மத்தேயு 22:23-33

மத்தேயு 22:23-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதே நாளில் உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள். “போதகரே, ‘ஒருவன் பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் இறந்தவனுடைய மனைவியைத் திருமணம் செய்து, இறந்தவனுக்காகப் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்’ என்று மோசே எங்களுக்குச் சொல்லியிருக்கிறார். எங்கள் மத்தியில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் திருமணம் செய்து, பின் இறந்துபோனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவன் தனது மனைவியைத் தனது சகோதரனுக்கு விட்டுப்போனான். அப்படியே இரண்டாம், மூன்றாம் சகோதரருக்கும் முறையே ஏழாவது சகோதரன்வரை எல்லோருக்கும் அவள் மனைவியானாள். கடைசியாக அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் வேதவசனங்களையும் இறைவனுடைய வல்லமையையும் அறியவில்லை. அதனால்தான் நீங்கள் தவறான எண்ணம் கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள். இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘நானே ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார். மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து வியப்படைந்தார்கள்.

மத்தேயு 22:23-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து: போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள். எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள். ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்; மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார். மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

மத்தேயு 22:23-33 பரிசுத்த பைபிள் (TAERV)

அதே நாளில் சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். (யாரும் மரணத்திலிந்து உயிர்த்தெழ முடியாது என்று நம்புகிறவர்கள் சதுசேயர்கள்) சதுசேயர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்டனர். அவர்கள், “போதகரே, திருமணமான ஒருவன் குழந்தைகள் இல்லாமல் இறந்துவிட்டால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணக்கவேண்டுமென மோசே நமக்குக் கூறியுள்ளார். அப்படியெனில், அவர்கள் இறந்த சகோதரனுக்குக் குழந்தை பெறுவார்கள். எங்களில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதலாமவன் மணம் செய்து கொண்டான். ஆனால் அவன் குழந்தைகள் இல்லாமலேயே இறந்துவிட்டான். அவனது சகோதரன் அப்பெண்ணை மணந்து கொண்டான். பின், இரண்டாவது சகோதரனும் இறந்துவிட்டான். அதே போல மூன்றாவது சகோதரனுக்கும் மற்ற சகோதரர்கள் அனைவருக்கும் நடந்தது. இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள். ஏழு பேர் அவளை மணந்தார்கள். எனவே, மரணத்திலிருந்து அவர்கள் உயிர்த்தெழும்பொழுது அவள் யாருடைய மனைவியாக இருப்பாள்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறது என்பது உங்களுக்குத் தெரியாததால் உங்களுக்குப் புரியவில்லை. மேலும் தேவனின் வல்லமையைக்குறித்து உங்களுக்குத் தெரியவில்லை. மனிதர்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்பொழுது, அவர்களுக்குத் திருமணங்கள் நடக்கமாட்டா. உயிர்த்தெழும் அனைவரும் பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களுக்கு ஒப்பாவார்கள். மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதைக் குறித்து தேவன் என்ன சொல்லியுள்ளார் என்பதைப் படித்திருக்கிறீர்களல்லவா? தேவன், ‘ஆபிரகாமின் தேவன் நானே, ஈசாக்கின் தேவன் நானே, யாக்கோபின் தேவன் நானே’ அவர்களின் தேவன் என்று தேவன் தம்மைப்பற்றி கூறினார். அவர் இறந்தவர்களின் தேவன் அல்ல. அவர் வாழ்கிறவர்களின் தேவன்” என்றார். அதைக் கேட்ட அனைவரும் இயேசுவின் போதனையைக் கண்டு வியந்தனர்.

மத்தேயு 22:23-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையதினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்? இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார். ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.