மத்தேயு 23:24-33
மத்தேயு 23:24-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் கொசுவை வடிகட்டி எடுக்கிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்குகிறீர்கள். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, உணவு பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ, நீங்கள் உங்கள் கொள்ளையினாலும் சுய ஆசைகளினாலும் நிரம்பியிருக்கிறீர்கள். குருடான பரிசேயரே! முதலில் உணவு பாத்திரங்களின் உட்புறத்தைச் சுத்தம் செய்யுங்கள். அப்பொழுது அவற்றின் வெளிப்புறமும் சுத்தமாயிருக்கும். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருக்கிறீர்கள், அவை வெளியே அழகாகக் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் உட்புறமோ இறந்தவர்களின் எலும்புகளினாலும், அசுத்தமான எல்லாவற்றினாலும் நிறைந்திருக்கின்றன. அதுபோலவே, வெளித்தோற்றத்திற்கு மனிதர் பார்வையில் நீங்கள் நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள். ஆனால் உள்ளத்திலோ கபடத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். “மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, வேஷக்காரர்களாகிய உங்களுக்கு ஐயோ! நீங்கள் இறைவாக்கினர்களுக்காக, கல்லறைகளைக் கட்டி நீதிமான்களின் நினைவுச் சின்னங்களை அலங்கரிக்கிறீர்கள். ‘எங்கள் முற்பிதாக்களின் காலத்தில் நாங்கள் வாழ்ந்திருந்தால், இறைவாக்கினரின் இரத்தத்தைச் சிந்துவதற்கு, நாங்கள் அவர்களுடன் பங்காளிகளாய் இருந்திருக்கமாட்டோம்’ என்றும் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் இறைவாக்கினரைக் கொலைசெய்தவர்களின் தலைமுறையினர் என்பதற்கு நீங்களே சாட்சியாயிருக்கிறீர்கள். ஆகவே, நீங்களும் உங்கள் முற்பிதாக்கள் தொடங்கிய பாவத்தைச் செய்து முடியுங்கள். “பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்?
மத்தேயு 23:24-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து: எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள். சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?
மத்தேயு 23:24-33 பரிசுத்த பைபிள் (TAERV)
நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள். “வேதபாரகர்களே! பரிசேயர்களே! நீங்கள் மாயமானவர்கள். உங்கள் கோப்பைகளையும் பாத்திரங்களையும் வெளிப்புறம் நன்கு கழுவுகிறீர்கள். (சுத்தம் செய்கிறீர்கள்) ஆனால் அவற்றின் உள்ளே நீங்கள் மற்றவர்களை ஏமாற்றி உங்கள் விருப்பத்தின்படி சேர்த்த பொருட்களால் நிரம்பியுள்ளது. பரிசேயர்களே, நீங்கள் குருடர்கள். முதலில் கோப்பையின் உள்ளே சுத்தம் செய்யுங்கள், பின், கோப்பையின் வெளிப்புறம் உண்மையிலேயே சுத்தமாகும். “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போன்றவர்கள். அக்கல்லறைகளின் வெளிப்புறம் நன்றாக இருக்கிறது. ஆனால், உள்ளே முழுவதும், இறந்தவர்களின் எலும்புகளும், அசுத்தங்கள் பலவும் இருக்கின்றன. அதே போலத்தான் நீங்களும், உங்களைக் காண்கிறவர்கள் உங்களை நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் (முழுக்கவும்) மாயமும் தீமையும் நிறைந்தவர்கள். “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மிகவும் மாயமானவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். நல்லவர்களின் கல்லறைகளுக்கு பெருமை சேர்க்கிறீர்கள். மேலும் நீங்கள், ‘நாங்கள் எங்கள் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், இத்தீர்க்கதரிசிகளைக் கொல்ல அவர்களுக்குத் துணை போயிருக்க மாட்டோம்’ என்று கூறுகிறீர்கள். அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள். உங்கள் முன்னோர்கள் தொடங்கி வைத்த பாவத்தை நீங்கள் முடித்து வைப்பீர்கள். “நீங்கள் பாம்புகள். கொடிய விஷம் கொண்ட பாம்புக் கூட்டத்தில் தோன்றியவர்கள் நீங்கள்! தேவனிடமிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு நரகத்திற்குச் செல்வீர்கள்.
மத்தேயு 23:24-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள். நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள். சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?