மத்தேயு 24:45-51

மத்தேயு 24:45-51 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“அப்படியானால் உண்மையும் ஞானமும் உள்ள வேலைக்காரன் யார்? அவனே தனது வீட்டில் உள்ள வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைக் கொடுக்கும்படி, எஜமான் பொறுப்பாக வைத்த வேலைக்காரன். தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவன் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும், அவனையே பொறுப்பாக வைப்பான். ஆனால் அந்த வேலைக்காரன் கொடியவனாய் இருந்து, ‘எனது எஜமான் நீண்ட காலமாய் தொலைவில் இருக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தனது உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரருடன் சேர்ந்து சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால், அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, வேஷக்காரருக்குரிய இடத்தில் தள்ளிவிடுவான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்.”

மத்தேயு 24:45-51 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால், அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

மத்தேயு 24:45-51 பரிசுத்த பைபிள் (TAERV)

“புத்தியுள்ள நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்? தன் மற்ற வேலைக்காரர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும் வேலைக்காரனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அவ்வேலைக்காரன் யார்? அவ்வேலைக்காரன் எஜமானன் வரும் நேரத்தில் தன் வேலையை சரியாகச் செய்கிறதைக் கண்டால் அவ்வேலைக்காரன் மகிழ்ச்சியடைகிறான். நான் உண்மையைச் சொல்கிறேன். தனக்குரிய எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் அந்த வேலைக்காரன் வசம் ஒப்படைப்பான். “ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும்? உடன் வேலைக்காரர்களையெல்லாம் அடித்து உதைத்து எல்லா உணவையும் உண்டுவிட்டு தன்னைப் போன்றவர்களுடன் உண்டு குடிக்க முனைவான். அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான். பின்னர் அவ்வேலைக்காரனைத் தண்டிப்பான். மாயமானவர்களின் இடத்திற்கு அவனை அனுப்பி வைப்பான். அங்கே உள்ளவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வேதனையினால் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.

மத்தேயு 24:45-51 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன்வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.