்றுக்குத் தேவையான அதிக எண்ணெயைக் கொண்டு வரவில்லை. புத்திசாலிப் பெண்களோ விளக்குகளையும் தேவையான அதிக எண்ணெயை ஜாடிகளிலும் கொண்டு வந்திருந்தனர். மணமகன் வர நேரமானதால் அப்பெண்கள் களைப்பு மிகுதியால் தூங்க ஆரம்பித்தனர். “நள்ளிரவில் யாரோ, ‘மணமகன் வந்தாயிற்று! வந்து மணமகனை சந்தியுங்கள்!’ என்று அறிவித்தார்கள். “பின் பெண்கள் அனைவரும் விழித்தெழுந்தார்கள். தம் விளக்குகளைத் தயார் செய்தார்கள். முட்டாள் பெண்கள் புத்திசாலிப் பெண்களிடம் ‘எங்களிடம் விளக்குகளிலிருந்த எண்ணெய் தீர்ந்துவிட்டது. உங்களிடமுள்ள எண்ணெயிலிருந்து சிறிது கொடுங்கள்’ என்று கேட்டார்கள். “அதற்கு புத்திசாலிப் பெண்கள், ‘இல்லை. எங்களிடமுள்ள எண்ணெய் எங்களுக்கே போதாது, எண்ணெய் விற்பவர்களிடம் சென்று உங்களுக்கு எண்ணெய் வாங்கி வாருங்கள்’ என்று பதிலளித்தார்கள். “ஆகவே, முட்டாள் பெண்கள் எண்ணெய் வாங்கச் சென்றார்கள். அவர்கள் வெளியில் சென்றிருந்தபொழுது மணமகன் வந்தான். தயாராக இருந்த பெண்கள் மணமகனுடன் விருந்துண்ண சென்றார்கள். உடனே, கதவு மூடப்பட்டு பூட்டப்பட்டது. “பின்னர், வெளியில் சென்ற பெண்கள் திரும்பினார்கள். அவர்கள், ‘ஐயா! ஐயா! கதவைத் திறந்து எங்களை உள்ளே விடுங்கள்’ என்றார்கள். “ஆனால் மணமகனோ, ‘உண்மையாகவே நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டான். “எனவே நீங்கள் எப்பொழுதும் தயாராக இருங்கள். மனித குமாரன் வரப்போகும் நாளோ நேரமோ உங்களுக்குத் தெரியாது. “பரலோக இராஜ்யம், தன் வீட்டை விட்டு வேறொரு இடத்திற்குப் பயணமான ஒருவனுக்கு ஒப்பாகும். புறப்பட்டுச் செல்வதற்கு முன் அவன் தனது மூன்று வேலைக்காரர்களுடன் பேசினான். தான் புறப்பட்டுச் சென்றபின் தனது உடமைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களுக்குச் சொன்னான். ஒவ்வொரு வேலைக்காரனும் எதைப் பார்த்துக் கொள்ள முடியுமென அவன் தீர்மானித்தான். அதற்கேற்ப ஒருவனிடம் ஐந்து பை நிறையப் பணமும் மற்றொருவனிடம் இரண்டு பை நிறையப் பணமும் மூன்றாவது வேலைக்காரனிடம் ஒரு பை நிறையப் பணமும் கொடுத்தான். பின் அவன் புறப்பட்டுப் போனான். ஐந்து பை பணம் பெற்றவன் விரைந்து அப்பணத்தை முதலீடு செய்தான். அது மேலும் ஐந்து பை பணத்தை ஈட்டித் தந்தது. அதே போல இரண்டு பை பணம் பெற்றவனுக்கும் நடந்தது. அவன் தான் பெற்ற இரண்டு பை பணம் முதலிட்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டினான். ஆனால், ஒரு பை பணம் பெற்றவனோ நிலத்தில் ஒரு குழி தோண்டி தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான். “நீண்ட காலம் கழித்து எஜமானன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். தன் பணத்தை என்ன செய்தார்கள் எனத் தன் மூன்று வேலைக்காரர்களிடமும் கேட்டான். ஐந்து பை பணம் பெற்ற வேலைக்காரன் மேலும் ஐந்து பை பணத்தைக் கொண்டு வந்து தன் எஜமானிடம் சொன்னான், ‘எஜமானே! நீர் என்னை நம்பி ஐந்து பை பணம் தந்தீர்கள். ஆகவே, நான் அதை முதலிட்டு மேலும் ஐந்து பை பணம் ஈட்டியுள்ளேன்!’ என்றான். “அதற்கு எஜமானன், ‘நீ செய்தது சரி. நம்பிக்கையுள்ள நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிது பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய், மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்குகொள்!’ என்றான். “பின்னர் இரண்டு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் என்னிடம் இரண்டு பை பணம் தந்தீர்கள். நான் அதைக்கொண்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டியுள்ளேன்’ என்றான். “அவனுக்கு எஜமான், ‘நீ செய்தது சரி. நீ நம்பிக்கைக்கு உரிய நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிய பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய். ஆகவே, மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்!’ என்றான். “பின் ஒரு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீர் மிகவும் கடினமானவர் என்பது எனக்குத் தெரியும். விதைக்காமலேயே அறுவடை செய்கிறவர் நீர். செடி நடவாமலேயே தானியங்களை சேர்க்கிறவர் நீர். எனவே, நான் பயம்கொண்டேன். நீர் தந்த பணத்தை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். இதோ நீங்கள் தந்த ஒரு பை பணம்’ என்றான். “எஜமான் அவனை நோக்கி, ‘நீ ஒரு மோசமான சோம்பேறி வேலைக்காரன். நான் விதைக்காமலேயே அறுவடை செய்வதாகவும்; நடாமலேயே தானியங்களை சேகரிப்பதாகவும் கூறுகிறாய். எனவே நீ என் பணத்தை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நான் திரும்பி வரும்பொழுது, என் பணமும் எனக்குக் கிடைத்திருக்கும். அதற்கான வட்டியும் கிடைத்திருக்கும்’ என்றான். “ஆகவே, எஜமானன், தன் மற்ற வேலைக்காரர்களைப் பார்த்து, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து அந்த ஒரு பை பணத்தை வாங்கி அதை பத்து பை பணம் வைத்திருப்பவனிடம் கொடுங்கள். தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்துகிற ஒவ்வொருவனும் மேலும் அதிகம் பெறுவான். அவனுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகக் கிடைக்கும். ஆனால் தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்தாதவனிடமிருந்து அனைத்தும் பறிக்கப்படும்.’ என்றான். பிறகு அந்த எஜமானன், ‘பயனற்ற அந்த வேலைக்காரனைத் தூக்கி வெளியே இருளில் எறியுங்கள். அவ்விடத்தில் மக்கள் கூக்குரலிட்டு பற்களைக் கடித்துக் கொண்டு வேதனையால் அழுது கொண்டிருப்பார்கள்’ என்றான். “மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். ராஜாவாகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார். உலகின் எல்லா மக்களும் மனித குமாரன் முன்னிலையில் ஒன்று திரள்வார்கள். மனித குமாரன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார். ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பிரிப்பதைப் போல அவர் பிரிப்பார். மனித குமாரன் செம்மறியாடுகளை (நல்லவர்களை) வலது பக்கமும், வெள்ளாடுகளை (தீயவர்களை) இடது பக்கமும் நிறுத்துவார். “பின் ராஜாவானவர் தன் வலது பக்கமுள்ள நல்லவர்களிடம், ‘வாருங்கள். என் பிதா உங்களுக்குப் பெரும் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யத்தை அடையுங்கள். உலகம் தோன்றியது முதலே அந்த இராஜ்யம் உங்களுக்காகத் தயாராக உள்ளது. நீங்கள் அந்த இராஜ்யத்தை அடையலாம். ஏனென்றால் நான் பசித்திருந்தபொழுது நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள். எனக்குத் தாகமேற்பட்டபோது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்த பொழுது, என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள். நான் ஆடையின்றி இருந்தபோது, நீங்கள் உடுக்க ஆடை அளித்தீர்கள். நான் நோயுற்றபோது, என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நான் சிறைப்பட்டபோது நீங்கள் என்னைக் காண வந்தீர்கள்’ என்று சொன்னார். “அதற்கு நல்லவர்கள் பதில் சொல்வார்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசித்திருந்ததைக் கண்டு நாங்கள் உமக்கு உணவளித்தோம்? எப்பொழுது உங்களுக்குத் தாகமேற்பட்டு நாங்கள் தண்ணீர் தந்தோம்? எப்பொழுது நீர் வீட்டைவிட்டு வெளியேறி தனித்திருந்ததைக் கண்டு நாங்கள் உம்மை எங்கள் வீட்டிற்கழைத்தோம்? எப்போது நீர் ஆடையின்றி இருக்கக் கண்டு நாங்கள் உம்மை உடுத்துக்கொள்ள ஏதேனும் கொடுத்தோம்? எப்பொழுது நாங்கள் உம்மை நோயுற்றோ சிறையிலோ இருக்க கண்டோம்?’ என்பார்கள். “பின்னர் மன்னவர், ‘உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இங்குள்ள என் மக்களில் மிகவும் சாதாரணமான யாருக்கேனும் நீங்கள் ஒன்றைச் செய்திருந்தால் நீங்கள் அதை எனக்கே செய்ததாகும்’ என்று கூறினார். “பின் ராஜா தன் இடது பக்கமுள்ள தீயவர்களைப் பார்த்து, ‘என்னைவிட்டு விலகுங்கள். நீங்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தேவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டார். என்றென்றும் எரிகிற அக்கினியில் விழுங்கள். பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்டது, அந்த அக்கினி. நீங்கள் அதிலே சேரவேண்டும். ஏனென்றால், நான் பசித்திருந்தபொழுது நீங்கள் புசிக்க எதுவும் தரவில்லை. நான் தாகமாயிருந்தபொழுது, நீங்கள் குடிக்க எதுவும் கொடுக்கவில்லை. நான் வீட்டிலிருந்து தூரமாய் தனித்திருந்தபொழுது, நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கழைக்கவில்லை. நான் ஆடையின்றி இருந்தபொழுது, நீங்கள் உடுக்கத் துணியேதும் தரவில்லை. நான் நோயுற்றபொழுதும் சிறையிலிருந்தபொழுதும் நீங்கள் என்னைக் கவனித்து கொள்ளவில்லை’ என்று கூறுவார். “அதற்கு அத்தீயவர்கள், ‘ஆண்டவரே எப்பொழுது நீர் பசித்தும் தாகத்துடனுமிருந்ததை நாங்கள் கண்டோம்? எப்பொழுது நீர் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்ததைக் கண்டோம்? அல்லது எப்பொழுது உம்மை ஆடையின்றியோ நோயுற்றோ அல்லது சிறைப்பட்டோ கண்டோம்? எப்பொழுது இவைகளையெல்லாம் கண்டு உமக்கு உதவாமல் போனோம்?’ என்பார்கள். “அப்போது ராஜா, ‘நான் உண்மையைச் சொல்லுகிறேன், இங்குள்ளவர்களில் சாதாரணமான யாருக்கேனும் எதையேனும் செய்ய நீங்கள் மறுத்தால், நீங்கள் எனக்கு மறுத்ததற்கு சமமாகும்!’ என்பார். “பிறகு அத்தீயவர்கள் விலகிச் செல்வார்கள். அவர்களுக்கு நித்தியமான தண்டனை கிடைக்கும். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்.”